மெனிக்பாம் அகதிகளை சந்திக்க ஏற்பாடு செய்யும்படி இலங்கை வரும் இந்திய குழு வலியுறுத்தல்

மெனிக்பாம் அகதிகளை சந்திக்க ஏற்பாடு செய்யும்படி இலங்கை வரும் இந்திய குழு வலியுறுத்தல்இலங்கையில் இந்தியா உதவியுடன் நடக்கும் சீரமைப்பு பணிகள் மற்றும் வளர்ச்சித் திட்டங்களை பார்வையிடுவது முக்கியம் அல்ல. முகாம்களில் உள்ள ஈழத் தமிழர்களை சந்திப்பதே முக்கியம். அதற்காக வற்புறுத்தியுள்ளோம் என பா.ஜ.க. தலைவர் சுஷ்மா சுவராஜ் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் இறுதிக்கட்ட போர் நடந்தபோது, இலட்சக்கணக்கான அப்பாவி ஈழத் தமிழர்கள் கொல்லப்பட்டனர். போரின் போதும், போருக்கு பிறகும் ஈழத் தமிழர்களிடம் ஏராளமான மனித உரிமை மீறல்கள் நடந்தன. இதில் அவர்களது வாழ்வாதாரங்கள் முற்றிலும் அழிக்கப்பட்டன.

முகாம்களில் அடைக்கப்பட்ட ஈழத் தமிழர்கள் மிகுந்த அவதிக்குள்ளானார்கள். போர் முடிந்ததும் ஈழத்தமிழர்களுக்கு சிங்களர்களுக்கு இணையான உரிமைகள் பெற்றுத் தருவோம் என்று கூறிய மத்திய காங்கிரஸ் அரசு தற்போது மவுனமாக உள்ளது.

இந்தியா உள்பட பல நாடுகளிடம் உதவி பெறும் இலங்கை அரசு அதை தமிழர் பகுதியில் சிங்கள மயமாக்கலுக்கே பயன்படுத்தி வருகிறது. இது தொடர்பாக பல்வேறு குற்றச்சாட்டுக்கள் எழுந்ததால், இலங்கையில் நடந்து வரும் சீரமைப்புப் பணிகளை பார்வையிட அனைத்துக் கட்சி எம்.பி.க்கள் குழுவை அனுப்பி ஆய்வு செய்ய முடிவு செய்தது.

பாராளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் சுஷ்மா சுவராஜ் தலைமையில் 16 எம்.பி.க்கள் இந்த குழுவுக்காக தேர்வு செய்யப்பட்டனர்.

தமிழ்நாட்டில் இருந்து அ.தி. மு.க. சார்பில் ரபிபெர்னாட், தி.மு.க. சார்பில் இளங்கோவன், காங்கிரஸ் சார்பில் என்.எஸ்.வி.சித்தன், சுதர்சன நாச்சியப்பன், மாணிக்கம் தாகூர், கிருஷ்ணசாமி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு சார்பில் டி.கே.ரங்கராஜன் ஆகியோர் இடம் பெற்றிருந்தனர்.

இந்த நிலையில் எம்.பி.க்கள் குழு பயணம் வெறும் கண்துடைப்பு நாடகம் என்று புகார்கள் எழுந்தன. இதையடுத்து இலங்கை செல்லும் குழுவில் இருந்து அ.தி.மு.க. விலகியது. முதல் - அமைச்சர் ஜெயலலிதா இது தொடர்பாக வெளியிட்ட அறிக்கையில், இலங்கை ஜனாதிபதி ராஜபக்ஷ்வுடன் எம்.பி.க்கள் விருந்து சாப்பிட மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவருடன் எந்த விவாதத்துக்கும் ஏற்பாடு செய்யாததால் அ.தி.மு.க. குழுவில் இடம் பெறாது என்று கூறியிருந்தார்.

தற்போது தி.மு.க.வும் எம்.பி.க்கள் குழுவில் இருந்து விலகிவிட்டது. ஈழத் தமிழர்களுக்காக குரல் கொடுப்பதில் முதன்மையாக உள்ள தி.மு.க.வும், அ.தி.மு.க.வும் விலகிவிட்ட நிலையில், அந்த குழுவில் 14 எம்.பி.க்களே உள்ளனர்.

இவர்கள் இன்று மாலை டெல்லியில் இருந்து புறப்பட்டு இலங்கை பயணிக்கின்றனர். அவர்களிடம் நேற்று (15) மத்திய வெளியுறவுச் செயலாளர் ரஞ்சன் மத்தாய் பயணத் திட்டம் பற்றிய நிகழ்ச்சி நிரல்களை விளக்கி கூறினார்.

எம்.பி.க்கள் குழுவினர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ், பசில் ராஜபக்ஷ், ஜீ.எல்.பீரிஸ், ரணில் விக்கிரமசிங்க, பிள்ளையான் உள்பட சிலரை சந்தித்து பேசுவது பற்றி தெரிவிக்கப்பட்டது.

21-ம் திகதி இலங்கை ஜனாதிபதியுடன் விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது பற்றியும் கூட்டத்தில் கூறப்பட்டது. இதற்கு எம்.பி.க்கள் அதிருப்தி தெரிவித்தனர்.

தி.மு.க., அ.தி.மு.க. விலகிவிட்ட நிலையில், இலங்கை ஜனாதிபதியுடன் சிற்றுண்டி சாப்பிடும் விருந்து நிகழ்ச்சியை மாற்றவேண்டும் என்று குழுவில் இடம் பெற்றுள்ள தமிழக காங்கிரஸ் எம்.பி.க்கள் கூறினார்கள்.

ஜனாதிபதியுடன் 21-ம் திகதி காலை சாப்பிடுவதற்கு பதில் 20-ம் திகதி மாலை அவரை சந்திக்க ஏற்பாடு செய்யும்படி எம்.பி.க்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அதுபோல 18-ம் திகதி இலங்கை ரயில்வே திட்டப்பணிகளை பார்வையிட பயணத் திட்டத்தில் நிகழ்ச்சி சேர்க்கப்பட்டுள்ளது.

அந்த நிகழ்ச்சியை ரத்து செய்து விட்டு மெனிக்பாம் தோட்ட முகாம்களில் உள்ள ஈழத்தமிழர்களை சந்தித்துபேச அனுமதிக்க வேண்டும் என்றும் எம்.பி.க்கள் வலியுறுத்தியுள்ளனர்.
Share this post :
 
Support : Creating Website | Team Lanka Now | Intelligent
Copyright © 2011. Lanka Now - All Rights Reserved
Template Created by Creating Website Published by Intelligent
Proudly powered by Team lanka Now