முல்லைத்தீவு சிங்களக் குடியேற்றம் திட்டமிட்டே அரங்கேற்றுகிறது அரசு : இன்னொரு முள்ளிவாய்க்கால் அவலம் - வினோ எம்.பி.

மீனவர்கள் என்ற போர்வையைப் பயன்படுத்தி இலங்கை அரசு, முல்லைத்தீவு மாவட்டத்தில் திட்டமிட்ட அடிப்படையில் சிங்களக் குடியேற்றங்களை அசுர வேகத்தில் அரங்கேற்றி வருகின்றது எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு குற்றஞ்சாட்டியுள்ளது.

தமிழ் மக்களைச் சொந்த இடங்களில் மீளக்குடியமர்த்துவதற்கு காலத்தை இழுத்தடிக்கும் அரசு, சிங்களக் குடியேற்றங்களை அரங்கேற்றி தமிழர் தாயகப் பகுதியையும் சிங்களமயப் படுத்துவதற்கு முயற்சிக்கின்றது என்றும் கூட்டமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

அரசின் இந்த நடவடிக்கைக்கு முட்டுக்கட்டை இடாவிட்டால் தமிழ் மக்கள் இன்னுமொரு முள்ளிவாய்க்கால் அவலத்தைச் சந்திக்க நேரிடும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட எம்.பி. வினோ நோதராதலிங்கம் தெரிவித்தார்.

யுத்தத்திற்குப் பின்னர் இலங்கை அரசு வடக்கு, கிழக்கு தமிழர் தாயகப் பூமியில் மிகவும் சூட்சுமமாகத் திட்டமிட்ட அடிப்படையில் சிங்களக் குடும்பங்களைக் குடியமர்த்தும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது.

அவ்வாறு குடியமர்த்தப்படும் குடும்பங்களுக்கு இராணுவம் முழுமையாக ஒத்துழைப்பை வழங்கிவருகின்றது என்றும், அந்தப் பிரதேசத்திலுள்ள மக்கள் இதனைத் தட்டிக்கேட்டால் படையினர் அச்சுறுத்தல் விடுக்கின்றனர் என்றும் தமிழ் மக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.

வடபகுதியில் படையினர் மனிதாபிமான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். அதனால் அங்கிருந்து அவர்களை வாபஸ்பெற முடியாது என அரசு திட்டவட்டமாகக் கூறினாலும் படையினர் அங்கு புத்தர் சிலைகளையும், சிங்களக் குடியேற்றங்களையும் விஸ்தரிக்கும் நடவடிக்கைகளிலேயே ஈடுபடுகின்றனர்.இதுவா மனிதாபிமானம் எனத் தமிழ் மக்கள் குமுறுகின்றனர்.
அதேவேளை, யாழ்ப்பாணத்திற்கு வியாபார நோக்கில் செல்லும் சிங்களவர்கள் அங்குள்ள நிலங்களை ஆக்கிரமித்துக்கொள்கின்றனர். அத்துடன், முல்லைப் பகுதிக்கு மீன்பிடிக்கச் செல்லும் தென்பகுதி மீனவர்கள் அங்கேயே கூடாரங்களை அமைத்துக் குடியேறுகின்றனர்.

இதனால் வடக்கு கரையோரப் பகுதிகள் சிங்களமயமாகும் அபாயமுள்ளன என தமிழ்த் தலைமைகள் குற்றஞ்சாட்டுகின்றன. ஆனால், அரசு நடவடிக்கையை விடுவதாக இல்லை.

எவரும் எங்கு வேண்டுமானாலும் வாழலாம். நாட்டில் எந்தவொரு சதுர அடியும் எவருக்கும் சொந்தமில்லை என்ற தோரணையில் அரசு குடியேற்றங்களை அரங்கேற்றுகின்றது. இதற்கு இராணுவமும் பக்கபலமாக இருந்து வருகின்றது என ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

இலங்கை அரசின் இவ்வாறான நடவடிக்கை தொடர்பில் தமிழ் அரசியல் பிரமுகர்கள் பல தடவைகள் சர்வதேசத்திடம் எடுத்துரைத்துள்ளனர். சர்வதேச சமூகமும் அரசை எச்சரித்தது. ஆனாலும் இவ்வாறான நடவடிக்கைகளை இலங்கை அரசு கைவிடுவதாகத் தெரியவில்லை என பலதரப்பினரும் சுட்டிக்காட்டுகின்றனர்.

இது இவ்வாறிருக்க, முல்லைத்தீவு கொக்கிளாய் பிரதேசத்தில் அண்மைக்காலமாக அதி தீவிரமாக சிங்களக் குடியேற்றங்கள் நடைபெறு கின்றன. மீனவர்கள் என்ற போர்வையைப் பயன்படுத்தியே குடியேற்றங்கள் அரங்கேற்றப்படுகின்றன.

இந்நிலையில், முல்லையில் அரங்கேறும் சிங்களக் குடியேற்றங்கள் குறித்து “சுடர் ஒளி’யிடம் கருத்து வெளியிட்ட வினோ எம்.பி. கூறியவை வருமாறு:
தெற்கிலிருந்து மீனவர்கள் இங்கு தொழிலுக்காக வருகின்றனர். அவர்களைக் கரையோரப் பிரதேசங்களில் குடியமர்த்தும் நடவடிக்கைகள் மும்முரமாக இடம்பெற்று வருகின்றன என பிரதேச மக்கள் எம்மிடம் தெரிவிக்கின்றனர்.
மீனவர்கள் என்ற போர்வையைப் பயன்படுத்தியே எமது பிரதேசங்களில் சிங்கள மக்கள் அத்துமீறி குடியமர்த்தப்படுகின்றனர்.

இதற்கு முன்னரும் பல குடும்பங்கள் இவ்வாறு குடியமர்த்தப்பட்டுள்ளன. இப்பொழுதும் தொடர்கின்றன. எனவே, அரசின் இந்நடவடிக்கையைத் தொடரவிடக்கூடாது. நாம் இதுவிடயம் தொடர்பில் கூடி ஆராய்வோம்.

அரசின் அராஜக நடவடிக்கைகளுக்கு முட்டுக்கட்டை இடாவிட்டால் எமது சமூகம் இன்னுமொரு முள்ளிவாய்க்கால் அவலத்தைச் சந்திக்க நேரிடலாம். எமது மக்கள் இன்று முகாம்களில் சொல்லொணாத் துன்பங்களை அனுபவிக்கின்றனர். அவர்களைச் சொந்த இடங்களில் குடியமர்த்துவதற்கு நடவடிக்கை எடுக்காத அரசு, சிங்களக் குடியேற்றத்துக்கு முன்னுரிமை கொடுப்பது ஏன்? தமிழர் பிரதேசங்களை சிங்களமயமாக்குவதற்காகவே இந்தத் தாமதம் என்றார் வினோ எம்.பி.
Share this post :
 
Support : Creating Website | Team Lanka Now | Intelligent
Copyright © 2011. Lanka Now - All Rights Reserved
Template Created by Creating Website Published by Intelligent
Proudly powered by Team lanka Now