இலங்கையில் முஸ்லிம்களின் பள்ளிகளைக் குறிவைக்கும் சிங்களக் காவிக் கரசேவர்கள்

Thanks To : SLTJ & அபூ ஹம்னா ஸலபி
 
இலங்கை வாழ் முஸ்லிம்கள் அனைவரையும் துயரத்தில் ஆழ்த்திய, தம்புள்ள அல் ஹைராத்; ஜும்ஆப் பள்ளி தகர்ப்புப் பின்னணி குறித்து ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

இலங்கை பல்லின மக்கள் வாழ்கின்ற ஒரு நாடு. நாட்டின் அரசியல் சாசனம் மத  சுதந்திரத்தை வழங்கியுள்ளது. இந்த சுதந்திரம் ஒரு சாரால் மீரப்படும் போது பிரச்சினைகள் எழுவதைத் தடுக்க முடியாத நிலை ஏற்படும்.

இந்த நாட்டின் பெரும்பான்மையாக வாழ்கின்ற சிங்களவர்கள் தமிழ்மக்களின் உரிமைகளைப் பரித்ததால், சுமார் 30 ஆண்டுகள் அதன் ரணத்தை அனைத்து மக்களும் அனுபவிக்க நேரிட்டது. அந்த ரணத்தின் வடுக்கள் மாறமுன்னரே இன்னொரு சிறுபான்மையான முஸ்லிம் மக்களின் பள்ளி மீது கை வைத்து மதத்துவேசத்தை சிங்களத் தீவிரவாத தீய சக்திகள் துவங்கியுள்ளன. இது ஆரோக்கியமான அறிகுறியல்ல என்பதை சுட்டிநிற்கிறது.

உலகலாவிய முஸ்லிம் உம்மத்தின் ஓர் அங்கமாக ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேற்பட்ட வரலாற்றுப் பாரம்பரியங்களுடன் இலங்கையில் முஸ்லிம்கள் மற்ற இனத்தவர்களுடன் நல்லுரவோடு வாழ்ந்து வருகின்றனர். அவர்கள் எங்கு வாழ்ந்தாலும் அங்கு பள்ளிவாசல்களை நிர்மாணித்துää தமது வணக்க வழிபாடுகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அத்தோடு, முஸ்லிம்கள் இந்த நாட்டின் அரசியல் நிர்வாக சேவைகளில் கணிசமான பங்கினை ஆற்றியுள்ளார்கள். இலங்கையை போர்த்துகேயர் ஆக்கிரமித்த போது, மன்னன் மாயாதுன்னையின் படையோடு முஸ்லிம்கள் இளைஞர்கள் இணைந்து போர்த்துகேயர்களுக்கு எதிராகப் போராடினர். சுதந்திரத்திற்கு முன்பிருந்தே இந்த நாட்டின் இறைமையைப் பாதுகாப்பதில் முஸ்லிமகள் ஆற்றிய பணி மிக முக்கியத்துவம் வாய்ந்தது. ஆ.ஊ அப்துல் காதர் என்பவர் 1898ல் சட்டசபை உறுப்பினராக நியமிக்கப்பட்டது முதல் ஜெனீவாவில் அமெரிக்கா இலங்கைக்கு எதிராகக் கொண்டுவந்த தீர்மானம் வரை முஸ்லிம்களின் தேசப்பற்று வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பதிவுகளைக் கொண்டுள்ளது.

கொழும்பிலுள்ள கருவாத்தோட்டம் முன்னைய காலத்தில் முஸ்லிம்களுக்கு சொந்தமான சொத்தாக இருந்தது. இப்போது, அது அரச சொத்து. கொழும்பிலுள்ள நூதனசாலையை வாப்புச்சி மரைக்கார் அரசாங்கத்திற்கு அன்று அன்பளித்தார். பல அரசாங்க அலுவலகங்களை இன்று அரசாங்கம் நிர்மாணிக்க அன்றைய முஸ்லிம்கள் நிலங்களை அன்பளித்துள்ளனர்.

கொள்ளுபிடியில் உள்ள சபாநாயகருக்கான “மும்தாஜ் மஹால்” தெஹிவளை யிலுள்ள “வலது குறைந்தோர் நிலையம்”  கொழுப்பு  7ல் அமைந்துள்ள “சிராவஸ்டி” எனும் கட்டடமும் ஒரு சில முஸ்லிம்களின் தனிச்சொத்து என்பது எத்தனைப் பேருக்குத் தெரியும்? என்பது தான் தெரியாத விடயம். இன்று இவைகள் அரசாங்கத்தின் தேசிய சொத்துக்கள்.அதை வழங்கியவர்கள் இலங்கை மீது பற்றுள்ள முஸ்லிம் செல்வந்தவர்கள்.

இலங்கையர்களின் தேசிய நலனிற்கு முஸ்லிம்கள் ஆற்றிய வரலாற்று ரீதியான பங்களிப்புக்களில் சிலவற்றையே இங்கு குறிப்பிட்டோம். எனினும், அவர்கள் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த பல விடயங்களில் நசுக்கப்பட்ட சமூகமாகவும், உரிமைகள், மதச்சுதந்திரங்கள் பறிக்கப்பட்டவர்களாகவே இன்று வரை இருந்துவருகின்றனர். புலிப் பயங்கரவாதிகள் மூலமும் முஸ்லிம்கள் பல்வேறு இன்னல்களை அனுபவித்தார்கள்.

அதன் தொடரில்தான் இலங்கை மத்திய மாகாணத்திலுள்ள தம்புள்ளையில்,  தம்புள்ள ரஜமஹா விஹாரைக்கு அண்மையில் அமைந்துள்ள மஸ்ஜிதுல் ஹைரிய்யா ஜூம்மா பள்ளி அகற்றும் முயற்சியும் அமைந்துள்ளது.

