டிராவிட்டின்
வழியை பின்பற்றுவதாலேயே தன்னால் வெற்றி பெற முடிவதாக ஐ.பி.எல் தொடரில்
அதிரடியாக விளையாடி தொடர்ந்த ஆரஞ்சு தொப்பியை தன் வசம் வைத்துள்ள ராஜஸ்தான்
அணியின் ரகானே தெரிவித்துள்ளார்.
ஐந்தாவது ஐ.பி.எல் டி20 கிரிக்கெட் தொடரில் ராகுல் டிராவிட் தலைமையிலான ராஜஸ்தான் அணி தொடர்ந்து சிறப்பாக விளையாடி வருகிறது.
இந்த தொடரில் 6 போட்டிகளில் பங்கேற்று 4 போட்டிகளை வென்று 8 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது.
ராஜஸ்தான் அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாயிருப்பவர் அஜின்கியா ரகானே. இவர், தொடர்ந்து அதிரடியாக விளையாடி வருகிறார்
கிங்ஸ்
லெவன் பஞ்சாப் அணிக்கெதிரான முதல் போட்டியில் அதிரடியை வெளிப்படுத்தி 98
ஓட்டங்களை எடுத்தார். அதிக ஓட்டங்களை எடுத்ததால் ஆரஞ்சு தொப்பியை பெற்றார்.
அதன்
பின்பு கடந்த ஞாயிற்றுக் கிழமை பெங்களுர் அணிக்கெதிரான போட்டியில் ஒரே
ஓவரில் 6 பவுண்டரிகள் அடித்ததுடன், சதமும் அடித்து வெற்றிக்கு வழி
வகுத்தார். இதனால் தற்போது வரை ஆரஞ்சு தொப்பியை தன் கைவசம் வைத்துள்ளார்.
அஜிங்கியா
ரகானே மற்றும் பிராட் ஹாட்ஜ் ஆகியோரின் அபார ஆட்டத்தால் நேற்றைய
போட்டியிலும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி நல்லதொரு வெற்றியைப் பெற்றது.
டிராவிட் அணியில் அவரை போலவே அமைதியான சுபாவம் கொண்டவராகவும், அதிரடி ஆட்டக்காரராகவும் ரகானே உள்ளார்.
இதுகுறித்து
ரகானே கூறுகையில், பலர் என்னிடம் டிராவிட் போல அதிரடியாக விளையாடுவதாக
கூறுகின்றனர். நானும் ஏற்றுக்கொள்கிறேன் காரணம் எனது சுபாவம் அமைதியானது,
டிராவிட் வழியை பின்பற்றியே விளையாடி வருகிறேன் என்றார்.