சிறிலங்கா
அதிபரால் நியமிக்கப்பட்ட நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை
நடைமுறைப்படுத்த அவசர நடவடிக்கைளை சிறிலங்கா அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும்
என்று ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூனும் இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங்கும்
ஒருமித்த நிலைப்பாட்டுக்கு வந்துள்ளதாக புதுடெல்லித் தகவல்கள்
தெரிவிக்கின்றன.
இந்தியாவுக்கு இரண்டு நாள் பயணமாக வந்த ஐ.நா பொதுச்செயலர்
பான் கீ மூன், கடந்த வெள்ளிக்கிழமை புதுடெல்லியில் இந்தியப் பிரதமர்
மன்மோகன்சிங், மற்றும் வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம்.கிருஸ்ணா
உள்ளிட்டோருடன் பேச்சுக்களை நடத்தியிருந்தார்.
இந்தப் பேச்சுக்களில், சிறிலங்காவில் போருக்குப் பிந்திய நல்லிணக்கத்தை ஏற்படுத்துவது குறித்து முக்கியமாக கலந்துரையாடப்பட்டுள்ளது.
இதன்போது, சிறிலங்காவில் உண்மையான நல்லிணக்கப்பாட்டை எட்டுவதற்கு,
மகிந்த ராஜபக்ச அரசாங்கம் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை
நடைமுறைப்படுத்த அவசர நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியது அவசியம் என்று
இருதரப்புகளுக்கும் இடையில் இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளதாகவும்
புதுடெல்லித் தகவல்கள் கூறுகின்றன.
நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை முழுமையாக நடைமுறைப்படுத்த
வலியுறுத்தி, ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் அமெரிக்கா கொண்டு வந்த
தீர்மானத்தை இந்தியா ஆதரித்திருந்தது.
இந்தநிலையில் ஐ.நா பொதுச்செயலருடன் இதுபற்றி எட்டப்பட்டுள்ள இணக்கப்பாடு
சிறிலங்கா அரசுக்கு இந்த விடயத்தில் மேலும் அழுத்தங்களைக் கொடுக்கும்
என்று எதிர்பார்க்கப்படுகிறது.