தலிபானுடன் அமெரிக்கா பேச்சுவார்த்தை தொடங்கியுள்ளது. இந்தப் பேச்சுவார்த்தைகள் கத்தார் நாட்டில் நடைபெறுகிறது.ராஜீய விவகாரங்களுக்காக கத்தார் நாட்டில் ஒரு அலுவலகத்தை தலிபான் கடந்த ஜனவரி மாதம் திறந்திருக்கிறது.
பேச்சுவார்த்தைகள் குறித்து முழு
விவரங்கள் எதுவும் தெரியாத நிலையில், இரு தரப்பும் தங்களது நிலைப்பாட்டில்
உறுதியாக இருக்கின்றன என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஐந்து நபர்கள் கொண்ட தலிபான் குழுவினர்
மூன்று வாரங்கள் முன்பே கத்தாருக்குச் சென்றுவிட்டது. இந்தக் குழுவுக்குத்
தலைவராக தய்யப் ஆகா உள்ளார். ஆப்கானிஸ்தான் தலிபானின் செய்தித் தொடர்பாளராக
உள்ள இவர், ஆப்கன் தலிபான் தலைவர் முல்லா முகமது உமரின் மைத்துனரும்
ஆவார்.
சவூதி அரபு நாட்டுக்கான தலிபானின்
தூதுவராக இருந்த மெüலவி ஷஹாபுதீன் திலாவர் இந்தக் குழுவில்
இடம்பெற்றுள்ளார். இந்தப் பேச்சுவார்த்தையின்போது, பாகிஸ்தானும் இடம்பெற
வேண்டும் என்று அமெரிக்காவும் தலிபானும் விரும்பியது. ஆனால்
ஆப்கானிஸ்தானின் கடும் எதிர்ப்பைத் தொடர்ந்து பேச்சுவார்த்தையில்
பாகிஸ்தான் கலந்து கொள்ளவில்லை.
சமீபத்தில் கத்தாருக்குச் சென்ற
ஆப்கானிஸ்தானின் வெளியுறவுத் துறை அமைச்சர் தலிபான் பேச்சுவார்த்தைக்
குழுவினரை சந்திப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர்களை
சந்திக்காமல் அவர் திரும்பிவிட்டார்.
தலிபானின் அலுவலகத்துக்கு எந்த வித அங்கீகாரமும் தர விரும்பவில்லை என்பதால் அவர் சந்திப்புக்கு ஒப்பவில்லை என்று கூறப்பட்டது.
தலிபான் அனுமதி… தலிபான் குழுவினர்
கத்தார் செல்லும் முன்னர், அந்த இயக்கத்தின் தளபதிகள் ஒரு கூட்டம்
நடத்தினர். இந்தக் கூட்டத்தின்போது, பேச்சுவார்த்தைகளுக்கு அனுமதி அளிக்கத்
தீர்மானம் செய்தனர்.
அதே சமயத்தில், ஆப்கானிஸ்தான் அரசுக்கு
எதிராகவும் அமெரிக்கா தலைமையில் உள்ள படைகளுக்கு எதிராகவும் நடத்தி வரும்
தாக்குதல்களைத் தொடர்வது என்றும் தலிபான் தளபதிகள் தீர்மானம்
செய்திருந்தனர்.
அமெரிக்காவுடன் பேச்சு நடத்துவதில் முல்லா
உமருக்கு உடன்பாடில்லை என்று கூறப்படுகிறது. ஆயினும், போர் என்று
வரும்போது பேச்சுவார்த்தையும் அதில் ஒரு பகுதிதான் என்றும் சில தளபதிகள்
கூறியதாகத் தெரிகிறது.
தலிபானுடன் அமெரிக்கா பேச்சுவார்த்தைகள் நடத்துவதை ஆப்கானிஸ்தான் அரசு வரவேற்கவில்லை என்று தலிபான் கூறி வருகிறது.
பேச்சுவார்த்தைகளை முறிக்க ஆப்கானிஸ்தான் முயற்சிக்கிறது என்று தலிபான் குற்றம்சாட்டியிருக்கிறது.
ஆப்கானிஸ்தானில் இருக்கும் வெளிநாட்டு
ராணுவப் படைகளை முற்றிலும் அகற்றினால்தான் தலிபான் போர் நிறுத்தம் என்பதைப்
பற்றி சிந்திக்கும் என்று தலிபான் தளபதிகள் கூறியுள்ளனர்.