இலங்கை
தேசிய கிரிக்கெட் அணி வீரர் தினேஷ் சந்திமால் இந்தியன் பீரிமியர் லீக்
கிரிக்கெட் தொடர் நிறைவுபெற முன்னரே நாடு திரும்பியுள்ளார்.
இந்தியன் பீரிமியர் லீக் ராஜஸ்தான்
அணிக்கு சந்திமால் ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார். எனினும், அந்த
அணிசார்பாக சந்திமால் ஒரு போட்டியில்கூட களமிறக்கப்படவில்லை.
IPL போட்டி விதிமுறைகளுக்கமைய ஒரு
அணியில் தலா நான்கு வெளிநாட்டு வீரர்களே களத்தில் இறக்கப்பட வேண்டும்.
எனினும், சந்திமால் ஐந்தாவது வீரராகவே அந்த அணிக்கு ஒப்பந்தம்
செய்யப்பட்டிருந்தார்.
அந்த அணியில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள
முதல் நான்கு வெளிநாட்டு வீரர்களில் ஒருவருக்கு போட்டியில் பங்குபெற
முடியாத நிலை ஏற்பட்டால் மாத்திரமே சந்திமால் களமிறங்குவதற்கான
சந்தர்ப்பம் கிட்டும்.
இந்த நிலையில் IPL போட்டித் தொடர்
இறுதிக் கட்டத்தை நெருங்கியுள்ள நிலையில், சந்திமால் ஒரு போட்டியிலும்
களமிறங்காது நாடு திரும்பினார்.
பாகிஸ்தானுக்கு எதிராக இலங்கை அணி
அடுத்ததாக விளையாடவுள்ள நிலையில், இதற்கான பயிற்சியில் இலங்கை அணி
வீரர்கள் ஈடுபடத் தயாராகி வருகின்றனர். தற்போது சந்திமால் நாடு
திரும்பியுள்ளதால் இந்தப் பயிற்சிகளில் கலந்துகொள்ளும் வாய்ப்பு
சந்திமாலுக்கு கிட்டியுள்ளது.