உலகின்
தலைசிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவர் சச்சின் தெண்டுல்கர். கிரிக்கெட்டில்
பல்வேறு சாதனைகளை புரிந்த அவருக்கு நாட்டின் உயரிய விருதான பாரத ரத்னா
விருது வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது. இந்திய அணி கடந்த ஆண்டு உலக கோப்பையை கைப்பற்றியது. 28 ஆண்டுகளுக்கு பிறகு உலக கோப்பையை வென்றது. இதை தொடர்ந்து தெண்டுல்கருக்கு “பாரத ரத்னா” விருது வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது.
சமீபத்தில் அவர் சர்வதேச போட்டியில் 100-வது சதம் அடித்து சாதனை படைத்தார். இந்த நிலையில் தெண்டுல்கருக்கு “பாரத ரத்னா” விருது வழங்க வேண்டும் என்று மராட்டிய அரசு பரிந்துரை செய்துள்ளது.
இது தொடர்பாக மராட்டிய சட்டசபையில் முதல்-மந்திரி பிரிதிவிராஜ் சவான் கூறியதாவது:-
உலக கோப்பைக்கு பிறகு மாநில கிரிக்கெட் வீரர்களை கவுரவித்தோம். அப்போதே மண்ணின் மைந்தனான தெண்டுல்கருக்கு “பாரத ரத்னா” விருது வழங்க பரிந்துரைக்க வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது.
மராட்டிய மைந்தனான அவர் கிரிக்கெட்டில் யாரும் செய்ய முடியாத சாதனைகளை புரிந்துள்ளார். இளம்தலைமுறையினருக்கு அவர் முன்மாதிரியாக திகழ்கிறார். எனவே அவருக்கு “பாரத ரத்னா” விருது வழங்க வேண்டும் என்று பரிந்துரை செய்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
தெண்டுல்கர் 100-வது சதம் அடித்தபோது மத்திய கிரிக்கெட் வாரிய துணைத் தலைவருமான ராஜீவ்சுக்லா தெண்டுல்கருக்கு “பாரத ரத்னா” விருது வழங்கி கவுரவிக்க வேண்டும் என்று கூறியிருந்தார். மராட்டிய அரசின் பரிந்துரை தொடர்பாக மத்திய அமைச்சரவை விரைவில் முடிவு எடுக்கும் என்று தெரிகிறது.

