பள்ளிவாசல் தாக்குதலின் பின்னணி: ஹெல உறுமய மீது மனோ குற்றச்சாட்டு

தம்புள்ள ஜும்ஆப் பள்ளிவாசல் தாக்கப்பட்டதில் இனவாதக் கட்சியான ஜாதிக ஹெல உறுமயவுக்கே நேரடியான தொடர்பு இருப்பதாக ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் குற்றம்சாட்டினார்.

கொழும்பு தெவட்டகஹ பள்ளிவாசலுக்கு முன்பாக வெள்ளிக்கிழமை ஜும்ஆத் தொழுகையின் பின்னர் இடம்பெற்ற பாரிய எதிர்ப்பு ஆர்ப்பாட்டப் பேரணியில் இணைந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே மனோ கணேசன் மேற்கண்டவாறு கூறினார்.
இந்த ஆர்ப்பாட்டப் பேரணியில் முஸ்லிம்களுடன் தமிழ், சிங்கள அரசியல் தலைவர்கள், பொது அமைப்புகள் பலவும் கலந்துகொண்டன.

இங்கு தொடர்ந்து பேசிய மனோ கணேசன் தெரிவித்ததாவது;
”இந்நாட்டில் இன்று இனவாதத்தையும் பிரிவினைவாதத்தையும் முன்னெடுக்கும் கட்சி ஜாதிக ஹெல உறுமய ஆகும். தம்புள்ள பள்ளி உடைப்பு தொடக்கம் நாட்டில் இன்று முன்னெடுக்கப்படும் அனைத்து இஸ்லாமிய, இந்து, கிறிஸ்தவ மதஸ்தலங்கள் உடைப்பு சம்பவங்களையும் இவர்கள் நியாயப்படுத்துகிறார்கள். இந்த மதவாத சிந்தனைக்கு பின்னாலே இவர்கள்தான் இருக்கிறார்கள். கோயில்களையும் பள்ளிகளையும் தேவாலயங்களையும் உடைப்பதன் மூலம் இவர்கள் இன்று நாட்டை உடைக்கிறார்கள். ஹெல உறுமயவின் முன்னோர்களின் நடவடிக்கையே தமிழர்கள் மத்தியில் பிரிவினை சிந்தனை ஏற்படக் காரணமாக அமைந்தது. இன்று முஸ்லிம் மக்கள் மத்தியிலும் பிரிவினை சிந்தனை ஏற்பட இவர்களே காரணமாக அமைகிறார்கள். அதனால்தான் இந்நாட்டில் பிரிவினையைத் தூண்டும் இனவாத கட்சி என ஜாதிக ஹெல உறுமயவை நான் நேரடியாகக் குற்றம்சாட்டுகிறேன்.

இஸ்லாமிய சகோதரர்களின் மத நிறுவனங்களின் மீது சமகாலத்தில் நடத்தப்பட்ட முதல் தாக்குதல் இதுவல்ல. பலாங்கொடையில் மலையேறி சென்று தாக்கினார்கள். அநுராதபுரத்தில் தாக்கி அழித்தார்கள். இன்று தம்புள்ளயில் காடைத்தனம் அரங்கேறியுள்ளது. அங்கு ஒரு விஷ்ணு மற்றும் காளி கோயிலையும் பயமுறுத்தி உள்ளார்கள்.

தம்புள்ளயில் பள்ளியைத் தாக்கி சேதப்படுத்திவிட்டு தசமில்லை என்ற அறிவிப்பு வேறு வெளியிடப்பட்டுள்ளது. இது மரமேறி விழுந்தவனை மாடுமுட்டிய கதை ஆகும். தற்போது இரண்டு புதுக்கதைகள் விடுகிறார்கள். அதாவது, ஜனாதிபதி நாடு திரும்பியதும் நல்ல முடிவு காண்போம் என்று சொல்கிறார்கள். எங்களுக்கு தெரிந்தவரை அவர் முடிவை எடுத்து சொல்லிவிட்டுதான் வெளிநாடு போனார். அடுத்தது புதிய இடத்தில் விஸ்தாரமான புதுப்பள்ளியைக் கட்டித் தருகிறோம் என்று சொல்கிறார்கள். இது எப்படி என்றால் நாளை நமது வீடுகளுக்குள் நுழைந்து உங்கள் அம்மாவுக்கு வயதாகிவிட்டது. அவர்களை அனுப்பிவிட்டு புதிதாய் ஒரு தாயைத் தருகிறோம். வீட்டில் வைத்துக்கொள்ளுங்கள் என்று சொல்லுவதைப் போன்றது ஆகும்.

பள்ளியை உடைத்தால் உடையுங்கள். ஆனால், வேறு ஒரு இடத்தில் பள்ளியைக் கட்டித் தருகிறோம் என்று சொல்லாதீர்கள். நினைத்த நினைத்த இடங்களில் எல்லாம் மாற்றி மாற்றி கட்டுவதற்கு இது மனிதர்கள் வாழும் வீடு அல்ல. நீங்கள் உடையுங்கள். ஆனால், உடைப்பீர்களானால் அந்த உடைப்பு வரலாற்றில் இடம்பெறும் என்பதை மறவாதீர்கள். ஒரு நாள் வரலாற்றுக்கு நீங்கள் பதில் சொல்லியே ஆகவேண்டும் என்பதையும் மறவாதீர்கள். உடைப்பவர்கள் மட்டும் அல்ல, உடைப்பவர்களுக்கு துணை இருப்பவர்களும் வரலாற்றுக்கு பதில் சொல்ல வேண்டும்.

இந்த நிலைப்பாட்டில் முஸ்லிம் மக்களும் தலைவர்களும் உறுதியுடன் இருக்க வேண்டும். நியாயசிந்தை கொண்ட தமிழ், சிங்கள மக்கள் உங்களுக்கு முழு அளவில் ஒத்துழைப்பாக இருப்பார்கள்.” என்றும் அவர் அங்கு தெரிவித்தார்.
Share this post :
 
Support : Creating Website | Team Lanka Now | Intelligent
Copyright © 2011. Lanka Now - All Rights Reserved
Template Created by Creating Website Published by Intelligent
Proudly powered by Team lanka Now