நாட்டில் பொருளாதார சிக்கல் இல்லை எனக்கூறும் அரசாங்கம் நாட்டு மக்களுக்கு புதுவருட பரிசாக அதிக வரிச்சுமையை வழங்கியுள்ளதென மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் மக்கள் விடுதலை முன்னணியின் அரசியல் சபை விடுத்துள்ள அறிக்கையில்,
உடன் அமுலுக்கு வரும் வகையில் பொருட்கள் சிலவற்றின் வரிகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. எரிபொருள், பஸ், மின் கட்டண உயர்வால் துயரில் இருக்கும் மக்களுக்கு மீண்டும் வரிச்சுமை கொடுப்பது வீழ்ந்து கிடக்கும் மனிதனை மாட்டை விட்டு முட்டுதல் போன்ற செயலாகும்.
மது பாவனையில் இருந்து மக்களை பாதுகாக்கவே வரி அதிகரிக்கப்பட்டுள்ளதாகக் கூறி மக்களை ஏமாற்றி, அரசாங்கம் கோடிக்கணக்கில் லாபம் பெற முயற்சித்துள்ளது.
வாகன வரியை உயர்த்தி இந்தியாவிற்கு பாடம் புகட்டியுள்ளோம் எனக்கூறும் அரசாங்கம், கோதுமை மாவின் விலையை உயர்த்தி ஐரோப்பாவிற்கு பாடம் புகட்டியுள்ளோம் என்று கூறினாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை.
என அவ்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.