மிக அண்மைக்காலமாக இலங்கை முஸ்லிம் சமூகத்தின்  சமய சுதந்திரத்தின் மீதான பரவலான நெருக்கடி அதிகரிக்கப்பட்டு வருவதை அவதானிக்கக் கூடியதாக உள்ளது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கம் உள்நாட்டு யுத்தத்தில்  பயங்கரவாதப்  புலிகளை தோற்கடித்த பின்னரே முஸ்லிம் சமூகம் மத சுதந்திரப் பறிப்பு நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளதாக அவதானிகள் குறிப்பிடுகின்றனர்.

சிங்களப் பாடசாலைகளில் சிங்கள மொழி மூலம் கல்வி கற்கும் முஸ்லிம் மாணவர்கள் மிகப்பெரும் நெருக்கடிகளை எதிர்கொண்டுவருகின்ற வேளை பள்ளிவாசல்கள் மீதான அதிதீவிர கடுப்போக்கு சிங்கள சமூகத்தின் தாக்குதல்கள் முஸ்லிம் சமூகத்தை பதற்றமடையவைத்துள்ளது.

இலங்கை முஸ்லிம் சமூகத்திற்கெதிராக திட்டமிட்டு மேற்கொள்ளப்படுகின்ற இந்தச் சம்பவங்கள் எவ்வகையிலும் எவராலும் நியாயப்படுத்தப்பட முடியாதவை என்ற வகையில் இப்பள்ளித் தகர்ப்பு சதியும் சர்வதேசிய சமூகத்தின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. சில முஸ்லிம் நாடுகளின் தூதரகங்கள் தங்கள் கண்டனத்தைப் பதிவு செய்துள்ளமை இலங்கை அரசாங்கத்திற்கு அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

பள்ளியின் வரலாற்றுப் பின்னனி

இன்று சிங்கள கடும் போக்காளர்களின் புனித பிரதேசத்திற்குள் உள்ளதாக சர்ச்சையாக்கப்டும் மஸ்ஜிதுல் ஹைரிய்யா ஜூம்மா பள்ளி இலங்கையின் மத்திய மாகாணத்தில் தம்புள்ளை நகரில் 1965ம் ஆண்டு  ரஜமஹா விஹாரைக்கு அண்மையில் அப்பிரதேச முஸ்லிம்களால் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

ஆ.ழு. மாமா என்ற காத்தான்குடியைச் சோந்த ஒரு வர்த்தகரால் இப்பள்ளிக்கான காணி அன்பளிப்பு செய்யப்பட்டு, அதில் நிர்மாணிக்கப்பட்ட இப்பள்ளி 47 வருட பழைமை வாய்ந்தது. பள்ளியைச் சூழ இருந்த காணியை நிதி திரட்டல் மூலம் அங்குள்ள முஸ்லிம்களால் கொள்வனவு செய்யப்பட்டு, பள்ளிக்கான சொத்தாக வக்பு செய்யப்பட்டுள்ளது. தேவைக்கேற்றவாறு அவ்வப்போது பள்ளியை விரிவாக்கல் செய்யும் நடவடிக்கையும் செய்யப்பட்டுள்ளது.

தம்புள்ளை வழியாக பயணம் செய்வோரும் அங்கு வியபார நடவடிக்கைகளில் ஈடுபடுவோரும் இப்பள்ளியில் ஐந்து நேரத் தொழுகையையும் ஜூம்மாவையும் நிறைவேற்றி வந்துள்ளனர்.தம்புள்ளை நகருக்கு அருகாமையில் வேறுபள்ளிகள் இல்லாததால் இந்தப்பள்ளியின் தேவை முஸ்லிம்களுக்கு மிக முக்கியமானதாகும்.

அரச அங்கீகாரம் பெற்ற முஸ்லிம் கலாசார திணைக்களத்தில் 2002ம் ஆண்டு பதிவும் செய்யப்பட்டு, அரச அங்கீகாரமும் பெற்றுருந்தது.

வசந்த குமார நவரட்ன என்பவர்; தம்புள்ளையில் 47 வருடங்களாக வசிப்பதாகவும் தனது சிறு வயது முதல் அப்பள்ளியைக் கண்டு வருவதாகவும் கூறுகின்றார்.இத்தனை ஆண்டுகள் பழைமைவாய்ந்த பள்ளியை இவர்கள் இலக்கு வைப்பதன் பின்னணி அனைரையும் சிந்திக்க வைத்துள்ளது.
ரங்கிரி கு.ஆ ன் துவேசத் தூண்டல்

ரஜமாஹ விஹாரையிலிருந்து இயக்கப்படும் ரங்கிரி FM, மற்றும் அங்கிருந்து வெளியிடப்படும் பத்திரிகை என்பன சிங்கள மதத்தினரின் உள்ளத்தில் இப்பள்ளி பற்றிய தவறான எண்ணத்தை விதைத்தன.

அண்மையில் இந்த விஹாரையின் புண்ணிய பூமிக்கான எல்லைகள் அரசாங்க அறிவித்தல் ஒன்றின் மூலம் குறைக்கப்பட்டதாக அறியப்படுகிறது. அதுவரை புண்ணிய பூமியின் எல்லைக்குள்ளையே இது இருந்துள்ளது என்ற செய்தி இப்போது வெளியாகிறது.

தற்போது, இப்பள்ளி புனித புமி எல்லைக்குள் இல்லை. புனித பூமி கண்டலம சந்திவரை தான் உள்ளது. பள்ளி சந்திக்கு இப்பக்கமே உள்ளது. சட்டவிரோதக் கட்டடங்களுக்கு வரி விலக்கு அளிக்க முடியாது. உள்ளுராட்சி சபையினால் அதற்கு வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது முஸ்லிம் பள்ளிகள் வரிப் பணம் செலுத்த வேண்டிய அவசியமில்லை.  என்று காணி அமைச்சர் கூறுகின்றார். அவரின் வாக்கு மூலத்தை சிரச மற்றும் சக்தி தொலைக்காட்சிகள் என்பன ஏப்ரல் 25-04-2012 அன்றைய அதன் பிரதான செய்தியில் ஒளிபரப்பியது.

