இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரான சச்சின் சமீபத்தில் 100 சதங்கள் அடித்து சாதனை படைத்தார்.
அவருக்கு நாட்டின் உயர்ந்த விருதான பாரத ரத்னா வழங்க வேண்டுமென பல்வேறு தரப்பினரிடமிருந்து கோரிக்கைகள் வந்துக் கொண்டிருக்கின்றன.
இந்நிலையில் சச்சினை கவுரவிக்கும் வகையில் அவரை மாநிலங்களவையின் எம்.பி.யாக நியமனம் செய்ய மத்திய அரசு பரிந்துரை செய்துள்ளது.
இதற்கு
ஜனாதிபதி பிரதிபா பாட்டீலும் ஒப்புதல் அளித்துள்ளார். இதையடுத்து சச்சின்
விரைவில் நியமன எம்.பியாக பதவியேற்பார் என எதிர்பார்க்கப்படுகின்றது.
அரசியலில் அவர் கால்பதிக்க உள்ளதால் விரைவில் சர்வதேச கிரிக்கெட்
போட்டிகளில் இருந்து ஓய்வுபெற கூடும் என தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ராஜ்யசபாவில்
சச்சினுக்கு 100வது எண் இருக்கை ஒதுக்கப்படும் என்றும் தெரிகிறது. தற்போது
இந்த இருக்கை தொழிலதிபர் அசோக் கங்குலிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. சச்சினின்
சாதனையை குறிக்கும் வகையில் இந்த இடத்தை அவருக்கு விட்டுக்கொடுக்க அசோக்
கங்குலி முன்வந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
கிரிக்கெட்
வீரர்களான கீர்த்தி ஆசாத், சித்து, அசாருதீன், சேத்தன் சவுகான் மற்றும்
தாரா சிங் (குத்து சண்டை), திலீப் திர்க்கே (ஹாக்கி), நவீன் ஜிந்தால்
(துப்பாக்கி சுடுதல்), ஜோதிர் மோயி (தடகளம்), மாகாராஜா ஹர்னிசிங்
(துப்பாக்கி சுடுதல்), அஸ்லாம் சேர்கான் (ஹாக்கி), இந்தர்ஜித்சிங்
(துப்பாக்கி சுடுதல்) ஆகியோரும் எம்.பி. மற்றும் எம்.எல்.ஏ. பதவிகளை
வகித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.