பதிவு செய்யப்படாத 5 இணையத்தள விவகாரம்:


Web
சுதந்திர ஊடக அமைப்பின் மனு உச்ச நீதிமன்றத்தால் நிராகரிப்பு

இலங்கையில் பதிவு செய்யப்படாது காணப்படும் ஐந்து இணையத் தளங்களுக்கு நுழைவதை தடுத்துள்ளமை தொடர்பாக, சுதந்திர ஊடக அமைப்பு தாக்கல் செய்திருந்த அடிப்படை உரிமை மீறல் மனு விசாரணை எடுப்பதனை நிராகரித்த உச்ச நீதிமன்றம், கட்டணமின்றி அதனை நேற்று முன்தினம் (16.05.2012) தள்ளுபடி செய்தது.
மேற்படி மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளும் அளவிற்கு, அதில் எதுவித விடயமும் இல்லை என்பதனால், இதனை தள்ளுபடி செய்வதாக உச்ச நீதிமன்றம் தெரிவித்தது.
இலங்கையில் இயங்கிவரும் இணையத் தளங்கள் பதிவு செய்துகொள்ள வேண்டுமென அறிவிக்கப்பட்டதன் பின்னர், 45 இணையத் தளங்கள் தற்போது தகவல் மற்றும் ஊடகத்துறை அமைச்சிற்கு தமது விபரங்களை வழங்கி பதிவுசெய்து கொண்டுள்ளதாக பிரதி சொலிசிட்டர் ஜெனரல் ஷவீந்திர பர்ணாந்து நீதிமன்றத்திடம் தெரிவித்தார். எனினும் உரிமையாளர் அல்லது இயக்கிச்செல்பவர் பற்றிய தகவல்களை வழங்குவதற்கு விரும்பாத அல்லது அசட்டை காட்டும் ஒரு சில இணையத் ததளங்கள் மாத்திரம் அவ்வாறு பதிவு செய்துகொள்ளாமல் உள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்.

மேலும், அவர் குறிப்பிடுகையில், திரைக்குப் பின்னால் இருந்து மறைவான முறையில் இணையத் தளங்களை நடைமுறைப்படுத்தும் அவர்கள், திரைக்கு முன்னால் வருவதில்லை என்றும், அரச சார்பற்ற அமைப்புக்கள் மற்றும் ஏனைய அமைப்புக்கள் என்பவற்றினைப் பயன்படுத்தி, தமக்குள்ள தடைகளை அகற்றிக் கொள்வதற்கு உரிமையாளர்கள் இல்லாத இவ்வாறான இணையத்தளங்கள் முயற்சித்து வருகின்றன எனவும் பிரதி சொலிலிட்டர் ஜெனரல் ஷவீந்திர பர்ணாந்து உச்ச நீதிமன்றத்திடம் தெரிவித்தார்.

இதன்போது கருத்துத் தெரிவித்த சட்டத்தரணி யூ. எல். அலிசப்ரி, இவ்வாறு உரிமையாளர்கள் இல்லாத இணையத் தளங்களினால் வெளியிடப்படும் தகவல்கள் மற்றும் புகைப்படங்கள் என்பவற்றினை நீதிமன்றத்தின் முன் சமர்ப்பிக்க முடியாத அளவு மோசமானவை எனச் சுட்டிக்காட்டினார். இணையத் தளங்களை பதிவு செய்துகொள்ளுமாறு கூறுவதற்கான காரணம், அதன் உரிமையாளர் மற்றும் நடத்திச் செல்பவர்களை சரியாக இனங்கண்டு கொள்ளும் நோக்கிலாகும் எனவும் சட்டத்தரணி அலி சப்ரி வலியுறுத்தினார்.

இவ்வாறு தடுக்கப்பட்டுள்ள 'ஸ்ரீலங்கா மிரர்' இணையத்தளம் தேவையான தகவல்களை வழங்கி பதிவு செய்துகொண்டதுடன் பின்னர் உடனடியாக அதற்கான தடை அகற்றப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்.
எனவே, இதனடிப்படையில் தடை விதிக்கப்பட்டுள்ள இணையத் தளங்களும் தமது தகவல்களை வழங்கும் பட்சத்தில் உடனடியாகவே அவற்றிற்கான தடைகள் அகற்றப்படும் எனவும் சட்டத்தரணி அலி சப்ரி உச்ச நீதிமன்றத்திடம் தெரிவித்தார்.

