தம்புள்ள பள்ளிவாசலை இடித்தழிக்கும் நோக்குடன் பௌத்த பேரினவாதிகளால்
மேற்கொள்ளப்படும் எதிர்ப்பு நடவடிக்கைகளால் சிறுபான்மை முஸ்லீம்
சமூகத்தவர்கள் மேலும் கோபம் கொண்டுள்ளனர்.
இவ்வாறு வளைகுடா நாட்டை தளமாகக்கொண்டு வெளிவரும் Gulf News ஆங்கில
ஊடகத்தில் பத்தி எழுத்தாளர் *Tariq A. Al Maeena எழுதியுள்ள சிறப்பு
கட்டுரையில் தெரிவித்துள்ளார்.
அதன் மொழியாகத்தைத்தை நாம் இங்கு வெளியிடுகின்றோம்
.
அதன் முழுவிபரமாவது,
26 ஆண்டுகளாகத் தொடரப்பட்ட வன்முறை மிக்க, மிகப் பயங்கரமான உள்நாட்டு
யுத்தமானது பல ஆயிரக்கணக்கான மக்களின் உயிர்களைப் பறித்து, அவர்களின்
சொத்துடைமைகளை நாசம் செய்து முடிவுக்கு கொண்டு வரப்பட்டதைத் தொடர்ந்து
சிறிலங்காவில் வாழும் பௌத்தர்கள், தமிழர்கள் மற்றும் முஸ்லீம் ஆகிய வேற்றின
மக்கள் மத்தியில் தேசிய மீளிணக்கப்பாடு உருவாக்கப்பட்டு, இந்த மக்களின்
வடுக்களை ஆற்றும் புதிய பாதையில் சிறிலங்கா பயணிக்கும் என
எதிர்பார்க்கப்பட்டது.
இருப்பினும், தமது கலாசாரத்தையும், மத அடையாளத்தையும்
அழித்தொழிப்பதற்கான முயற்சியில் சிறிலங்கா அரசாங்கம் ஈடுபடுவதாகவும்
இதற்காக தமக்குச் சொந்தமான நிலங்களில் புத்த விகாரைகள் அமைக்கப்பட்டு
வருவதாகவும் தமிழ் மக்கள் விசனம் கொள்கின்றனர். இந்நிலையில் அண்மையில்
இடம்பெற்ற சம்பவம் ஒன்று சிறிலங்காவில் வாழும் பிறிதொரு சிறுபான்மை
இனத்தின் மத அடையாளங்களை அழிப்பதற்கான முயற்சியாகக் காணப்படுகின்றது.
இந்தச் சம்பவம் தற்போது புதிய பரிணாமத்தை எட்டியுள்ளது.
பௌத்தர்களின் புனிதப் பிரதேசமாகக் காணப்படுவதால், தம்புள்ளவில் உள்ள,
கடந்த 65 ஆண்டு கால பழமை கொண்ட பள்ளிவாசல் ஒன்றை இடித்தழிப்பதற்கான உத்தரவை
சிறிலங்காப் பிரதமர் டி.எம்.ஜெயரட்ன வழங்கியிருந்தார். இச்சம்பவத்தை
அடுத்து கொதித்தெழுந்த உள்ளுர் அமைப்புக்கள் இது தொடர்பாக தமது கண்டன
அறிக்கையை வெளியிட்டபோது, இந்தப் பள்ளிவாசல் வேறொரு இடத்துக்கு
மாற்றப்படவுள்ளதாகவும் சிறிலங்காப் பிரதமர் அறிவித்திருந்தார்.
தம்புள்ளவில் அமைந்துள்ள பள்ளிவாசல் முன் கூடிய பௌத்த பேரினவாதிகள் அதனை
இடித்தழிப்பதற்கான முயற்சியை எடுத்த பின்னரே முஸ்லீம் சமூகம் இதற்கான தனது
கண்டனத்தை வெளியிட்டிருந்தது.
சிறிலங்காவில் தொடரப்பட்ட உள்நாட்டு யுத்தத்தின் போது பாதிப்படைந்து,
துன்பங்களை அனுபவித்தது மட்டுமல்லாது, இதற்காக தமது உயிர்களை விலையாகக்
கொடுத்த சிறுபான்மை முஸ்லீம் சமூகத்தவர்கள் தம்புள்ள பள்ளிவாசலை
இடித்தழிக்கும் நோக்குடன் பௌத்த பேரினவாதிகளால் மேற்கொள்ளப்படும் எதிர்ப்பு
நடவடிக்கைகளால் மேலும் கோபம் கொண்டுள்ளனர்.
