தம்புள்ளை மஸ்ஜித் விவகாரம்; கொழும்பில் பாரிய ஆர்ப்பாட்ட பேரணி! ஜம்மியத்துல் உலமாவுக்குள் பிளவு; புதிய உலமா சபை உதயம்!

தம்புள்ளை ஜும்ஆ மஸ்ஜித் விவகாரம் தொடர்பில் அகில இலங்கை ஜம்மியத்துல் உலமாவின் வேண்டுகோளின் பேரில் இன்று நாடு முழுவதும் அனைத்து ஜும்ஆ பள்ளிவாசல் முற்றத்திலும் விசேட துஆப் பிரார்த்தனை இடம்பெற்ற அதேவேளை கொழும்பு தெவட்டகஹ ஜும்ஆப் பள்ளிவாசலுக்கு முன்னால் பாரிய ஆர்ப்பாட்டமொன்று இடம்பெற்றதுடன் கண்டனப் பேரணி ஒன்றும் இடம்பெறுகிறது.

விசேட துஆப் பிரார்த்தனையைத் தொடர்ந்து நடைபெற்ற ஆர்ப்பாட்டம் மற்றும் பேரணியில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர். இதில் அரசியல் பிரமுகர்களான மனோ கணேசன், முஜிபுர் ரஹ்மான், விக்கிரமபாகு கருணாரட்ன, சிறிதுங்க உட்பட பல பிரமுகர்களும் பங்கேற்றனர்.

ஆர்ப்பாட்டம் எதுவும் நடத்தப்படக் கூடாது என்று அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா அறிவித்திருந்த நிலையில் மௌலவி மிப்ளால் தலைமையில் அதிலிருந்து ஒரு குழுவினர் பிரிந்து சென்று ஸ்ரீலங்கா ஜம்மியத்துல் உலமா எனும் பெயரில் புதிய உலமா சபையை உருவாக்கி, அவர்களும் இந்த ஆர்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.

இந்த ஆர்ப்பாட்ட பேரணியால் அப்பகுதியில் பாரிய வாகன நெரிசல் காணப்படுவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அறிவித்துள்ளார். இதனால் வாகன சாரதிகள் மாற்று பாதைகளை பயன்படுத்துமாறு அவர் கேட்டுக் கொண்டுள்ளார். தம்புள்ளை மஸ்ஜித் விவகாரத்தில் அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா, அரசுக்கு சார்பாக செயற்படுவதாக மௌலவி மிப்ளால் தலைமையில் புதிதாக உருவாக்கப்பட்ட ஸ்ரீலங்கா ஜம்மியத்துல் உலமா குற்றம் சுமத்தியுள்ளது.

இதனாலேயே தாங்கள் அதிலிருந்து விலகி புதிய உலமா சபையை உருவாக்கியிருப்பதாகவும் இந்த உலமா சபை சமூக நலன் கருதி சுயாதீனமாக் செயற்படும் என்றும் தம்புள்ளை மஸ்ஜித் விவகாரத்தில் மிகவும் இறுக்கமாக இருந்து அதனைக் காப்பாற்றுவதற்கான அத்தனை நடவடிக்கைகளையும் மேற்கொள்வோம் என்றும் மௌலவி மிப்ளால் தெரிவித்துள்ளார்.
Share this post :
 
Support : Creating Website | Team Lanka Now | Intelligent
Copyright © 2011. Lanka Now - All Rights Reserved
Template Created by Creating Website Published by Intelligent
Proudly powered by Team lanka Now