வடக்கு
கிழக்குப் பகுதிகளில் சட்டவிரோதக் கொலைகள் மற்றும் ஆள்கடத்தல்களில்
ஈ.பி.டி.பியும் கருணா குழுவும் ஈடுபட்டன- பிளேக்கின் ஆவணத்தை வெளியிட்டது
விக்கிலீக்ஸ்' என உதயன் பத்திரிகை செய்தி வெளியிட்டமைக்காக தனக்கு 1000
கோடி ரூபா மானநஷ்டஈடு தருமாறு கேட்டு ஈ.பி.டி.பி.தலைவரான பாரம்பரிய
சிறுகைத் தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா யாழ். மேல் நீதிமன்றில்
வழக்குத் தாக்கல் செய்துள்ளார்.
இதற்கு உதயன் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி விஜயதாச ராஜபக்ஷவின் வழிகாட்டலில் சட்டத்தரணி ரகுராஜ் நேற்று முன்தினம் பதில் மனுத் தாக்கல் செய்துள்ளார். இதன் பிரகாரம் ஜூலை மாதத்தில் விளக்க அறிக்கை சமர்ப்பிக்குமாறு நீதிமன்றம் தவணையிட்டுள்ளது.
உதயன் வெளியிட்ட செய்தியால் தனக்கு மன சஞ்சலமும் அவமானமும் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தே 1000 கோடி ரூபா நட்டஈடு கேட்டு அமைச்சர் இந்த மனுவைத் தாக்கல் செய்துள்ளார்.
உதயன் வெளியிட்ட குறித்த செய்தி வருமாறு; "வடக்கு கிழக்கில் ஆள்கடத்தல்கள் சட்டத்துக்குப் புறம்பான கொலைகள், கப்பம் பெறுதல் என்பவற்றில் ஈ.பி.டி.பியினரும் கருணா குழுவினரும் ஈடுபட்டிருந்தனர் என்று அமெரிக்கத் தூதுவராக இருந்த ரொபேர்ட் ஓ பிளேக் தெரிவித்துள்ளார்.
துணைப் படைகளான கருணா குழுவும் ஈ.பி.டி.பியும் ஆள்களைக் கடத்திக் கப்பம் பெறுவதற்குப் பாதுகாப்பு அமைச்சுச் செயலாளர் அனுமதி அளித்திருந்தார் என்று அமெரிக்கத் தூதருக்கு நம்பிக்கையான ஒருவர் தெரிவித்திருந்தார் என்று அந்த ஆவணம் கூறுகிறது.
விடுதலைப் புலிகளுடன் சேர்ந்து இயங்குபவர்கள் என்று சந்தேகிக்கப்படுபவர்களை கடத்துவதற்கும் விடுதலைப் புலிகளுடன் சண்டையிடுவதற்கும் கருணா குழுவினரும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி எனப்படும் ஈ.பி.டி.பியினரும் இலங்கை அரசுக்கு உதவிகளை வழங்கி வந்தனர்.
நிதி வளங்கள் இல்லாததால் துணைப் படையினருக்கான நேரடியான கொடுப்பனவுகளை ஜனாதிபதி சந்திரிகா தலைமையிலான இலங்கை அரசு நிறுத்தி விட்டது. பதிலாக கருணா மற்றும் ஈ.பி.டி.பியினர் பணத்துக்காக ஆள்களைக் கடத்தியதை அது கண்டும் காணாது இருந்தது.
இப்போதைய அரசு நிதி நெருக்கடியில் இருப்பதால் துணைப் படைகளுடன் உடன்படிக்கை ஒன்றுக்கு வந்தது. அதனடிப்படையில் ஈ.பி.டி.பி. மற்றும் கருணா குழுவினர் தமிழ் வர்த்தகர்களிடம் இருந்து கப்பம் பெறுவதற்கு பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ அனுமதி அளித்தார் என்று அந்த நபர் குறிப்பிட்டார்.
ஈ.பி.டி.பியும் கருணாவும் தமிழ் இனக் குழுமத்தின் மத்தியிலிருந்தே வந்தவர்களாக இருந்தபோதும் ஏனைய தமிழர்களுக்கு எதிராகவே அவர்களால் அனைத்துக் குற்றங்களும் அனைத்துச் சமயங்களிலும் நிகழ்த்தப்பட்டன.
ஈ.பி.டி.பி. தலைவர் டக்ளஸ் தேவானந்தாவின் துணையுடன் கருணாவால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் கிறிஸ்மஸ் தினத்தில் சுட்டுக் கொல்லப்பட்டார் என்று தாம் நம்புகிறார் என ..... என்பவர் தெரிவித்தார்.