உள்நாட்டு யுத்தத்தின் போது, சிறிலங்கா அரசாங்கத்துக்கும் தமிழ்ப்
புலிகளுக்கும் இடையில் இடம்பெற்ற தாக்குதல் நடவடிக்கைகக்குள் அகப்பட்டுக்
கொண்ட முஸ்லீம் மக்கள் கிராமம் விட்டு கிராமம் நோக்கி இடம்பெயர
வேண்டியிருந்தனர். இவர்கள் தமது பள்ளிவாசல்களில் தொழுகைகளை நடாத்தி போதும்
தொடர்ந்தும் யுத்தத்தின் விளைவுகளைத் தாங்கிக் கொண்டனர். இவர்களது வயல்
நிலங்கள் யுத்தத்தின் விளைவால் அழிக்கப்பட்டது. அத்துடன் இவர்கள் தமது
வர்த்தக மையங்களை மூடவேண்டிய நிலைக்கும் தள்ளப்பட்டனர். யாழ்ப்பாணத்தில்
வாழ்ந்த முஸ்லீம் மக்கள் அவர்களது சொந்த இடங்களிலிருந்து
விரட்டியடிக்கப்பட்டதுடன், அவர்களது சொத்துக்களும், உடைமைகளும்
களவாடப்பட்டன.
இந்நிலையில், தம்புள்ள புனிதப் பிரதேசமாக உள்ளதால், அங்குள்ள முஸ்லீம்
பள்ளிவாசல் வேறிடத்துக்கு மாற்றப்பட வேண்டும் என்ற அறிவிப்பும் இதற்காக
மேற்கொள்ளப்பட்ட அழிப்பு நடவடிக்கையும் முஸ்லீம் மக்களை வேதனையும்
அதிர்ச்சியும் கொள்ள வைத்துள்ளது. “தங்கத்தால் கட்டப்பட்டாலும் கூட,
பள்ளிவாசலை வேறொரு இடத்துக்கு மாற்றுவதற்கு முஸ்லீம் சமூகம் ஒருபோதும்
சம்மதிக்காது” என முஸ்லீம் காங்கிரஸ் கட்சியின் செயலாளரும், நாடாளுமன்ற
உறுப்பினருமான ஹசன் அலி தெரிவித்துள்ளார்.
“சிறிலங்கா காவற்துறையும், இராணுவமும் கண்காணித்துக் கொண்டிருக்கும்
போது, சிறுபான்மை மக்களின் வணக்கத் தலங்கள் அழிக்கப்படுகின்றது. ஆகவே
இவ்வாறான அழிப்பு நடவடிக்கைகளுக்க பாதுகாப்பு படையினரும் காவற்துறையினரும்
துணைபோகின்றனர் என்பது வெளிப்படை. சட்டத்தைப் பாதுகாக்க வேண்டிய இவர்களே
இவ்வாறான சம்பவங்களுக்கு காலாக உள்ளனர்” எனவும் ஹசன் அலி மேலும்
தெரிவித்துள்ளார்.
பள்ளிவாசலை அழிப்பதற்காக எடுக்கப்பட்ட ஆரம்ப முயற்சிகளுக்கு எதிர்ப்பு
காட்டப்பட்ட நிலையில், முஸ்லீம் அரசியல்வாதிகளுடன் மேற்கொள்ளப்பட்ட
கலந்துரையாடலை அடுத்து தம்புள்ள பள்ளிவாசலை பிறிதொரு இடத்துக்கு
மாற்றுவதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக சிறிலங்காப் பிரதமர்
அறிவித்துள்ளார். எவ்வாறெனினும், பிரதமரின் இந்த அறிக்கையை முன்னணி
முஸ்லீம் அரசியல்வாதிகளான மூத்த அமைச்சர் ஏ.எச்.எம்.பௌசி, பிரதி அமைச்சர்
எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா, மேல் மாகாண ஆளுநர் அலாவி மௌலானா மற்றும்
நாடாளுமன்ற உறுப்பினர் அப்தும் காதர் ஆகியோர் திட்டவட்டமாக மறுத்துள்ளனர்.
தற்போது தம்புள்ள பள்ளிவாசல் அமைக்கப்பட்டுள்ள நிலம் 1964ல் சட்டபூர்மாக
வாங்கப்பட்டதாகவும் முஸ்லீம் தலைமைகள் தெரிவித்துள்ளதுடன், இரு ஆண்டுகளின்
முன்னரே இது புனிதப் பிரதேசமாக்கப்பட்டது என்ற பௌத்தர்களின் குற்றச்சாட்டை
முஸ்லீம் தலைமைகள் அடியோடு மறுத்துள்ளன.
