விடுதலைப் புலிகள் தோல்வியடைந்தது ஏன்? காரணம் கூறுகிறார் கருணாநிதி!

இலங்கையில் இறுதிப் போரில் விடுதலைப் புலிகள் வெற்றிபெறாமல் வீழ்ந்து போனதற்குக் காரணம் ஓரணியாய் நின்று போரிடாததுதான் என்று திமுக தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக வெள்ளிக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:ஈழத் தமிழர்கள் மீது இன்றைக்குக் காட்டும் உணர்வுபூர்வமான அக்கறையை இலங்கையில் போர் நடைபெற்றபோதே காட்டியிருக்கக் கூடாதா என்ற ஆதங்கம் உலகெங்கும் பரவிக் கிடக்கும் தமிழர்களுக்கு இருப்பதை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது.

இறுதிப் போரின்போது ஆயிரக்கணக்கான ஈழத் தமிழர்கள் கொல்லப்பட்டதைத் தடுத்து நிறுத்தியிருக்கலாம் என்று எண்ணுகின்றனர்.

ஆனால் கேட்பவர்களுக்கே தெரியும். விடுதலைப் புலிகள் வெற்றியைப் பெறாமல் வீழ்ந்து போனதற்குக் காரணம் ஓரணியாய் நின்று போரிடாததுதான்.

சகோதர யுத்தம் வேண்டாம் என்று காலில் விழாத குறையாக ஒவ்வொரு அணியினரின் கரம் பிடித்து கெஞ்சிக் கேட்டும், அவர்களின் உள்பகையைத் தீர்க்க முடியவில்லை.

இந்த உள்பகையால் ஓர் இனம் பெற வேண்டிய வெற்றியின் காலகட்டத்தையே தள்ளிப் போட வேண்டிய சோக நிகழ்வாக அமைந்துவிட்டது.

இறுதி யுத்தம் நடைபெற்றபோது அதை தடுத்து நிறுத்துவதற்கு தமிழக அரசும், மத்திய அரசும் இயன்றவரை எல்லா நடவடிக்கைகளையும் செய்தது. ஆனால், இலங்கை அரசு கொடுத்த உறுதிமொழிகளையெல்லாம் மீறி, தமிழ்ப் போராளிகளைக் கொன்று குவித்தது.

சகோதர யுத்தத்தினால் ஏற்பட்ட சரிவைப் பயன்படுத்தியே இலங்கை அரசு வெற்றிபெற்றது. இருப்பினும், ஈழத் தமிழர்களுக்கு ஏற்பட்ட தோல்வி நிரந்தரமானது இல்லை.

களத்தில் மறைந்த அனைவருக்கும் இறுதி வணக்கத்தைத் தெரிவித்து, தமிழ் இனம் தலைநிமிர உடல், பொருள், ஆவி அனைத்தையும் தரத் தயங்கமாட்டோம் என்ற உறுதியுடன் அறப்போர் தொடர்ந்திட அணிவகுப்போம் என்று கருணாநிதி தெரிவித்துள்ளார்.
Share this post :
 
Support : Creating Website | Team Lanka Now | Intelligent
Copyright © 2011. Lanka Now - All Rights Reserved
Template Created by Creating Website Published by Intelligent
Proudly powered by Team lanka Now