தனி ஈழம் கிடைக்க இந்திய அரசு தேவையான ஆதரவும் அழுத்தமும் தர வேண்டும் என திமுக தலைவர் கருணாநிதி கோரிக்கை விடுத்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள கேள்வி பதில் அறிக்கையில்,
´தனி ஈழம்´ வழங்குவதற்கு தமிழர்கள் மத்தியில் பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று எழுந்துள்ள கோரிக்கை வரவேற்கத்தக்கது.
ஐக்கிய நாடுகள் மன்றத்தின் தலையீட்டின் பேரில் இதைப் போல பொது வாக்கெடுப்பு நடத்தப்பட்டு ஒருசில நாடுகள் தனி நாடுகள் என்ற அங்கீகாரத்தைப் பெற்றிருக்கின்றன என தெரிவித்துள்ளார்.
அதன் அடிப்படையில் தமிழர்கள் மத்தியில் பொது வாக்கெடுப்பு நடத்தி, அந்த வாக்கெடுப்பு முடிவின் அடிப்படையில் ´தனி ஈழம்´ கிடைப்பதற்கு ஐக்கிய நாடுகள் மன்றம் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.
அதற்கு நமது இந்திய அரசு தேவையான ஆதரவும் அழுத்தமும் தர வேண்டும் என தன் கேள்வி பதில் அறிக்கையில் கலைஞர் குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்காவில் செயல்படும் ஒபாமாவுக்கான தமிழர்கள் என்ற அமைப்பு ஒன்று, தனி ஈழம் குறித்து வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்ற கோரிக்கை மனுவை அமெரிக்க அரசுக்கு அனுப்பி வைத்துள்ளது.
´தமிழ்ஸ் பார் ஒபாமா´ என்ற அந்த அமைப்பின் பிரதிநிதிகள், அமெரிக்க அமைச்சக துணை செயலாளர் ராபர்ட் ஓ பிளாக்கை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியதோடு மட்டுமல்லாமல், வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை அமெரிக்க வெளியுறவுச் செயலாளர் ஹிலாரி கிளிண்டனுக்கும் அனுப்பி வைத்துள்ளனர்.