“இப்பள்ளிவாசல் கடந்த 65 ஆண்டுகாலமாக இந்த இடத்தில் உள்ளபோது, இது இரு
ஆண்டுகளின் முன்னரே அமைக்கப்பட்டதாக கூறுவதானது உண்மையில் மிகப் பிழையான
ஒன்றாகும். இது Waqf சட்டத்தின் கீழ் சட்ட ரீதியான அங்கீகாரத்துடன்
கட்டப்பட்டதற்கான அனைத்து ஆதாரங்களும் எம்மிடம் உள்ளன. இந்நிலையில்
இப்பள்ளிவாசல் இடித்து அழிக்க வேண்டும் எனவும், இது அதிகாரம் வழங்கப்படாத
இடத்தில் கட்டப்பட்டுள்ளது எனவும் பிரதமர் அறிவித்துள்ளதானது முற்றிலும்
பொய்யானதாகும். யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த முஸ்லீம் பெண்ணொருவர், தம்புள்ள
பள்ளிவாசல் அமைக்கப்பட்டுள்ள நிலத்தை ஆங்கிலேயர் ஒருவரிடமிருந்து
வாங்கியிருந்தார். அதிலிருந்து இந்த இடத்தில் பள்ளிவாசல்
அமைக்கப்பட்டுள்ளது” என இஸ்லாமிய ஒருமைப்பாட்டு முன்னணியின் தலைவரும்
கொழும்பு மாநகரத்தின் முன்னாள் பிரதி மேயருமான அசாட் சலி தெரிவித்துள்ளார்.
“இதன் பின்னர் பள்ளிவாசலுடன் இணைந்துள்ள நிலத்தை 1995ல் பள்ளிவாசல் அதிகாரிகள் வாங்கினர். இந்நிலையில் சிறிலங்காப் பிரதமரால் விடுக்கப்பட்ட அறிக்கையானது நாட்டிலுள்ள பௌத்த மதத்தவர்களை தவறான வழிக்கு இட்டுச் செல்கின்றது. இவ்வாறான பொறுப்பற்ற அறிக்கை ஒன்றை பிரதமர் வெளியிட்டிருக்கக் கூடாது” எனவும் அசாட் சலி மேலும் தெரிவித்துள்ளார்.
இவ்வாறான குழப்ப நிலை தொடர்பாக சிறிலங்காவின் எதிர்க்கட்சித் தலைவர்
ரணில் விக்கிரமசிங்க எந்தவொரு பொது அறிக்கையையும் வெளியிடாத நிலையில்,
இவரது பிரதித் தலைவரான சஜித் பிறேமதாச, “சிறிலங்காப் பிரதமர் வெளியிட்ட
அறிக்கை பௌத்த மதம் சார்ந்தது அல்ல. பிரதமர் என்ற ரீதியில் ஜெயரட்ண
இவ்வாறானதொரு பிழையான, தவறான அறிக்கையை வெளியிட்டுள்ள நிலையில், பிரதமர்
செயலகமே இவ்வாறான அறிக்கைகளை வெளியிட்டால் நாம் எவ்வாறு இந்த நாட்டை
அபிவிருத்தி செய்ய முடியும்?” எனவும் சஜித் பிறேமதாச கேள்வி
எழுப்பியுள்ளார்.
கடந்த பல பத்தாண்டுகளாக யுத்த சூழ்நிலைக்குள் வாழ்ந்த தமிழ், முஸ்லீம்
மற்றும் ஏனைய இனத்து மக்கள் நாட்டில் சமாதானத்தையும், அமைதியை
எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருந்த வேளையில் நாட்டில் இவ்வாறான
குழப்பங்கள் ஏற்பட்டுள்ளன. அண்மையில் தம்புள்ளவில் ஏற்பட்ட குழப்பமானது
இனங்களுக்கிடையில் நல்லிணக்கத்தையும், சமாதானத்தையும், அமைதியையும் கொண்டு
வருவதற்கான தூரத்தை மேலும் அதிகரித்துள்ளது. சிறிலங்காவில் பௌத்த சிங்கள
மக்கள் மத்தியில் வாழும் தமிழ் மற்றும் முஸ்லீம் மக்கள் கடந்த ஆயிரம்
ஆண்டுகளுக்கு மேலாக பெரும் அச்சுறுத்தலுக்கு மத்தியில் வாழ்கின்றனர்.
*Tariq A. Al Maeena is a Saudi socio-political commentator. He lives in Jeddah, Saudi Arabia.