தம்புள்ள பள்ளிவாசல் தாக்கப்பட்டதைக் கண்டித்து ஜெனிவா நகரில் பாரிய ஆர்ப்பாட்டத்திற்கு சர்வதேச இளைஞர் பாராளுமன்றம் ஏற்பாடு!

Muise_Wahabdeenதம்புள்ள பள்ளிவாசல் தாக்கப்பட்டதைக் கண்டித்தும் அதன் நிரந்தர இருப்பு மற்றும் பாதுகாப்பை வலியுறுத்தியும் எதிர்வரும் வெள்ளிக்கிழமை ஜெனிவா நகரில் பாரிய ஆர்ப்பாட்டமொன்றை நடத்துவதற்கு சர்வதேச இளைஞர் பாராளுமன்றம் ஏற்பாடுகளை மேற்கொண்டு வருவதாக அதன் பிரதித் தலைவர் அல்ஹாஜ் முயிஸ் வஹாப்தீன் மெட்ரோ மிரருக்குத் தெரிவித்தார்.
தம்புள்ள பள்ளிவாசல் தாக்கப்பட்ட விடயம் தொடர்பில் இலங்கை அரசாங்கம் எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் சிறுபான்மை முஸ்லிம் சமூகத்திற்கு அநீதிழைத்திருப்பதை சர்வதேசத்தின் கவனத்திற்கு கொண்டு வந்து அழுத்தம் கொடுக்கும் நோக்கிலேயே எம்து இளைஞர் பாராளுமன்றம் வேறு பல முக்கிய அமைப்புகளின் ஒத்துழைப்புடன் இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னின்று ஏற்பாடு செய்து வருகிறது என்று பிரதித் தலைவர் முயிஸ் வஹாப்தீன் ஜெனிவாவில் இருந்து மெட்ரோ மிரருக்குத் தெரிவித்தார்.

சர்வதேச இளைஞர் பாராளுமன்றத்தின் இந்த முயற்சிக்கு World Muslim foundation, Vital International, Islamic Relief organization,  Centre Islamic de Geneva, The Foundation Cultural Islamic, Association Islamic de Suisse - Geneva, Muslim Rights and Relief Foundation (MRRF)  உள்ளிட்ட பல சர்வதேச நிறுவனங்கள் முழுமையான ஒத்துழைப்பு வழங்க முன்வந்திருப்பதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

எதிர்வரும் வெள்ளிக்கிழமை ஜெனிவா நகரில் இடம்பெறவுள்ள பாரிய ஆர்ப்பாட்டத்தில் ஜெனிவாவில் இருக்கின்ற வெளிநாடுகளைச் சேர்ந்த அனைத்து முஸ்லிம்களும் பங்குபற்றுவர் என்றும் சர்வதேச இளைஞர் பாராளுமன்றத்தின் பிரதித் தலைவர் முயிஸ் வஹாப்தீன் மெட்ரோ மிரருக்குத் தெரிவித்தார்.

இவ்வார்ப்பாட்டத்தைத் தொடர்ந்து ஜெனிவா நகரில் அமைந்துள்ள ஐ.நா.மனித உரிமைகள் பேரவையின் தலைமைக் காரியாலயத்தில் மகஜர் ஒன்றும் கையளிக்கப்படும் என அவர் மேலும் குறிப்பிட்டார்.

ஜெனிவாவைத் தலைமையகமாகக் கொண்டு கடந்த பல வருடங்களாக இயங்கி வருகின்ற சர்வதேச இளைஞர் பாராளுமன்றத்தில் 36 நாடுகளைச் சேர்ந்த பல்லின இளைஞர்களும் அங்கம் வகிக்கின்றனர். இதன் ஊடாக இளைஞர்களுக்கு தலைமைத்துவப் பயிற்சி வழங்கி, அவர்களை வலுவூட்டும் செயற்பாடுகளை சர்வதேச இளைஞர் பாராளுமன்றம் சிறப்பாக முன்னெடுத்து வருவதுடன் உலக நாடுகளில் மனித உரிமைகள் பேணப்படுவது, நல்லாட்சி, கல்வி, சமூக பொருளாதார மேம்பாட்டு விடயங்களில் கூடிய கவனம் செலுத்தி வருகிறது எனவும் அதன் பிரதித் தலைவர் முயிஸ் வஹாப்தீன் மெட்ரோ மிரருக்கு விபரம் தெரிவித்தார்.

இலங்கை அரசாங்கம் உறுதியான தீர்மானம் ஒன்றை மேற்கொண்டு அதன் இருப்பையும் பாதுகாப்பையும் உத்தரவாதப்படுத்தா விட்டால் எதிர்வரும் நவம்பர் மாதம் ஜெனிவாவில் இடம்பெறவுள்ள ஐ.நா. மனித உரிமை பேரவை மாநாட்டில் அது தொடர்பான பிரேரணை ஒன்றை சமர்ப்பிப்பதற்கு நடவடிக்கை எடுக்கும் என்று ஜெனீவாவை தலைமையகமாக கொண்டு 36 நாடுகளில் குறிப்பாக இளைஞ்சர்களை வலுவூட்டும் சர்வதேச இளைஞர் பாராளுமன்றத்தின் பிரதித் தலைவர் முயிஸ் வஹாப்தீன் மெட்ரோ மிரருக்குத் தெரிவித்தார்.
Share this post :
 
Support : Creating Website | Team Lanka Now | Intelligent
Copyright © 2011. Lanka Now - All Rights Reserved
Template Created by Creating Website Published by Intelligent
Proudly powered by Team lanka Now