பள்ளியை முஸ்லிம்கள் விஸ்தரிக்கின்றார்கள். அத நமது புனித பூமியின் எல்லைக்குள் அமைந்துள்ளது. அதைத் தகர்க்க வேண்டும், அம்முயற்சியில் உயிர்தியாகம் செய்யவும் தயங்க கூடாது என்று சிங்கள மக்களின் உள்ளத்தில் நச்சு விதையை வீசும் தேரரின் வழிகாட்டலில் ரங்கிரி FM  துவேச உணர்வுகளைத் தூண்டியது.

இத்தைகைய இனத்துவேச உணர்வைத் தூண்டும் பிரசாரத்தை கண்டு அச்சமடைந்த முஸ்லிம்கள்,  பொலிஸில் இது தொடர்பான முறைப்பாடுகளைச் செய்தனர். இவர்களின்  முறைப்பாட்டைத் தொடர்ந்து, பள்ளியைப் பார்க்க வந்த பொலிஸ் அதிகாரிகள், ராணுவத்தினர், உளவுத் துறை போன்றோருக்கு கட்டுமானப் பணி பற்றியும் தெளிவுபடுத்தினர்.

ரங்கிரி குஆன் இனத்துவேசப் பிரசாரம் பெருமளவு தம்புள்ளையில் வசிக்கும் பவுத்த மக்களிடம் தாக்கம் செலுத்தவில்லை. அதனால் தம்புள்ளை மக்கள் இப்பள்ளிக்கு எதிப்புத்தெரிவிக்கவில்லை, பள்ளிக்கு எதிரான ஆர்ப்பாட்த்தில் கலந்து கொண்டவர்களில் 5 சதவீனமானோர் மாத்திரமே அப்பகுதியைச் சேர்ந்தவர்கள், ஏனையோர் வெளியிடங்களைச் சேர்ந்தவர்கள் என அப்பிரதேச மக்கள் கூறுகின்றனர்.

புத்த காவிகளின் கடும் போக்கு

இலங்கை ஒரு ஜனநாயக நாடு. நாட்டின் மீது பற்றுள்ள யாரும் சட்ட ரீதியான தீர்வையே நாட வேண்டும்.எமது நாடு என்று மார்தட்டும் புத்த காவி அணிந்த கடும் போக்காளர்களில் சிலர் சட்டத்தை தங்கள் கையில் எடுத்துக்கொண்டனர். அதனால் அவர்களே முன்னின்று பள்ளியை தகர்த்தனர். அந்த விடியோ காட்சிகள் இணையதளங்களில் உலா வந்துகொண்டிருக்கின்றன.எனினும் அவர்கள் இல்லை என்று மறுக்கின்றனர்.
புண்ணிய பூமி என்றால் என்ன? அதற்கான வரையரை என்ன? பல்லினங்கள் வாழ்கின்ற நாடொன்றில் நினைத்தவாறு புண்ணிய பூமி என்று வரையறுத்து கூறிக்கொண்டு, மற்ற இனத்தின் உரிமையைப் பறிக்க அரசியல் யாப்பில் இடம் உண்டா? என்ற கேள்விகளுக்கு சிங்கள மதத் தீவிரவாதிகள் பதில் சொல்ல வேண்டும்.

எந்தவித சட்ட ரீதியான அனுமதியுமின்றி ஏப்ரல் 20 ஆம் திகதி அப்பள்ளி பௌத்த தீவிரவாதிகளால் முற்றுகையிடப்பட்டு தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளது. தாக்கப்பட்டது பள்ளி மட்டுமல்ல இந்த நாட்டின் ஜனநாயகமும் தான் என்பதை எத்தனைப் பேர் புரிந்துக்கொள்ளப் போகிறார்களோ!?

கையாளாகாத காவல் துறை

ஏப்ரல் 19 ஆம் திகதி இரவு பத்து மணியளவில் பள்ளியில் கூட்டமொன்று நடைப்பெற்றுள்ளது. இதில் பள்ளி நிர்வாகிகள், சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி உட்பட பல்வேறு பாதுகாப்பு உயர் அதிகாரிகள் கலந்துக்கொண்டுள்ளனர். பள்ளியைப் பாதுகாக்க அவர்களிடம் முஸ்லிம்கள் வேண்டுகோள் விடுத்த போது, வெளியூர்களிலிருந்து ஆர்ப்பாட்டத்திற்கு ஆட்கள் அழைக்கப்பட்டுள்ளதாகவும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்வது சாத்தியமில்லை எனவும் 20 ஆம் திகதி வெள்ளிக்கிழமை ஜூம்மா நடத்தாமல் இருப்பது நல்லது என்ற வகையில் கையாளாகாத காவல் துறை பேசியுள்ளது.

எனினும், பள்ளி நிர்வாகமும் கூட்டத்தில் கலந்துகொண்ட முஸ்லிம்களும் அதை ஏற்று ஜூம்மாவை நிறுத்த மறுத்துள்ளனர். அங்குள்ள முஸ்லிம்கள் நிதானமாகவும் பொறுமையாகவும் செயல்படும் போது, அன்று வெள்ளிக்கிழமை காலை 10:30 மணியளவில் காவி அணிந்த பவுத்த தேரர்கள் தலைமையில் பள்ளியை தகர்க்கும் நோக்குடன் வந்துள்ளனர்.

