முல்லேரியா பாரத லக்ஷ்மன் கொலை வழக்கில் சந்தேகநபராக இனங்காணப்பட்டுள்ள எம்பி துமிந்த சில்வா சிங்கப்பூரில் தனியார் வைத்தியசாலை ஒன்றில் சிகிச்சைப் பெற்று வருவதாகவும் அவருக்கு மற்றுமொரு சத்திரசிகிச்சை மேற்கொள்ள வேண்டியுள்ளதாகவும் இரகசிய பொலிஸார் நீதிமன்றில் தெரிவித்துள்ளனர்.
சிங்கப்பூர் மவுன்ட் எலிசபெத் வைத்தியசாலையில் அவர் சிகிச்சைப் பெற்று வருவதாக குறித்த வழக்கு இன்று (17) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது இரகசிய பொலிஸார் கொழும்பு நீதவான் நீதிமன்றில் குறிப்பிட்டுள்ளனர்.
துமிந்த சில்வா இன்னும் உடல் தகுதியுடையவராக இல்லை எனவும் அவர் கைது செய்யப்படக்கூடிய நிலையில் இல்லை எனவும் துமிந்த சில்வாவின் தந்தை அளித்த வாக்குமூலத்தை இரகசிய பொலிஸார் இன்று நீதிமன்றில் தெரிவித்துள்ளனர்.
கடந்த வருடம் நபம்பர் 11ம் திகதி தொடக்கம் துமிந்த சில்வா குறித்த வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருவதாக அவரின் தந்தை இரகசிய பொலிஸாருக்கு வாக்குமூலம் அளித்துள்ளார்.
துமிந்த சில்வாவுக்கு பல சத்திரசிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் அடுத்த மாதம் மற்றுமொரு சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் துமிந்தவின் தந்தை கூறியதாக இரகசிய பொலிஸார் நீதிமன்றில் குறிப்பிட்டுள்ளனர்.
துமிந்த சில்வாவை கைது செய்யாது இரகசிய பொலிஸார் நீதிமன்றை புறக்கணித்து வருவதாக பாரத லக்ஷ்மன் சார்பில் நீதிமன்றில் ஆஜரான சட்டத்தரணி எதிர்ப்பு வெளியிட்டார்.
அதனால் அவரை கைது செய்யும்படி பிடியாணை பிறப்பிக்குமாறு அவர் கோரிக்கை விடுத்தார்.
இதற்கு எதிர்ப்புத் தெரிவித்த இரகசிய பொலிஸார் துமிந்த சில்வாவை கைது செய்ய பிடியாணை அவசியம் இல்லை எனத் தெரிவித்தனர்.
பிடியாணை பிறப்பிக்காமல் அவரை கைது செய்ய முடியும் என இரகசிய பொலிஸார் கூறியுள்ளனர்.
சந்தேகநபரை கைது செய்ய பிடியாணை அவசியமில்லை என கொழும்பு மேலதிக நீதவான் பிரசன்ன டி அல்விஸ் இதன்போது தெரிவித்தார்.
தனது கருத்து தொடர்பில் யாரும் அதிருப்தி அடைந்தால் தனது மேலதிகாரியிடம் முறையிடலாம் என அவர் சுட்டிக்காட்டினார்.
இதன் பின்னர் வழக்கு எதிர்வரும் 27ம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
நீதிமன்ற தீர்ப்புகள் விமர்சனங்களுக்கு உட்படுத்த முடியாதவை என்பதால் இந்த செய்திக்கு உங்கள் தனிப்பட்ட கருத்துக்களை தெரிவிக்க முடியாமைக்கு வருந்துகிறோம். நன்றி.