
பெண் குழந்தை பிறந்ததால் மூன்று மாதமாக
கொடுமைப் படுத்தி வந்த தந்தை கொடூரத்தின் உச்சக்கட்டமாக அக் குழந்தையின்
உடலில் சிகரெட்டால் சூடு வைத்து துன்புறுத்திய பிஞ்சு முகத்தில் மாறி மாறி
குத்தியதால் மருத்துவமனையில் கோமா நிலையில் அனுமதிக்கப்பட்டு உயிருக்கு
போராடிய குழந்தை மரணமானது.
கர்நாடகா மாநிலம் ஹசனை சேர்ந்தவர் உமர்
பரூக். சில ஆண்டுகளுக்கு முன் இவர் தன் மனைவியை விட்டு விட்டு
பெங்களூருக்கு வந்தார். இங்கு ரேஷ்மா பானுவை இரண்டாவதாக திருமணம்
செய்தார். குஷால் நகரில் வசித்து , சிவாஜி நகரில் பெயின்ட் கடையில் வேலை
பார்த்து வந்தார். மனைவியிடம் வரதட்சணை கேட்டு அடிக்கடி கொடுமைப்
படுத்தினார். பெண் குழந்தை பிறந்தால் உன் தாயார் வீட்டில் இருந்து ஒரு
இலட்சம் ரூபா வாங்கி வரவேண்டும் என்று கூறி அடிக்கடி தகராறு செய்துள்ளார்.
கடந்த மூன்று மாதங்களுக்கு முன்
இவர்களுக்குப் பெண் குழந்தை பிறந்தது. குழந்தைக்கு நேஹா அப்ரின் என பெயர்
சூட்டினர். குழந்தை பிறந்தத்தில் இருந்து உமர் வெறுப்பைக் காட்டி வந்தார்.
ஆண் குழந்தையை ஏன் பெற வில்லை என்று மனைவியையும் தொடர்ந்து
துன்புறுதியுள்ளார். இச் சம்பவம் மூன்று மாதமாகவே நடந்து வந்துள்ளது.
கடந்த ஆறாம் திகதி குழந்தையை கடுமையாக
அடித்து துன்புறுத்தியுள்ளார். குழந்தையின் உடம்பில் பல பகுதிகளில்
சிகரெட்டால் சூடு வைத்தார். குழந்தை அலறித் துடித்தது. அரக்கத் தனத்தை
விடாத பரூக் குழந்தையின் முகத்தில் தொடர்ந்து கண் மூடித்தனமாக தன் கையினால்
மாறி மாறி குத்தியுள்ளார். இதைப் பார்த்த குழந்தையின் தாயார் ரேஷ்மா
அலறித் துடித்து பேச்சு, மூச்சில்லாமல் இருந்த குழந்தையை சிவாஜி நகர்
பவுரிங் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தார். அங்கிருந்து வாணி
விலாஸ் குழந்தைகள் நல மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக குழந்தையை
எடுத்துச் சென்றனர். மருத்துவமனையில் குழந்தைக்கு தீவிர சிகிச்சை
அளிக்கப்பட்டு போதும் குழந்தை மரணமானது.
குழந்தையை தாக்கி விட்டு தலைமறைவாக இருந்த
பரூக் கடந்த ஞாயிற்றுக் கிழமை கைது செய்யப்பட்டார். பின்னர்
நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்ட பின் பெங்களூர் சிறையில்
அடைக்கப்பட்டார். மாநில குழந்தைகள் நலத்துறை தலைவர் மீனா நாயக் உடனடியாக
மருத்துவமனைக்கு நேரில் சென்று குழந்தையின் உடல் நலம் குறித்து
விசாரித்தார்.
மாநில மகளிர் ஆணையம், சிறுபான்மையினர்
ஆணையத் தலைவர்களுடன் ஆலோசனை நடத்தி உ மர் மீது கடும் நடவடிக்கை
மேற்கொள்ளப்படும் எனத் தெரிவித்தார்.
தாயார் ரேஷ்மா கண்ணீருடன் கூறியதாவது;
பெண் குழந்தை பிறந்ததில் இருந்து என் கணவர் அக் குழந்தையின் மீது
எரிச்சலடைந்தார். தினமும் அவர் வீட்டுக்கு வரும் போது குடித்து விட்டுத்
தான் வருவார். என்னுடன் சண்டை போடுவார். சம்பவத் தன்று குழந்தையை
கொடூரமாகத் தாக்கினார். ஏற்கனவே இரண்டு முறை குழந்தையைக் கொல்வதற்கு
முயற்சித்தார். குழந்தையின் தொட்டிலை ஆட்டுவது போன்று வேகமாக சுவற்றில்
மோதி குழந்தையைத் துன்புறுத்துவார். இதனால் குழந்தையின் உடல் நிலை கடுமையாக
பாதித்தது. சம்பவத்தன்று குழந்தையை கொடூரமாகத் தாக்கினார். கையினால்
குத்தினார். இதனால் குழந்தை அலறித் துடித்தது என்றார்.


