பிரபாகரன் மீண்டும் வருவாராம்- மதுரையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன்!


தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் மீண்டும் வருவார், அவர் மீண்டு வருவார் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தமிழ்நாடு மதுரையில் இடம்பெற்ற கருத்தரங்கு ஒன்றில் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்தார்.

தமிழ்நாடு மதுரை சட்டத்தரணிகள் சங்கம், தமிழ் சட்டத்தரணிகள் கூட்டமைப்பு ஆகியன இணைந்து நேற்று (11.04.2012) நடத்திய கருத்தரங்கில் ஈழத்தமிழர்களின் இன்றைய நிலை என்ற தலைப்பில் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் உரையாற்றினார். இந்த கருத்தரங்கில் பேசிய சிறிதரனிடம் அக்கருத்தரங்கில் கலந்து கொண்டவர்கள் விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் இறந்து விட்டதாக கூறுகிறார்கள் அது உண்மையா என கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதிலளித்த நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் அது பொய் பிரசாரம், பிரபாகரன் உயிருடன்தான் பாதுகாப்பாக இருக்கிறார். அவர் மீண்டும் வருவார், மீண்டுவருவார் என தெரிவித்தார்.

முள்ளிவாய்க்கால் முழுவதும் பல ஆயிரக்கணக்கான தமிழர்களைக் கொன்று புதைத்துள்ளனர். இலங்கைக்கு வரும் இந்திய நாடாளுமன்ற குழு அங்கு சென்று பார்த்து ஆராய வேண்டும் எஎன சிறிதரன் கூறினார். இலங்கை தமிழர் விஷயத்தில் மனித உரிமை மீறப்பட்டுள்ளது. ஏராளமானோர் காணாமல் போய் உள்ளனர். பள்ளி சென்ற குழந்தைகள் வீடு திரும்பவில்லை. பள்ளி சென்ற குழந்தைகள் வீட்டுக்கு வந்து பார்த்தபோது பெற்றோர் இல்லை. இதுபோன்று பல கொடுமைகளை இலங்கை அரசு நடத்தி உள்ளது.

இலங்கையில் தமிழர்கள் வசித்த பகுதியில் இருந்த சிவன் கோவிலை இடித்து விட்டு புத்தர் கோவிலை கட்டி வருகிறார்கள். இலங்கை செட்டிகுளம் பகுதியில் 40 ஆயிரம் தமிழர்கள் இருக்கிறார்கள். முள்ளிவாய்க்கால் பகுதியில் தமிழர்களை மீண்டும் குடி அமர்த்த இலங்கை அரசு மறுத்து வருகிறது. கொல்லப்பட்ட பல ஆயிரக்கணக்கான தமிழர்களின் உடல்கள் அங்கு புதைக்கப்பட்டுள்ளது. ஆனால் அங்கு கன்னி வெடி இருப்பதாக கூறி குடியமர்த்த மறுத்து வருகிறார்கள். ஆனால் அங்கு எதுவும் கிடையாது.

இந்திய அரசு சார்பில் இலங்கைக்கு செல்ல உள்ள குழு இலங்கை அரசு, சிங்கள ராணுவம் கூட்டி செல்லும் இடங்களுக்கு மட்டும் செல்லக்கூடாது. கிளிநொச்சி, முள்ளிவாய்க்கால் பகுதிகளை முழுமையாக ஆய்வு செய்ய வேண்டும்.

ஐ.நா தீர்மானத்தை இலங்கை அரசு நிறைவேற்றும் என்பது கேள்விக்குறியான விஷயம்தான். இலங்கை அரசு அமைத்துள்ள நல்லிணக்க ஆணையம் அளித்த பரிந்துரையைதான் ஐ.நா தீர்மானமாக நிறைவேற்றி உள்ளது. இலங்கை தமிழர்கள் பிரச்சினைக்கு அரசியல் ரீதியாக தீர்வு காண வேண்டும்.

தமிழர்கள் வசிக்கும் பகுதிகளில் குவிக்கப்பட்டுள்ள ராணுவத்தினரை அப்புறப்படுத்த வேண்டும். இலங்கை அரசின் போர்க்குற்றம் குறித்து விரிவான விசாரணை நடத்த வேண்டும். ஐ.நா தீர்மானத்தை இந்தியா ஆதரித்து இருப்பதன் மூலம் இந்திய வெளியுறவு கொள்கையில் மாற்றம் தெரிகிறது என சிறிதரன் தெரிவித்தார்.
Share this post :
 
Support : Creating Website | Team Lanka Now | Intelligent
Copyright © 2011. Lanka Now - All Rights Reserved
Template Created by Creating Website Published by Intelligent
Proudly powered by Team lanka Now