ஈழ மக்கள் ஜனநாயக விடுதலை முன்னணி (ஈ.பி.ஆர்.எல்.எவ்.) விடுதலைப் புலிகளுக்கு எதிராக இயங்க ஆரம்பித்தது. அதிலிருந்து பிரிந்த ஒரு பகுதியினர் டக்ளஸ் தேவானந்தா 1994ல் நாடாளுமன்ற உறுப்பினராகத் தெரிவானதைத் தொடர்ந்து அவரது தலைமையில் ஈ.பி.டி.பியாக இயங்க ஆரம்பித்தனர். அவர்கள் அரசுடன் இணைந்திருந்தனர்.
ஓர் அரசியல் கட்சியாக ஈ.பி.டி.பி. பதிவு செய்யப்பட்டிருந்தபோதும் இராணுவத்தின் அனுமதியுடன் ஈ.பி.டி.பி. இன்னமும் அச்சமூட்டும் ஒரு துணைப் படையாகவே உள்ளது. அதிகாரபூர்வமற்ற வகையில் யாழ். குடாநாட்டின் ஆதிக்கங்களைக் குறிப்பாக தீவுப் பகுதிகளின் அதிகாரங்களை அது தன்னகத்தே வைத்துள்ளது.
பல்வேறு தரப்புகளின் கருத்துப்படி இராணுவத்தினருடன் சேர்ந்து இயங்குவதன் காரணத்தினால் கடத்தல்கள், சட்டத்துக்குப் புறம்பான கொலைகள், கப்பம் அறவிடுதல் போன்றவற்றில் தண்டிக்கப்படுவோம் என்கிற எந்தவிதப் பயமும் இன்றி ஈ.பி.டி.பியினால் ஈடுபட முடிகிறது. யாழ்ப்பாணத்தில் ஈ.பி.டி.பியினர் நடத்திய சட்டத்துக்குப் புறம்பான கொலைகள் குறித்து ..... என்பவர் எம்மிடம் விவரித்தார்.
ஒருவரைக் கொலை செய்வதற்கு ஈ.பி.டி.பியினர் தீர்மானித்து விட்டால் அது பற்றி முதலில் இராணுவத்தினருக்குத்தான் தகவல் தெரிவிக்கப்படும் என்று ..... தெரிவித்தார். பொதுவாகச் சொன்னால் யாழ்ப்பாணத்தின் ஒவ்வொரு சந்தியிலும் படையினரின் நிலைகள் இருக்கின்றன. அனுமதிக்கப்பட்ட ஒரு நேரத்தில் எல்லாப் படையினரும் ஐந்து அல்லது பத்து நிமிடங்கள் ஓய்வெடுத்துக் கொள்வது வழமை. அந்தச் சமயத்தில் மோட்டார் சைக்கிளில் வரும் முகமூடி அணிந்த நபர்கள் தாம் நினைத்த நபர்களைக் கொன்று விட்டுத் திரும்பிவிடுவார்கள்" என்பதே அந்த செய்தி.
இவ்வாறு உதயனில் எழுத்தப்பட்டிருந்ததாலேயே தனக்கு அவதூறு ஏற்பட்டுள்ளதாக டக்ளஸ் நீதிமன்றில் தாக்கல் செய்துள்ள மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
இந்தச் செய்தியில் உண்மை இல்லை என்றும் உண்மையான காரணங்களைக் கண்டறியாத வகையிலும் உறுதிப்படுத்தாத வகையிலும் தீய நோக்கத்துடன் உதயன் தனக்கு எதிராகச் செயற்பட்டுள்ளதாகவும் இதனை விக்கிலீக்ஸ் என்ற இணையத்தளத்தில் வெளியிடப்பட்டதாகத் தெரிவித்து தன்னை அவதூறுக்கு உள்ளாக்கி உள்ளார்கள் என்றும் மனு குறிப்பிடுகிறது.
இதற்காக 1000 கோடி ரூபா நட்டஈடு மற்றும் வழக்குத் தொடுக்கப்பட்ட தினத்திலிருந்து தீர்ப்பு வழங்கப்படும் தினம் வரையில் அதற்கான வட்டி மற்றும் வழக்குச் செலவு ஆகியன தனக்குத் தரப்பட வேண்டும் என்றும் டக்ளஸ் தனது மனுவில் கோரி இருக்கிறார்.