வெள்ளை மாளிகையை விட்டு வீட்டுக்கு போக தயாராகுங்கள். ஒபாமாவுக்கு மிட் ரோம்னி அறிவுரை.


Get ready to go home said Mid Romni to Obama

"அமெரிக்க அதிபர் தேர்தலில் உங்களைத் தோற்கடித்துவிடுவேன்; வெள்ளை மாளிகையைவிட்டு உங்களுடைய சொந்த வீட்டுக்குப் போகத் தயாராகுங்கள்'' என்று பராக் ஒபாமாவுக்கு அறிவுரை கூறியிருக்கிறார் குடியரசுக் கட்சி சார்பில் அதிபர் தேர்தலில் வேட்பாளராகப் போட்டியிடப் போகிறவர் என்று கருதப்படும் மிட் ரோம்னி (65).

 ஏ.பி.சி. நிருபரிடம் மிட் ரோம்னி கூறியதாவது: "எங்களிடையே நிரம்பக் கருத்து வேறுபாடு இருக்கிறது. இன்னும் 4 ஆண்டுகள் பதவியில் இருக்கலாம் என்று கருதுகிறார் பராக் ஒபாமா. நானோ அவர் ஆண்டது போதும், அமெரிக்கா பின்தங்கியது போதும் என்று நினைக்கிறேன். நவம்பர் மாதம் நடைபெறவுள்ள அதிபர் தேர்தலில் அவர் தோற்பார், நான் வெற்றி பெறுவேன் என்று உறுதியாக நம்புகிறேன். அவருடைய கொள்கைகள் ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் பயன்படவில்லை. அமெரிக்க மக்களுக்கு எந்தவித நன்மையையும் தந்துவிடவில்லை. புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கவில்லை.

 வருமானத்தைப் பெருக்கவில்லை, அதே சமயம் அரசாங்கத்தின் கடன் பல மடங்காகப் பெருகியிருக்கிறது. அமெரிக்காவை தவறான திசையில் வழிநடத்திச் செல்கிறார்.

 சுதந்திரம், சமவாய்ப்பு ஆகிய கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டுதான் அமெரிக்கா இந்த உயர் நிலையை அடைந்தது. அந்த லட்சியங்களை நாம் மீண்டும் கடைப்பிடித்து முன்னேற்றம் அடைவோம். வெற்றி, தோல்வியை அடிப்படையாக வைத்தோ, வளமை, வறுமை ஆகியவற்றை வைத்தோ அமெரிக்காவை நாம் என்றுமே பிளவுபடுத்தியதில்லை. நாம் கடவுளின் கீழ் ஒரே நாடாகச் செயல்பட்டுக்கொண்டிருக்கிறோம். எனக்கும் ஒபாமாவுக்கும் இடையிலான அதிபர் தேர்தல் போட்டியில் நானே சிறந்த வேட்பாளர் என்று கருதுகிறேன்.

 தேர்தல் நேரத்தில் மக்களின் (வாக்காளர்களின்) கவனத்தைத் திசை திருப்ப ஒபாமா முயற்சி செய்யக்கூடும். அவருடைய தோல்விகள், அவர் சிக்கலாக்கிய பொருளாதாரப் பிரச்னைகள் ஆகியவற்றை மக்களுடைய கவனத்துக்கு வராமல் தடுக்க அவர் முயலக்கூடும். வெவ்வேறு பின்னணி, அனுபவம் உள்ள அமெரிக்கர்கள் ஒன்றாக இணைந்து நாட்டைக் காப்பாற்ற வேண்டிய நேரம் இது. வலுவான என்னுடைய பிரசாரத்தைத் தாங்க முடியாமல், அவர் என் மீது அபாண்டமாக ஏதேனும் பேசக்கூடும். அமெரிக்காவைக் காப்பாற்ற நல்ல தலைமை வேண்டும், அதை அவரால் தர முடியாது. மேலும் 4 ஆண்டுகள் ஆள அவர் நினைக்கிறார். கடந்த 4 ஆண்டுகளில் அவர் சாதித்தது ஒன்றுமில்லை என்பதை உணர்ந்து அவரை நிராகரிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்' என்றார் மிட் ரோம்னி.

 ரோம்னிக்கு ஆதரவு அதிகரிப்பு: தேசிய அளவில் வாக்காளர்களாகப் பதிவு செய்துள்ளவர்களிடையே நடத்திய கருத்துக் கணிப்பில் மிட் ரோம்னிக்கு ஆதரவாக 47% பேர்களும் ஒபாமாவுக்கு ஆதரவாக 45% பேர்களும் வாக்களித்துள்ளனர். இது ஏப்ரல் 11 முதல் 15 வரையில் 2,265 பேரிடம் நடத்திய வாக்கெடுப்பின் முடிவாகும்.

 மார்ச் 25, 26-ல் இதற்கு முன்னர் நடந்த வாக்கெடுப்பில் ஒபாமாவுக்கு ஆதரவாக 49% பேர்களும் ரோம்னிக்கு ஆதரவாக 45% பேர்களும் கருத்துத் தெரிவித்திருந்தனர்.

 ஒபாமாவுக்கு ஆதரவு குறைகிறது, ரோம்னிக்கு ஆதரவு கூடுகிறது என்பது இதிலிருந்து தெரிகிறது. இந்தத் தகவல் கிடைத்ததோ என்னவோ, ""வெள்ளை மாளிகையிலிருந்து வெளியேறத் தயாராகுங்கள்'' என்று ஒபாமாவுக்குக் கூறிவிட்டார் ரோம்னி.

 மனைவி ஆன்: ""இப்போது ரோம்னியின் நேரம்; ஒபாமா விலக வேண்டிய நேரம்'' என்று ரோம்னியின் மனைவி ஆன் குறிப்பிட்டுள்ளார்.
Share this post :
 
Support : Creating Website | Team Lanka Now | Intelligent
Copyright © 2011. Lanka Now - All Rights Reserved
Template Created by Creating Website Published by Intelligent
Proudly powered by Team lanka Now