பிரதம நீதியரசர் கலாநிதி ஷிரந்தி பண்டாரநாயக்க, நிமல் காமினி அமரதுங்க, ஆர். கே. எஸ். சுரேஷ் சந்திர ஆகிய உச்ச நீதிமன்ற நீதியரசர்கள் குழு முன்னிலையில் மேற்படி மனு அழைக்கப்பட்டது.
இம்மனுவை சுதந்திர ஊடக அமைப்பின் ஏற்பாடாளர் சுனில் ஜயசேகர மற்றும் அதன் நிறைவேற்று உறுப்பினர் உதய களுபஹன ஆகியோர் தாக்கல் செய்திருந்தனர்.

அரசாங்க தகவல் பணிப்பாளர் நாயகம் பேராசிரியர் ஆரியரத்ன எத்துகல, ஊடக அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல, அமைச்சின் செயலாளர் டப்ளியு. பீ. கனேகல, தொலைத் தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக் குழு மற்றும் அதன் பணிப்பாளர் அனுஷ பெல்பிட்ட ஆகியோர் இதன் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டிருந்தனர்.
மேற்படி மனு நேற்று முன்தினம் அழைக்கப்பட்ட போது, பிரதி சொலிசிட்டர் ஜெனரல் ஷவீந்திர பர்னாந்து மனு தொடர்பாக இரண்டு எதிர்ப்புக்களை தெரிவித்தார்.

அதன் பிரகாரகம் இந்த மனுவை முன்னெடுத்துச் செல்லும் அளவிற்கு மனுதாரர்களுக்கு சட்ட ரீதியான உரிமை கிடையாது எனவும், இவர்கள் மேற்படி இணையத் தளங்களின் உரிமையாளர்களோ அல்லது ஆசிரியர்களோ அல்லாத காரணத்தினால் இது தொடர்பாக தலையிடும் உரிமை இவர்களுக்கு இல்லை எனவும் சுட்டிக்காட்டினார். 'லங்கா காடியன் இணைத்தளம்', 'ஸ்ரீலங்கா நீவ்ஸிவே இணையத் தளம்', 'ஸ்ரீலங்கா கொசிப் இணையத்தளம்', 'பெப்பராசி டொட் கொம் இணையத் தளம்' மற்றும் 'லங்கா ஈ நியூஸ் இணையத்தளம்' என்பன இவ்வாறு தடை செய்யப்பட்டுள்ள இணையத் தளங்களாகும்.

இவை வெளிநாடுகளில் பதிவு செய்யப்பட்டுள்ளதுடன் இதன் உரிமையாளர்கள் பற்றிய தகவல்களை அறிந்து கொள்வது கஷ்டமாக உள்ளது. இதன் காரணமாக மேற்படி இணையத் தளங்களில் வெளியாகும் போலியான மற்றும் சிலரை தாக்கி வெளியிடும் செய்திகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க முடியாதுள்ளது எனவும் கருத்து முன்வைக்கப்பட்டது.

இரு தரப்பினரும் கருத்துக்களை ஆராய்ந்து நீதிமன்றம் மேற்படி மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொள்வதை நிராகரித்தது. சட்டத்தரணி ஜே. சீ. வெலிஅமுன மனுதாரர்கள் சார்பாக கருத்துக்களை முன்வைத்ததுடன், பிரதி சொலிசிட்டர் ஜெனரல் ஷவீந்திர பர்னாந்து ஊடக அமைச்சின் செயலாளர் மற்றும் அமைச்சர் ஆகியோர் சார்பாக ஆஜரானார். ஜனாதிபதி சட்டத்தரணி டீ. எஸ். விஜேசிங்க தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தல் ஆணைக் குழுவின் சார்பாக ஆஜரானதுடன் அதன் பணிப்பாளர் நாயகத்தின் சார்பாக ஆஜரானார்.

நன்றி: தினகரன்
Share this post :
 
Support : Creating Website | Team Lanka Now | Intelligent
Copyright © 2011. Lanka Now - All Rights Reserved
Template Created by Creating Website Published by Intelligent
Proudly powered by Team lanka Now