பிரதி அமைச்சர் ஹிஸ்புழ்ழாஹ் என்ன சொன்னார்
என்பதை அவரிடமே கேட்காமல் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா அவரை பகிரங்கமாக
கண்டித்ததன் மூலம் இஸ்லாத்தின் நீதித்தன்மையை ஜம்இய்யத்துல் உலமா
மீறியுள்ளதாக உலமா கட்சித்தலைவர் மௌலவி முபாறக் அப்துல் மஜீத் குற்றம்
சாட்டியுள்ளார்.
பிரதி அமைச்சர் ஹிஸ்புழ்ழாஹ் தம்புள்ள
பள்ளி சம்பந்தமாக கூறியது பற்றி சிங்கள வானொலி ஒன்று எம்மிடம் நேரடியாக
கேட்ட போது பள்ளிவாயல் சேதப்படுத்தப்பட்டுள்ளது என்பதை ஊடகங்கள் மூலம்
காணலாம் என கூறியிருந்தோம். ஹிஸ்புழ்ழாஹ் சொன்னது பற்றி எம்மிடம் கேட்ட
போது அதனை அவரிடமே சரியாக விசாரித்துக்கொள்ளுங்கள் என கூறினோம்.
ஆனால் உலமா சபையோ இது பற்றி சம்பந்தப்பட்ட
ஹிஸ்புழ்ழாஹ்விடம் நேரடியாக விசாரிக்காமல் கண்டன அறிக்கை வெளியிட்டதானது
நபி தாவூத் (அலை) அவர்கள் வாழ்வில் நடந்த நிகழ்வை நமக்குக்காட்டுகிறது.
ஹெல உறுமய போன்ற இனவாதக்கட்சிகள்
ஊடகங்களில் முஸ்லிம்கள் காணிகளை ஆக்கிரமிக்கிறார்கள் என தெரிவிக்கும்
கருத்துக்களை பகிரங்கமாக கண்டிக்க முன்வராத உலமா சபை இதற்காக ஒரு ஊடக
மாநாட்டையும் கூட்டாத உலமா சபை விழுந்தடித்துக்கொண்டு ஹிஸ்புழ்ழாஹ்
கண்டித்தது யாரை திருப்திப்படுத்தவதற்காக என்ற கேள்வி எழுகிறது. ஆகவே இது
பற்றி ஹிஸ்புழ்ழாஹ் அவர்களிடம் நேரடியாக பேசி அவர் குற்றம் இழைக்காதவராயின்
உலமா சபை பகிரங்கமாக அவரிடம் மன்னிப்பு கேட்பதே இஸ்லாத்தின் நீதி
நெறிமுறையாகும் என்பதை உலமாக்கள் தலைமையிலான கட்சி என்ற அடிப்படையில் உலமா
கட்சி கேட்டுக்கொள்கிறது என முபாறக் மௌலவி தெரிவித்துள்ளார்.