பள்ளி உள்ளே இருந்த முஸ்லிம்கள் பொலிஸாரினால் வெளியேற்றப்பட்ட பின்னர் காவி உடையணிந்த புத்த பிக்குகளுடன் வந்த காடையர்கள் நாட்டின் பாதுகாப்புத் துறையினரின் முன்னிலையில் பள்ளி உள்ளே சென்று பொருட்களையும் உடைத்து, குர்ஆனை வீசி எறிந்து, மிம்பரையும் சேதப்படுத்தியுள்ளனர்.

இதேபோல் சில மாதங்களுக்கு முன்னர் அநுராதபுரத்தில் தர்ஹா ஒன்று இடித்து தரைமட்டமாக்கப்பட்டது. நூற்றாண்டு பழமைவாய்ந்த தர்ஹா, பவுத்தர்களின் புனிதப் பிரதேசத்தில் அமைந்திருந்ததாக காரணம் கூறப்பட்டே தகர்க்கப்பட்டது. பொலிஸார், பொலிஸ் உயர் அதிகாரிகள், அரசாங்க உயர் அதிகாரிகள் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்க சட்டத்தை கையிலெடுத்த கடும்போக்கு பௌத்த துறவிகளும், இனவாத சிங்கள் இளைஞர்களும் அநுராதபுரத்திலுள்ள தர்ஹாவை இடித்துத் தகர்த்தனர். புனித இஸ்லாம் தர்கா வழிபாட்டை அங்கீகரிக்க வில்லை. துர்கா வழிபாடு மிகப்பெரிய இணைவைப்பு. எனினும், முஸ்லிம்களின் சொத்தை சேதப்படுத்த இவர்களுக்கு எந்த அதிகாரமும் இல்லை.

அத்துடன் கொழும்பு – தெஹிவளையில் அமைந்துள்ள முஸ்லிம் பள்ளிவாசல் ஒன்றின் மீதும் அல்குர்ஆனை ஓதிக்கொடுக்கும் மத்ரஸா ஒன்றும் சிங்கள கடும்போக்காளர்களின் நெருக்குவாரங்களுக்கு உட்பட்டது. இதுபோன்று அறியப்படாத மற்றும் பகிரங்கப்படுத்தப்படாத பல சம்பவங்கள் தொடர்ந்த நடந்தே வந்துள்ளன.

இவற்றிற்கு யார் பொறுப்பு? இலங்கை அரசியல் சாசனம் தாம் விரும்பும் மதத்தை பின்பற்றுவதற்கு அனுமதி வழங்குகிறது. அவர்கள் மத ஸ்தாபனங்களை அமைக்கவும் யாப்பு ரீதியான உரிமை பெற்றுள்ளனர். நாட்டின் ஒவ்வொரு குடிமகனின் பாதுகாப்புக்குக்கு ஜனாதிபதி பதில் கூறவேண்டிய பொறுப்பையும் கொண்டுள்ளார்.
எனினும், ஜனாதிபதி தலைமையில் வழிநடத்தப்பட்டு இயக்கப்படும் இராணுவம், பொலிஸார் பார்த்திருக்கத்தான் பள்ளிவாசல் இடிக்கப்பட்டுள்ளது. அவ்வாறாயின் இந்தச் சம்பவத்திற்கு பதில் அளிக்கவேண்டிய பாரிய பொறுப்பு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவை சார்ந்துள்ளது.

முஸ்லிம்கள் மீது பெரும்பான்மைத் தீவிரவாதம் அத்து மீறும் போது, புத்த காவி இன உணர்வு மேலோங்கியுள்ள  காவல் துறை, கடந்த காலங்களிலும் இவ்வாறே பல முறை பக்க சார்பாகவே நடந்து கொண்டுள்ளது. நாட்டின் சட்டத்தையும் ஒழுங்கையும் பாதுகாக்க வேண்டிய பாதுகாப்புத் துறை கையாளாகாத முறையில் நடந்து கொண்டது சர்வதேசிய மட்டத்தில் இலங்கை ஜனநாயகத்திற்கு பெரும் அபகீர்த்தியை ஏற்படுத்தியுள்ளது.

புனித பூமிக்குள் பள்ளி இருக்கக் கூடாதா?

பவுத்த மதகுருமார் இலங்கையின் பல இடங்களை தமது புண்ணிய பூமியாகக் கருதுகிறார்கள். அங்கெல்லாம் அதிகமாக முஸ்லிம்களின் பள்ளியை மட்டுமே குறிவைக்கிறார்கள். இவர்கள் புனித எல்லையாக்கும் எல்லைக்குள் மனித தர்மம் மதியீனமாகக்  கருதும் மதுபானக் கடைகள், ஹோட்டல்கள், கடைகள் இருக்கின்றன.ஏன் விகாரைக்குள் மலசல கூடங்கள் கூட இருக்கின்றன. வீடுகள், குடியிருப்புகள் கூட இருக்கின்றன.

நியாயமாக சிந்தித்தால் பவுத்த தர்மம் இவற்றையும் அகற்ற வேண்டும். புனித பூமிக்குள் இவை இருக்கக் கூடாதே! இது குறித்து இவர்கள் சிந்திப்பார்களா?

பிரதமரின் புரளி

பள்ளியை தகர்த்து அகற்றும் முயற்சியில் மும்முறமாக ஈடுபட்டுள்ள காவிகளிடம் காவுகொடுக்கும் அறிவிப்பை நாட்டின் பிரதமர் வெளியிட்டு, எரிந்து கொண்டிருக்கும் துவேச உணர்விற்கு எண்ணெய் வார்த்துள்ளார்.

தன் மனோ இச்சைப்படி ஓர் உத்தரவைப் பிறப்பித்துவிட்டு அதற்கு முஸ்லிம் அரசியல் தலைமைகள் இணக்கம் தெரிவித்தனர் என்று பொறுப்பற்ற பொய்யான ஓர் அறிக்கை வெளியிட்டு நாடகமாடியதையும் முஸ்லிம் அமைச்சர்கள் வெளிச்சத்திற்கு கொண்டுவந்துள்ளனர். பிரதமரின் இந்த நாடகத்தை பீபீசி உலக சேவையும் அம்பலப்படுத்தியுள்ளது.

