கடாபியை போன்று வீதியில் இழுத்துச்சென்று நாட்டுத் தலைவரை பழிவாங்க இலங்கை மக்கள் அனுமதிக்க மாட்டார்கள் : ஜனாதிபதி

                                                     
லிபியாவின் தலைவர் கடாபியை போன்று வீதியில் இழுத்து சென்று நாட்டு தலைவரை பழிவாங்குவதற்கு இந்த  நாட்டு மக்கள் ஒரு போதும் இடமளிக்க மாட்டார்கள் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று  கூறினார்

நேற்று  மாலை சனிக்கிழமை மாலை கண்டி போகம்பறை மைதானத்தில் இடம் பெற்ற 'ஒன்றிணைந்த நாடு' என்ற பொதுக்கூட்டத் தொடரின் முதலாவது கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

அங்கு மேலும் உரையாற்றிய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ,

"ஏகாகிபத்தியவாதிகள் பல ஆயிரக்கணக்கான வருடங்களுக்கு முன்னிருந்தே எமது நாட்டை கைப்பற்ற முயற்சித்தனர். ஒல்லாந்தர், போர்த்துகேயர், ஆங்;கிலேயர் என பலர் பல முறை முயற்சி செய்த போதும் அவர்களால் எம் மத்தியில் ஒற்றுமை இருக்கும் வரைக்கும் ஒன்றும் செய்ய முடியவில்லை. ஆனாலும் நாட்டின் சில பிரதானிகள் அன்றைய அரசருக்கு எதிராக ஆங்கிலேயரிடம் நாட்டை காட்டிக் கொடுத்ததன் காரணமாகவே ஆங்கிலேயரால்  எம்மை ஆள முடிந்தது.
ஏகாதிபத்தியவாதத்திற்கும் பிரிவினைவாதத்திற்கும் எதிராகவே இன்று இங்கு பல்லாயிரக்கனக்கான மக்கள் ஒன்று கூடியுள்ளீர்கள்.

அரசசார்பற்ற நிறுவனம் என்று கூறிக் கொள்ளும் ஒரு சில அமைப்புகளும்  கனவு காணும் சில அரசியல் கட்சிகளும் நாட்டுக்கு எதிராக செயற்படுகின்றன. அவர்களுக்கு நான் கூற விரும்புவது, நாட்டின் அதிகாரத்தை கைப்பற்ற முன் கட்சியின் அதிகாரத்தை கைப்பற்றுங்கள், அதற்கு பின் நாட்டை பற்றி சிந்திக்கலாம் என்பதாகும். இவர்களது பொய்ப் பிரச்சாரங்களுக்கு ஏமாறாமல் நாட்டின் பாதுகாப்புக்கு அனைவரும் ஒன்று சேர வேண்டும்.

இந்த நாட்டு மக்களுக்கு தேவையான வளமான வாழ்வையும் பொருளாதார ஸ்திர நிலையையும் ஏற்படுத்த அனைவரும் ஒன்று சேருமாறு வேண்டுகின்றேன்" என்றார்.

 வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் இங்கு உரையாற்றுகையில்,

"ஜெனீவா தீர்மானத்தால் நாட்டுக்கு எதுவும் நடக்க போவதில்லை. ஜெனீவா தீர்மானம் வேறு, பொருளாதார தடை வேறு.  நல்லிணக்க ஆணைக்குழுவான எமது ஜனாதிபதி நியமித்த ஒரு குழுவாகும். இது சர்வதேச குழு அல்ல. அக்குழுவின் சிபாரிசுகளை அமுல்படுத்த கோரியே சர்வதேசம்  கூறுகிறது. அதனை அரசாங்கம் கட்டம் கட்டமாக நிறைவேற்றும்" என்றும் கூறினார்.

இக் கூட்டத்தில் மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கனாயக்க, அமைச்சர்களான மைத்திரிபால சிறிசேன, விமல் வீரவன்ச, மஹிந்தானந்த அளுத்கமகே, டியூ குனசேகர, தினேஷ் குனவர்தன, மாகாண அமைச்சர் அனுஷியா சிவராசா உட்பட பலர்  உரையாற்றினர்.




Share this post :
 
Support : Creating Website | Team Lanka Now | Intelligent
Copyright © 2011. Lanka Now - All Rights Reserved
Template Created by Creating Website Published by Intelligent
Proudly powered by Team lanka Now