யாழ் மாணவர்களின் சீரழிவுக்கு ரியூசன் வகுப்புக்களே காரணம்!

யாழ். மாவட்டத்தில் உள்ள தனியார் கல்வி நிறுவனங்கள் மாலை 5 மணிக்குப் பின்னர் இயங்க அனுமதிக்கக் கூடாது என்று யாழ்.போதனா வைத்தியசாலை சட்ட வைத்திய அதிகாரி சி.சிவரூபன் தெரிவித் துள்ளார்.

மாணவர்கள் போதைப் பாவனைக்கு ஆளாக வழி ஏற்படுத்திக் கொடுப்பதால் இந்தத் தடை அவசியம் என்று அவர் தெரிவித்தார்.

யாழ். சென் ஜோன்ஸ் கல்லூரி மண்டபத்தில் போதைவஸ்து பாவனைக்கு எதிராக அரச சார்பற்ற அமைப்பு ஒன்றால் நடத்தப்பட்ட கருத்தரங்கில் அவர் இவ்வாறு சுட்டிக்காட்டியுள்ளார். இதில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:

தனியார் கல்வி நிலையங்கள் மாலை 5 மணிக்குப் பின்னரும் இயங்குவதால் மது பாவனை, போதைப் பொருள் பாவனை மாணவர்களிடையே அதிகரிப்பதற்குக் காரணமாக இருக்கின்றன. அது மட்டுமன்றி துஷ்பிரயோக நடவடிக்கைகளும் அதிகரிப்பதற்கு இவை வழி ஏற்படுத்திக் கொடுக்கின்றன. பெற்றார் பிள்ளைகளைத் தனியார் கல்வி நிலையங்களுக்கு அனுப்பிவிட்டு அவர்கள் வருவார்கள் என்று வீட்டில் காத்திருக்க பிள்ளைகள் மாலை நேரங்களில் வீதிகளில் நின்று தவறான நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர். இந்த நிலையில் மாலை நேர வகுப்புகளை 5 மணியுடன் நிறைவு செய்யும் பட்சத்தில் இவ்வாறான சம்பவங்கள் அதிகரித்து செல்வதை கட்டுப்படுத்த முடியும்.

அது மட்டுமன்றி தனியார் கல்வி நிலையங்கள் பொறுப்புடன் செயற்படவேண்டும். அவர்கள் மாணவர்களின் பெற்றோர்களை அழைத்துக் கலந்துரையாடுவதுடன் வகுப்புகள் நடைபெறும் நேர விவரங்களையும் அவர்களுக்குத் தெரியப்படுத்த வேண்டும். இதேவேளை, தனியார் கல்வி நிலையங்களில் பாதுகாப்பான குடிதண்ணீர் வசதி, மலசலகூடவசதி, தொற்று நோய்கள் பரவக் கூடிய வகையில் உள்ள கட்டடங்கள் ஆகியவற்றை அந்தந்தப் பிரிவு பொது சுகாதாரப் பிரிவு பரிசோதகர்கள் கண்டிப்பாகக் கண்காணிக்க வேண்டும்.

இந்த வசதிகள் அற்ற நிலையில் இயங்கும் தனியார் கல்வி நிலையங்களை அந்தந்த உள்ளூராட்சி சபைகளுக்கு அறிவித்து அவையூடாக உரிமங்கள் இரத்துச் செய்யப்பட்டு அவற்றை மூட நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என்றார்.

யாழ். மாவட்டத்தில் உள்ள சுகாதாரத் திணைக்களம், பொலிஸ் திணைக்களம், மதுவரித் திணைக்களம், சுங்கத் திணைக்களம், கல்வித் திணைக்களம் ஆகியவற்றின் உத்தியோகத்தர்கள் இந்தக் கருத்தரங்கில் கலந்து கொண்டனர்.
Share this post :
 
Support : Creating Website | Team Lanka Now | Intelligent
Copyright © 2011. Lanka Now - All Rights Reserved
Template Created by Creating Website Published by Intelligent
Proudly powered by Team lanka Now