மட்டக்களப்பு புனாணைப் பிரதேசத்திலுள்ள ஆலயமொன்றில் விக்கிரகங்கள் சில இனம் தெரியாதோரால் திருடப்பட்டுள்ளதாகத் தெரியவருகிறது.

புனாணைக் கிராமமானது மிகவும் பழமைவாய்ந்த ஒரு கிராமமாகும். ஒரு சில பௌத்த குடும்பங்கள் குடியிருந்தபோதிலும் போரைக்காரணம் காட்டி அவர்கள் சிங்களக் கிராமங்களுக்குச் சென்று அரசு மூலம் நிவாரணங்களையும் வீடுகளையும் பெற்றுள்ளனர்.
இதேவேளை விக்கிரகங்கள் திருடப்பட்டமை தொடர்பில் மக்கள் மத்தியில் சந்தேகங்கள் உருவாகியுள்ளன கடந்த சில மாதங்களாக மட்டக்களப்பு மாவட்டத்தின் இந்துக்கோவில்களில் விக்கிரகங்கள் திருடப்பட்டு வருகின் றமை அதிகரித்து வருகின்றது. குறிப்பாக வாகரை பிரதேசத்தின் பால்சேனை பெரிய சுவாமியார் ஆலய விக்கினங்கள் அண்மையில் திருடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இதுதொடர்பாக மக்களும் ஆலய நிர்வாகத்தினரும் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தும் இதுவரையில் இவ்விக்கிரகங்களை பொலிஸாரோ பாதுகாப்புப் படையினரோ மீட்டுக்கொடுக்கவில்லை.
இவ்வாறான திருட்டுச்சம்பவங்களை மேற்கொள்பவர்களை சட்டத்தின் முன்நிறுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுதல் வேண்டுமென பொது மக்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.
இதேவேளை திருட்டுச் சம்பவங்களைக் கண்காணிப்பது தொடர்பிலான இரகசிய குழுவொன்று பாராளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் மூலமாக நியமிக்கப்பட்டிருந்தும் இவ்வகையான திருட்டுச் சம்பவங்களை தடுக்க முடியவில்லையென மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.