ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலை முற்றுகையிட்டு தலிபான்கள் தீவிர தாக்குதல்!(வீடியோ)

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலை  நேற்று (ஞாயிற்றுக்கிழமை) காலை முதல் முற்றுகையிட்டுள்ள தலிபான்கள் அங்கு தீவிர தாக்குதல் நடத்தியுள்ளதாக  வெளியாகியுள்ளன.

தலைநகர் காபூலின் மையப்பகுதியில் வெளிநாட்டுத் தூதரகங்கள் அமைந்துள்ள பகுதியில் நடத்தப்பட்டுள்ள இந்தத் தாக்குதல் பலமணி நேரமாக நீடித்துள்ளது.

 ஆப்கான் நாடாளுமன்றம் மற்றும் அதிபரின் மாளிகையும் தாலிபான்களின் அதிரடித் தாக்குதலுக்கு உள்ளா‌‌கி இருக்கின்றன. மேலும் நாடாளுமன்றத்தின் மீது ராக்கெட் குண்டுகள் வீசித் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், நகரின் மேலும் பல இடங்களிலும் குண்டு வெடிப்பு இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

அதிபரின் மாளிகை அருகில் இருக்கும் ஸ்டார் ஹோட்டல் வளாகம் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் அங்கு பெரும் தீச்சுவாலை கிளம்பியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் ஜலாலாபாத் விமானநிலையத்தைக் கைப்பற்றவும் தாலிபான்கள் முயற்சித்துள்ளனர். அங்கும் தற்கொலைத் தாக்குதல் நடந்துள்ளது.

தாக்குதல்களுக்குப் பொறுப்பேற்றுள்ள தாலிபான்கள், தாங்கள் மேற்கொண்ட தாக்குதல்களில் பெரும் எண்ணிக்கையான தற்கொலைப் படையினர் பங்கேற்றுள்ளதாக அறிவித்துள்ளனர்.  ஜேர்மனிய தூதரகம் மற்றும் நேட்டோப் படைகளின் தலைமையகம் ‌ஆகியவற்றை தகர்ப்பது தங்கள் இலக்கு என தலிபான்களின் செய‌தித் தொடர்பாளர் ‌ஸைபுல்லா முஜாஹித் தெரிவி‌த்துள்ளார்.

இந்நிலையில் ஜேர்மனிய தூதரகம் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகவும், தற்போது அத் தூதரகம் தீப்பிடித்து எரிந்து கொண்டிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது. மேலும் வெளிநாட்டுத் தூதரகங்கள் அமைந்திருக்கும் அப்பகுதியில் பல முனைகளில் இருந்தும் தாலிபான்கள் நேரடி மோதலில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை இத்தாக்குதல்களை கட்டுப்படுத்த ஆப்கான் ராணுவத்தினரும் பதில் தாக்குதலில் ஈடுபட்டுள்ளதாகவும், லோகார் மற்றும் பாக்டியா மாகாணங்களிலும் கடும் சண்டை நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதில் பாக்டியாவில் காவலர் குடியிருப்பான கார்டெஸ் நகரத்தில் உக்கிரமான சண்டை நடைபெற்றுள்ளது.

தாலிபான்களின் இந்தத் தாக்குதல்கள் காரணமாக காயமடைந்தவர்களின் எண்ணிக்கை இதுவரை தெரியவில்லை. எனினும் தலிபான் தரப்பில் 13 போராளிகள் கொல்லப்பட்டிருப்பதாக ஆப்கான் அரசு தெரிவித்துள்ளது. இதற்கிடையே தாக்குதலில் ஈடுபட்ட நான்கு தாலிபான்களை ராணுவத்தினர் கைது செய்து அதிபர் மாளிகை அருகேயுள்ள ஹோட்டலில் தடுத்து வைத்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.  தீவிரவாதத் தாக்குதலால் காபூலில் பெரும் பதட்டம் நிலவி வருகிறது.

ஆப்கன் எல்லையில் உள்ள பாகிஸ்தான் சிறையில் இருந்து தலிபான்கள் அதிரடித் தாக்குதலை நடத்தி 400-க்கும் மேற்பட்ட கைதிகளை விடுவித்துச் சென்ற நிலையில் ஆப்கன் தலைநகரில் தாக்குதல் நடத்தப்பட்டிரு‌ப்பது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையே ஆப்கானிஸ்தானில் உள்ள இந்தியர்கள் பாதுகாப்பாக இருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

ஆப்கானிஸ்தானில் நடைபெற்ற தற்கொலைத் தாக்குதலின் போது அங்குள்ள இந்தியத் தூதரகத்தில் முக்கியமான அதிகாரிகள் யாரும்  பணியில் இல்லை என்று கூறப்படுகிறது. தாக்குதல் நடைபெற்ற இடத்திலிருந்து சற்றுத் தள்ளி இருப்பதன் காரணமாக தூதரகத்திற்கும் பாதிப்புகள் ஏதும் இல்லை.

அதே போல தாக்குதலில் இந்தியர்கள் யாரும் காயம் அடையவில்லை என்றும் தூதரக அதிகாரிகள் உறுதி படுத்தி உள்ளனர்.  பாதுகாப்பாக வீடுகளுக்குள் இருக்கும்படி காபூலில் உள்ள இந்திய தூதரகம் இந்தியர்களை எச்சரித்துள்ளது.  காபூலில் உள்ள இந்திய தூதரகத்தின் மீது  கடந்த ஆண்டு  தீவிரவாதிகள் தாக்குதல் நடந்தியதையடுத்து அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
Share this post :
 
Support : Creating Website | Team Lanka Now | Intelligent
Copyright © 2011. Lanka Now - All Rights Reserved
Template Created by Creating Website Published by Intelligent
Proudly powered by Team lanka Now