“தம்புள்ள மஸ்ஜித்துல் ஹாய்ரா பள்ளிவாசலை அகற்றிவிட்டு வேறு இடத்தில் அதை அமைக்குமாறு உத்தரவிட்டுள்ள பிரதமர் டி.எம். ஜெயரட்ண, அதற்கு முஸ்லிம் அரசியல் தலைமைகள் இணக்கம் தெரிவித்ததாக பொய்யான அறிக்கை ஒன்றை வெளியிட்டு,  நாடகமாடியது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

“இலங்கையின் மத்திய மாகாணத்தில் தம்புள்ளை நகரில் பௌத்த பிக்குகள் தலைமையிலான குழுவினர் இடிக்க வேண்டும் என்று கோரி போராட்டம் நடத்திய முஸ்லிம் பள்ளிவாசலை அங்கிருந்து அகற்ற நடவடிக்கை எடுப்பதாக இலங்கையின் பிரதமர் டி.எம் ஜயரத்ன அறிவித்துள்ளதாக அறிக்கையொன்று வெளியாகியுள்ளது.

உடனடியாக அமுலுக்கு வரும் விதத்தில், குறித்த பகுதியிலிருந்து பள்ளிவாசலை அப்புறப்படுத்தி, அதனை வேறொரு பொருத்தமான இடத்தில் அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர் ஜயரத்ன அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாக பிரதமர் அலுவலக முத்திரையுடன் வெளியாகியுள்ள ஊடக அறிக்கையில் சுட்டிக்காட்டபட்டுள்ளது.

இன்று ஞாயிற்றுக்கிழமை காலை கம்பளையில் நடந்த சிறப்பு கூட்டமொன்றின் பின்னர் பிரதமர் இந்த அறிவுறுத்தலை வழங்கியுள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் மூத்த அமைச்சரான ஏ.எச்.எம். பௌசி,  மேல் மாகாண ஆளுநர் அலவி மௌலானா மற்றும் துணை அமைச்சர்களான அப்துல்காதர், ஹிஸ்புல்லா ஆகியோரும் இஸ்லாமிய மதத்தலைவர்களும் இந்த சந்திப்பில் கலந்துகொண்டதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“கூட்டமே நடக்கவில்லை”

இதேவேளை, பிரதமர் அலுவலகத்திலிருந்து இப்படியான அறிக்கையொன்று வெளியாகியிருக்க வாய்ப்பில்லை என்று அமைச்சர் பௌசி தமிழோசையிடம் கூறினார்

அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளவாறு கூட்டம் எதுவும் நடக்கவில்லை என்றும் அப்படியான கூட்டத்தில் தானோ மேல் மாகாண ஆளுநர் அலவி மௌலானாவோ கலந்துகொள்ளவும் இல்லை என்றும் அமைச்சர் பௌசி சுட்டிக்காட்டினார்.

பல பரம்பரைகளாக தம்புள்ளை நகரில் முஸ்லிம் மக்கள் சென்று வழிபட்டுவரும் பள்ளிவாசலை அகற்றுமாறு கோருவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் அவர் கூறினார்.

அண்மையில் ஜெனீவாவில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா பிரேரணை கொண்டுவந்தபோது, முஸ்லிம் நாடுகளும் இலங்கையிலுள்ள முஸ்லிம் மக்களும் ஒட்டுமொத்தமாக அரசாங்கத்தை ஆதரித்திருந்த நிலையில், தம்புள்ளை நகரில் நடத்தப்பட்ட போராட்டத்தின் பின்னணியில் ஏதாவது சக்திகள் இருக்கலாம் என்று கருதுவதாகவும் அமைச்சர் பௌசி மேலும் தமிழோசையிடம் சுட்டிக்காட்டினார்.”

-BBC Tamil

பள்ளிவாசலை அகற்ற பௌத்த சிங்களப் பேரினவாத சக்திகளின் இந்த சதி முயற்சிää முஸ்லிம் அரசியல் தலைமைகள் மத்தியிலும் கடும் விசனத்தை ஏற்படுத்தியுள்ளது. பிரதமரும், அரசாங்கமும், பௌத்த பேரினவாத சக்திகளுடன் இணைந்து முஸ்லிம்களின் உரிமைகளைப் பறிப்பதாக அவர்கள் பலரும் விசனம் வெளியிட்டுள்ளனர்.

அன்றைய ஆப்ரஹாம் முதல் இன்றைய இனாமலுவே ஸ்ரீ சுமங்கல தேரர் வரை

அன்றைய ஆப்ரஹா தனது வணக்கஸ்தளத்தின் பக்கம் மக்களைக் கவரச் செய்ய யானைப் படையோடு கஃபாவைத் தகர்க்க வந்து, அல்லாஹ் அனுப்பிய அபாபீல்களிடம் அடிபட்டுச் செத்து, அழிந்தான். இன்றைய இ(அஹி)ம்சைத் தேரர்கள் புனித பூமி என்று அதே பாணியில்  இறை இல்லங்களைக் குறிவைக்கின்றனர்.

