காட்டு ஆட்சி என்றால் பொலிஸ், நீதிமன்றம், பாராளுமன்றம் எதற்கு?

காட்டாட்சி என்றால் பொலிஸ், நீதிமன்றம், பாராளுமன்றம் எதற்கு?பலம் உள்ளவர்கள், பலமற்றவர்களை அடித்து, பிடித்து, குதறி கொல்வது என்பது காட்டு விலங்குகளின் சட்டம். நாட்டில் நடப்பதுவும் அதேவிதமான காட்டாட்சி என்றால் நாட்டுக்குள்ளே பொலிஸ், நீதிமன்றம், பாராளுமன்றம் ஆகியவை எதற்கு?

சட்டத்திற்கு புறம்பாக நடைபெறும் கடத்தல்கள், சட்டம் இயற்றும் கெளரவ பாராளுமன்ற உறுப்பினர்களையும், அந்த சட்டத்தை அடிப்படையாக கொண்டு நீதிமன்றங்களில் தீர்ப்புகள் வழங்கும் கெளரவ நீதிபதிகளையும், அதே சட்டத்தை அமுல்படுத்த கடமைபட்டுள்ள போலிஸ் அதிகாரிகளையும் கோமாளிகளாக்கியுள்ளது என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார்.

முன்னணி சமவுடமை கட்சியின் தலைவர்களான குமார் குணரத்தினம், திமுது ஆடிகள ஆகியோர் கடத்தப்பட்டது தொடர்பில் இன்று (09) கொழும்பில் நடைபெற்ற அனைத்துக்கட்சி ஊடகவியலாளர் மாநாட்டில், உரையாற்றிய மனோ கணேசன் மேலும் கூறியதாவது,

இந்த கடத்தல்களுக்கு அரசாங்கமே பொறுப்பு கூறவேண்டும். இன்று கடத்துவதற்கும், கடத்தப்பட்டவர்களை விடுவிப்பதற்கும் அதிகாரம் கொண்ட ஒரே சக்தி அரசாங்கம் மட்டுமே ஆகும். ஆயுத பலம் அரசாங்கத்திற்கு மாத்திரமே இருக்கின்றது. அதில் தப்பு இல்லை.

ஆனால் அந்த ஆயுத பலம் மக்களை காப்பாற்றுவதற்காக பயன்பட வேண்டும். இந்த அரசாங்கம் அதை செய்யவில்லை. தமது சொந்த அரசியல் தேவைகளுக்காக அரச ஆயுத பலத்தை அரசாங்கம் பயன்படுத்துகிறது என நான் நேரடியாக அரசாங்கத்தை குற்றம் சாட்டுகிறேன். நடைபெற்றுள்ள கடத்தல்களுக்கு அரசாங்கமே பதில் கூறியாகவேண்டும்.

கடந்த எழுபது நாட்களில் 35 கடத்தல் சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. அதாவது இரண்டு நாட்களுக்கு ஒன்று என்ற விகிதத்தில் நடந்துள்ளன. இவற்றில் பெரும்பாலானவை நமது தேசிய தலைநகரில் நடந்துள்ளன.

கடந்த யுத்தத்தின் போது கொழும்பில் நாளொன்றுக்கு 10 கடத்தல் சம்பவங்கள்கூட நடந்தன. யுத்தம் முடிவடைந்ததும் அவை குறைந்தன. இன்று மீண்டும் கடத்தல், காணாமல் போதல் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. கடத்தலுக்கு பயந்து கொழும்புக்கு வருவதற்கு மக்கள் பயப்படும் சூழல் இன்று உருவாகிவருகிறது.

காணாமல் போனவரது, பாஸ்போர்ட் இலக்கம் என்ன, விசா இலக்கம் என்ன என்ற சிறுபிள்ளைதனமான கேள்விகளை தவிர்த்து இந்த அரசாங்கம் கடத்தியவர்களை விடுவிக்க வேண்டும்.

அரசாங்கத்தில் உள்ள இடதுசாரி தலைவர்களான வாசுதேவ, திஸ்ஸ விதாரண, டிவ் குணசேகர ஆகியாரை கேட்கிறேன். ஸ்ரீலங்கா சுதந்திர கட்சில் உள்ள நியாயமான சிந்தனை கொண்டோரை கேட்கிறேன். சட்டத்திற்கு புறம்பான கடத்தல்களை நீங்கள் ஏற்றுகொள்கிறீர்களா?

முன்னணி சமவுடைமை கட்சியுடன் எமக்கு பல கருத்து முரண்பாடுகள் உள்ளன. ஆனால் இந்த மனித உரிமை விடயத்தில் நாம் அனைவரும் ஒன்றுபடுகிறோம். எதிர்கட்சி செயல்பாட்டாளர்களை கடத்தி அழிப்பதற்கு இந்த அரசாங்கத்திற்கு நாம் இடம் தர முடியாது.
Share this post :
 
Support : Creating Website | Team Lanka Now | Intelligent
Copyright © 2011. Lanka Now - All Rights Reserved
Template Created by Creating Website Published by Intelligent
Proudly powered by Team lanka Now