கடந்த
வருடம் டிசெம்பர் மாதம் நடைபெற்ற க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை
விடைத்தாள்களை மதிப்பீடு செய்த ஆசிரியர்களுக்கான ஊதியங்களை அரசாங்கம்
வழங்கத் தவறியமைக்கு இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.இப்பரீட்சையின் பெறுபேறுகள் வெளியிடப்பட்ட பின்னரும் ஆசிரியர்களுக்கான கொடுப்பனவுகளை பரீட்சைகள் திணைக்களம் வழங்கவில்லை என அச்சங்கத்தின் பொதுச் செயலாளர் மஹிந்த ஜயசிங்க கூறினார்.
'பரீட்சைகள் திணைக்களத்திற்கான சுமார் 300 மில்லியன் ரூபாவை திறைசேரி வழங்கவில்லை என நாம் அறிந்துள்ளோம்' எனவும் அவர் தெரிவித்தார்.
'பரீட்சை நடைபெற்ற காலத்திலும், விடைத்தாள்களை மதிப்பீடு செய்த காலத்திலும் ஆசிரியர்களும் அதிபர்களும் உணவு, போக்குவரத்து மற்றும் ஏனைய செலவுகளுக்கு தமது சொந்த பணத்தை செலவிட வேண்டியிருந்தது.
அதிக செலவீனங்களுக்காக அறியப்பட்ட இந்த அரசாங்கம் இவர்களுக்கான கொடுப்பனவுகளை வழங்கத் தவறியமை குறித்து வெட்கப்பட வேண்டும்' எனவும் அவர் கூறினார்.
2500 ரூபாவுக்குள் எவரும் இறக்காமல் வாழ்க்கை நடத்த முடியும் என்பதை போன்ற கருத்துக்களை கூறாமல் சிங்கள – தமிழ் புத்தாண்டுக்கு முன்னர் ஆசிரியர்களுக்கான கொடுப்பனவுகளை வழங்க வேண்டும் எனவும் அச்சங்கம் கோரியுள்ளது.