அஹிம்சையைப் போதிக்கும் பவுத்த தர்மத்தை பாதுகாத்து, நாட்டின் பெருமை காக்க வேண்டிய பௌத்த பிக்குகள் பித்த பிக்குகளாக வலம் வருவது நாட்டிற்கு பெரும் அவமானமும் சக இனத்தவர்களுக்கு அச்சுறுத்தலுமாகும்.
குறுந்தேசிய தமிழ் இனவாதம் முஸ்லிம்களை அவர்களின் சொந்த மண்ணிலிருந்து அகற்றியது. சிங்கள இனவாதம் ஒவ்வொரு கலவரத்தின் போதும் பள்ளிகளைக் குறிவைத்தற்கான வரலாற்றுச் சான்றுகள் உள்ளன. அவற்றிற்கு உதாரணமாக 1915ல் நடந்த முஸ்லிம்களுக்கு எதிரான சிங்களவர்களின் வன்முறை வெறியாட்டத்தைக் குறிப்பிடலாம்.  இப்போதைய லைன் பள்ளி தொடர்பான சர்ச்சை ஒன்றிலிருந்துதான் 1915ம் ஆண்டுக் கலவரம் கண்டி நகரின் மத்தியில் உடனடியாக ஆரம்பமானது.

1980 ம் ஆண்டு இப்பள்ளியின் இரண்டாம் மாடி, கட்டட திணைக்களத்தின் அனுமதியோடு புனர்நிர்மாணம் செய்யப்படும் போது, அதன் உயரம் பவுத்தர்களின் புனித தலதா மாலிகையின் உயரத்திற்கு மேற்செல்கிறது என்று கூறி, அஸ்கிரிய பீட பெரிய தேரர்கள் முன்னின்று அப்பணியை இடைநிறுத்தினர்.எனினும் அப்போதைய ஜனாதிபதி பிரேமதாஸ நேரில் பள்ளியைப் பார்த்துவிட்டு விஷேட அனுமதி வழங்கினார். இதுவிடயத்தில் பெரிய தேரர்களிடம் அதிருப்த்தி நிலவினாலும், அது இன்று மூன்று மாடிகள் கொண்ட பள்ளியாக மிளிர்கிறது.

இதுவரை சிங்கள முஸ்லிம்களிக்கிடையில் சுமார்க30 கலவரங்கள் நடந்துள்ளன.1915க்குப் பின்னர் பெரிய  கலவரமாக 1976ல் புத்தள நகரப் பள்ளிக்குள் காவல் துறையால் நடாத்தப்பட்ட துயர நிகழ்வைக் குறிப்பிடலாம்.
பாதுகாப்பு வழங்க வேண்டிய காவல் துறையே புத்தளம் பெரிய பள்ளிக்குள் நுழைந்து அப்பாவி முஸ்லிம்களை சுட்டுக்கொன்றது. புத்தளத்திற்கு அண்மித்த பகுதிகளிலும் நடந்த இன வன்முறைத் தாக்குதல்கள் போன்றே மாவனல்லைக் கலவரத்திலும் முஸ்லிம்களின் பள்ளிகள் எரிப்பு சம்பவம் பிரதான இடத்தைப் பெருகிறது.

1976ம் ஆண்டு புத்தளம் நகரில் நடந்த வன்முறையிலிருந்து இன்றுவரை ஒரு வருடம், அல்லது இரு வருட இடைவெளிக்குள் பல கலவரங்கள் முஸ்லிம்களுக்கு எதிராக சிங்களவர்களால் நடந்திருப்பதையும் அவதானிக்க முடிகிறது.

சிங்களவர்களால் எமக்கு எதிராக திட்டமிடப்பட்டு நடாத்தப்பட்ட கலவரங்கள் ஒவ்வொன்றின் போதும் பள்ளிகள் குறிவைக்கப்பட்டுள்ளன.  கண்டி லைன்பள்ளிவாசல், அறுப்பளைப் பள்ளிவாசல், பேராதனைப் பள்ளி வாசல், ஹிரிப்பிட்டி பள்ளிவாசல் எரிப்பு, மாவனல்லை கலவரத்தில் எரிக்கப்பட்டுள்ள பல பள்ளிகள் என்று சிங்கள இனவாதத்தின் கோர முகங்கள் காட்சி தருகின்றன.

முஸ்லிம்களின் எதிர்பார்ப்பு

பண்டைய சிங்கள மன்னர்களின் ஆட்சிக்காலம் முதல் இன்று வரை நாட்டின் நலனிற்காக முஸ்லிம்கள் உழைத்து வருகிறார்கள். அண்மையில் ஜெனீவாவில் அமெரிக்கா கொண்டு வந்த இலங்கைக்கு எதிரான பிரேரணைக்கு எதிராக இலங்கையில் வாழும்  அனைத்து  முஸ்லிம்களும் அணிதிரண்டு ஆர்ப்பாட்டம் செய்து, தாய்நாடு மீதான தமது தேசப்பற்றை வெளிப்படுத்தினர். அத்தோடு, அனைத்து முஸ்லிம் நாடுகளும் அமெரிக்காவை எதிர்த்து, இலங்கைக்கு ஆதரவளிக்க முஸ்லிம்களே வழிவகுத்தனர். இதற்கு பரிசாகவே இந்த பள்ளிவாசல் உடைக்கப்பட்டுள்ளது. இது போன்ற சம்பவங்கள் தொடருமானல் இந்த நாட்டில் சமாதானப் புறாக்கள் என்றுமே பறக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுவிடும்.

நாட்டின் பெரும் பான்மை இனத்தவர்களால், அவ்வப்போது ஏற்படும் இன்னல்களை சட்ட ரீதியாக அணுகுபவர்களாகவும் கடும்போக்கு மதத் தீவிரவாதிகளால் சீண்டப்படும் போது பொறுமையைக் கடைப்பிடிப்பவர்களாகவும் சட்டத்தையும் ஒழுங்கையும் பேணுபவர்களாகவும் இந்த நாட்டு முஸ்லிம்கள் இருந்து வருகின்றார்கள்.

