தரமற்ற ஆணியே டைட்டானிக கப்பல் கவிழ காரணம்.அமெரிக்க ஆராய்ச்சியாளர் கண்டுபிடிப்பு


 இங்கிலாந்தின் சவுத்ஆம்டன் நகரில் இருந்து அமெரிக்காவின் நியூயார்க் நோக்கி கடந்த 1912,ம் ஆண்டு ஏப்ரலில் சென்ற ‘ஆர்எம்எஸ் டைட்டானிக்’ கப்பல் வடக்கு அட்லான்டிக் கடலில் பனிப் பாறையில் மோதி விபத்துக்குள்ளானது. பயணிகள், ஊழியர்கள் என 2,200,க்கும் அதிகமானோர் சென்ற கப்பலில் அவசர கால படகுகள் குறைவாக இருந்ததால், 710 பேர் மட்டுமே மீட்க முடிந்தது. 1500 பேர் பரிதாபமாக கடலில் மூழ்கி பலியாயினர். வரலாற்றில் நீங்காத இடம் பிடித்த இந்த சோக சம்பவத்தின் நூற்றாண்டு நினைவு தினம் அடுத்த வாரம் கடைபிடிக்கப்படுகிறது.

இதையொட்டி டைட்டானிக் விபத்து தொடர்பான பல தகவல்களை ஆராய்ச்சியாளர்கள் வெளியிட்டு வருகின்றனர். அமெரிக்காவை சேர்ந்த அறிவியல் ஆராய்ச்சியாளர் மற்றும் அறிவியல் கதை எழுத்தாளர் ரிச்சர்ட் கார்பீல்டு கூறியிருப்பதாவது: மெட்டலர்ஜி துறையில் அதிக அனுபவம் வாய்ந்த இன்ஜினியர்கள் டிம் போக், ஜெனிபர் ஹூப்பர் மெக்கர்ட்டி ஆகியோர் உடைந்த டைட்டானிக் கப்பலின் பாகங்களை ஆராய்ச்சி செய்தனர். அயர்லாந்தின் பெல்ஃபாஸ்ட் நகரில் உள்ள ஹார்லண்ட் உல்ஃப் தளத்தில்தான் டைட்டானிக் கப்பல் 1909,11ம் ஆண்டுகளில் கட்டப்பட்டது. அங்கு சேகரிக்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில், கப்பலின் அடிப்பகுதியை கோர்ப்பதற்கு பயன்படுத்தப்பட்ட ‘ரிவிட்’ (ஆணி) தரமானதாக இல்லை என்று தெரியவந்திருக்கிறது.

அந்த ரிவிட்கள் சரியாக வார்க்கப்படவில்லை. அவற்றை ஒழுங்கின்றி அடித்து கப்பலை கோர்த்துள்ளனர் என்றும் தெரியவந்தது. இதனால், கப்பலின் ஒரு பகுதி மற்ற பகுதிகளை விட உறுதித் தன்மை குறைவாக இருந்திருக்கிறது. அந்த பகுதி பனிப் பாறையில் இடித்ததும் உடைந்துவிட்டது என்று தெரியவந்துள்ளது.

செலவை குறைக்க வேண்டும் என்பதற்காக தரமற்ற ஆணிகள் மற்றும் பொருட்களை பயன்படுத்தியதே படுபயங்கர விபத்தையும் உயிரிழப்பையும் ஏற்படுத்திவிட்டது. ஆக, எப்படி தயாரித்தால் கப்பல் உறுதியாக இருக்கும் என்ற கணக்கில் கோட்டை விட்டிருக்கின்றனர். அடுத்ததாக, வெப்ப மாற்றம். 1912,ல் கரீபியன் கடல் பகுதியில் வழக்கத்தைவிட அதிக வெப்பம் காணப்பட்டது. இதனால், கடலுக்குள் நீரோட்டத்தின் வேகமும் அதிகமாக இருந்திருக்கிறது. லேப்ரடார் நீரோட்டத்தில் அடித்து வரப்பட்ட பனிப் பாறைகள் திரண்டு தடையை ஏற்படுத்தியிருக்கின்றன. லேப்ரடார் நீரோட்டமும் வடக்கு அட்லான்டிக் வளைகுடா நீரோட்டமும் இணைகிற இடத்தில் பனிப் பாறையில் மோதி டைட்டானிக் விபத்துக்குள்ளானது. கடலில் ஏற்பட்டிருந்த இயற்பியல் மாற்றங்களும் துரதிர்ஷ்டவசமாக கப்பல் விபத்துக்கு காரணமாகிவிட்டது. இவ்வாறு ரிச்சர்ட் கூறியுள்ளார்.
Share this post :
 
Support : Creating Website | Team Lanka Now | Intelligent
Copyright © 2011. Lanka Now - All Rights Reserved
Template Created by Creating Website Published by Intelligent
Proudly powered by Team lanka Now