இவ்வாறு நாட்டுக்கு விசுவாசமகச் செயற்படும் முஸ்லிம் சமூகத்தின் வணக்கஸ்தளங்கள் பல தடவைகள் பெரும்பான்மை இனத்தவர்களால் குறிவைத்து தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டு, அவர்களின் மதச் சுதந்திரம் கேள்விக்குள்ளாக்கப்பட்டுள்ளது. இந்த நிலை இனியும் தொடராமலிருக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இனவன்முறை புரிவோரை இரும்புக் கரம் கொண்டு தடுக்க வேண்டும்.

அநீதிக்கு உள்ளாக்கப்பட்டுள்ள் முஸ்லிம் சமூகத்திற்கு நீதி வழங்க வேண்டிய கடப்பாடும் இந்த அரசாங்கத்தை சர்ந்துள்ளது.  இதிலிருந்து அரசாங்கம் விலகிநிற்க முடியாது. இந்த அரசாங்கத்தை ஆட்சிக்கு கொண்டுவருவதிலும் நாட்டுக்கு எதிரான சதிகளை முறியடிப்பதிலும் முஸ்லிம் சமூகம் வழங்கிய மகத்தான பங்களிப்பையும் இந்த அரசாங்கம் மறந்துவிட்டு செயற்படக்கூடாது. அவற்றை நன்றியோடு நினைத்துப் பார்க்க வேண்டும்.

தற்போது, இலங்கையின் எந்தப்பகுதியில், பள்ளிவாசல் தகர்க்கப்படும் என்ற அச்சம் முஸ்லிம் சமூகத்திற்கு  மத்தியில் ஏற்பட்டுள்ளது. முஸ்லிம் சமூகத்தின் இந்நிலை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ அரசாங்கத்தின் இருப்புக்குகூட சவலாக மாறிவிடலாம். எனவே, நிலைமையின் பாரதூரத்தை உணர்ந்த  இச்சந்தர்ப்பத்தில் நியாயமாகச் செயற்படுவது அரசாங்கத்தின் இருப்பை தக்க வைக்க அவசியமாகிறது.

புனித பூமி என்றுகூறி சிங்கள கடும்போக்காளர்கள் தொடர்ந்தும் பள்ளிவாசல்களை இலக்கு வைப்பார்களாயின் அதனால் ஏற்படப்போகும் அபாயத்தை சிந்தித்துப்பார்ப்பார்த்து முஸ்லிம் சமூகம் மிகவும் நிதானமாகச் செயற்பட வேண்டும்.

அத்துடன் முஸ்லிம் சமூகம் தனது கண்களில் ஒன்றாகவே பள்ளிவாசல்களை நோக்குவதை முஸ்லிம் அரசியல் தலைமைகளும் அறிந்துவைத்துள்ளன. தமது கண்களில் ஒன்றுக்கு ஆபத்து நேரிடும்போது எந்த மனிதனையும் ஆசுவாசப்படுத்த முடியாது. அதனால் ஏற்படும் பயங்கரத்தையும் முஸ்லிம் அரசியல் தலைமைகளும் மற்றவர்களும் உணர்ந்து, போலி அறிக்கைகள் விடுத்துக் கொண்டிருப்பதை விட்டுவிட்டு காத்திரமான முயற்சிகளில் உடனடியாக இறங்க வேண்டும்.

அத்துடன் பவுத்த தேரர்கள் இவ்வாறான வன்முறைச் செயல்களில் ஒருபோதும் ஈடுபடக் கூடாது. சிறுபான்மை சமூகத்தை சீண்டும் செயல்களை அரசாங்கம் அனுமதிக்கவும் கூடாது. மதம், இனம் மற்றும் சிறுபான்மையினர் இனி இங்கு இல்லை என்று ஜனாதிபதி பகிரங்கமாகப் பேசிய பின்,  பள்ளிவாசல் தகர்க்கப்பட்ட சம்பவத்தினால் பாரிய அவமானம் ஏற்பட்டுள்ளது.இந்த அவமானத்தை அகற்ற ஜனாதிபதி பள்ளி விசயத்தில் நியாயமான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்.

அதேபோல், இனவாதத்தை தூண்டும் ரங்கிரி FM வானொலி திட்டமிட்டு ஒரு சமூகத்துக்கு எதிராக செய்யும் துவேசப் பிரசாரம் அரசியல் யாப்புக்கு முரணானது. உடனே அதைத் தடைசெய்ய வேண்டும்

மத சுதந்திரத்தை உத்தரவாதப்படுத்தும் அரசியல் சாசனத்தில் நம்பிக்கை வைத்துள்ள ஒரு சமூகத்தின்  நம்பிக்கையை பேணிப் பாதுகாக்க வேண்டிய, ஆட்சியில் அமர்ந்துள்ள அரசாங்கம் அதன் பாதுகாப்புத்துறை நியாயமாகச் செயற்படாத போது, நாட்டில் அமைதியின்மையே ஏற்படும் என்பதைக் கவனத்திற் கொண்டுää பள்ளிவாசலை அதே இடத்தில் மீண்டும் நிர்மாணிக்கவும் உரிய இடத்திலேயே முஸ்லிம்களிடம் ஒப்படைக்கவும் ஆவன செய்ய வேண்டும். எக்காரணம் கொண்டும் தம்புள்ள பள்ளிவாயல் விடயத்தில் விட்டுக்கொடுப்புச் செய்ய முஸ்லிம்கள் முன்வரக் கூடாது. அவ்வாறு செய்தால் பல இடங்களில் வன்முறை மூலம் எமது பள்ளிவாயல்கள் அகற்றப்பட அது காரணமாக அமைந்துவிடும்.இதைக் கவனத்திற் கொண்டு முஸ்லிம்கள் நிதானமாகச் செயற்பட வேண்டும். கஃபாவைப் பாதுகாக்க வந்த அபாபீல்கள் இகி எந்தப் பள்ளிக்கும் வராது.அதனால் நாம் தான் நமது பள்ளிகளைக் காத்துக் கொள்ள வேண்டும்.
அதேவேளை நாம் ஒரு சிறந்த இஸ்லாமிய சமூகம் என்ற வகையில் நாட்டின் சட்ட ஒழுங்கை மதித்து, சட்ட ரீதியான முறையில் தீர்வை நாடவும் பொறுமையைக் கடைப்பிடிக்கவும்  இறையில்லத்தைப் பாதுகாக்க அனைவரும் ஒன்றாகக் குரல் கொடுக்கவும் முன்வரவேண்டும்.

வழிபாட்டுத்தளங்களைப் பாதுகாக்க இஸ்லாம் கூறும் தீர்வு

الَّذِينَ أُخْرِجُوا مِنْ دِيَارِهِمْ بِغَيْرِ حَقٍّ إِلَّا أَنْ يَقُولُوا رَبُّنَا اللَّهُ وَلَوْلَا دَفْعُ اللَّهِ النَّاسَ بَعْضَهُمْ بِبَعْضٍ لَهُدِّمَتْ صَوَامِعُ وَبِيَعٌ وَصَلَوَاتٌ وَمَسَاجِدُ يُذْكَرُ فِيهَا اسْمُ اللَّهِ كَثِيرًا وَلَيَنْصُرَنَّ اللَّهُ مَنْ يَنْصُرُهُ إِنَّ اللَّهَ لَقَوِيٌّ عَزِيزٌ   )الحج : 40 ، 41(
“எங்கள் இறைவன் அல்லாஹ்வே” என்று அவர்கள் கூறியதற்காகவே நியாயமின்றி அவர்களின் இல்லங்களிலிருந்து வெளியேற்றப்பட்டனர். மனிதர்களில் ஒருவர் மூலம் மற்றவரை அல்லாஹ் தடுத்திருக்காவிட்டால் மடங்களும், ஆலயங்களும், வழிபாட்டுத்தலங்களும், அல்லாஹ்வின் பெயர் அதிகமாகத் துதிக்கப்படும் பள்ளிவாசல்களும் இடிக்கப்பட்டிருக்கும். தனக்கு உதவி செய்வோருக்கு அல்லாஹ்வும் உதவுகிறான். அல்லாஹ் வலிமையுள்ளவன், மிகைத்தவன்.(அல்குர்ஆன் 22:40)

பல்வேறு மதத்தவர்கள் வாழும் இந்த நாட்டில் ஏற்பட்டுள்ள இனமுறுகளைத் தீர்த்து நல்லிணக்கம் ஏற்படுவதற்கான முக்கிய அறிவுரையை மேலுள்ள அல்குர்ஆனிய வசனம் கூறுகிறது. இந்த அறிவுரை முஸ்லிம்களின் உள்ளத்தில் ஆழப் பதிந்துள்ளதால் முஸ்லிம்கள் இதுவரை அவர்களின் பல பள்ளிகள் தாக்கப்பட்ட போதும் மாற்றாரின் எந்த வணக்கஸ்தளத்தின் மீதும் கை வைத்ததில்லை.

இந்த நாட்டில் ஒவ்வொரு மதத்தவர்களுக்கும் வழிப்பாட்டுத் தலங்கள் உள்ளன. அவற்றை அவர்கள் பெரிதும் மதிக்கின்றனர். பொதுவாக ஒரு மதத்தினரின் வழிபாட்டுத் தலத்தை இன்னொரு மதத்தினர் மதிக்க மாட்டார்கள். இது இயல்பான ஒன்று தான். இரு மதத்தவர்கள் மத்தியில் கலவரம் நடக்கும் போது, எதிர் மதத்தினரின் வழிபாட்டுத் தலங்கள் தான் முக்கியமாகத் தாக்கப்படுகின்றன. உணர்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுத்து அறிவுப் பூர்வமாகச் சிந்திக்காததன் விளைவாகத் தான் இந்த நிலை ஏற்படுகிறது.

ஒவ்வொரு மதத்தினரும் தமது வழிபாட்டுத் தலங்களை, தமது சொத்துக்களை விடப் பெரிதாக மதிப்பதால், தங்களின் வழிபாட்டுத் தலம் தாக்கப்படும் போது அது போன்ற எதிர்த் தாக்குதலில் இறங்குவார்கள். எனவே, பிற மத வழிபாட்டுத் தலங்கள் மீது நடத்தும் தாக்குதல் உண்மையில் நம் வழிபாட்டுத் தலங்கள் மீது நடத்தும் தாக்குதலாக அமைந்து விடுகிறது.

“உங்களில் சிலர் மூலம் சிலரை அல்லாஹ் தடுத்திருக்காவிட்டால் பள்ளி வாசல் உட்பட அனைத்து மதத்தினரின் வழிபாட்டுத் தலங்களும் தகர்க்கப்பட்டு விடும்” என்ற அறிவுப்பூர்வமான வழிகாட்டுதலை இவ்வசனம் நமக்கு வழங்குகிறது.

கோவில்களோ, கிறிஸ்தவ மற்றும் பவுத்த வழிபாட்டுத் தளங்களோ முஸ்லிம்களின் பார்வையில் வழிபாட்டுத் தலங்களாக இல்லாத போதும், அவற்றைத் தாக்கும் உரிமை கிடையாது என்பதைக் காரணத்துடன் இவ்வசனம் தெளிவு படுத்துகிறது.

இந்த அறிவுபூர்வமான அறிவுரையை முஸ்லிம்கள் கடைப்பிடடிப்பது போன்று மற்றவர்களும் கடைப்பிடித்தால் நாட்டில் சமாதானம் தானாகவே ஏற்பட்டுவிடும். இதைக் கவனத்திற் கொள்வார்களா?!
Share this post :
 
Support : Creating Website | Team Lanka Now | Intelligent
Copyright © 2011. Lanka Now - All Rights Reserved
Template Created by Creating Website Published by Intelligent
Proudly powered by Team lanka Now