![]()
நாவாந்துறையில்
கடந்த ஓகஸ்ட் மாதம் இடம்பெற்ற கிறிஸ்பூத விவகாரத்தால் அப்பாவி மக்கள்
தாக்கப்பட்டமை தொடர்பாக உயர் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை
விசாரணைக்கு எடுத்துக் கொள்ள உயர் நீதிமன்றம் நேற்று அனுமதி வழங்கியது.
இது தொடர்பான மனு உயர் நீதிமன்றில்
பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்க நீதியரசர்களான நிமால் காமினி
அமரதுங்க, கே.ஸ்ரீபவன் ஆகியோர் முன்னிலையில் நேற்று எடுத்துக்
கொள்ளப்பட்டது.
கடந்த ஓகஸ்ட் மாதம் 22 ஆம் திகதி
நாவாந்துறை மக்கள் கிறிஸ் பூத விவகாரத்தால் இராணுவத்தினராலும்
பொலிஸாராலும் கடும் தாக்குதலுக்குள்ளாகினர். அத்துடன் பொது மக்களில் 100
பேர் வரை யாழ். பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர். பின்னர் நீதிமன்ற
உத்தரவுக்கமைய பிணையில் விடுவிக்கப்பட்டனர்.
மக்கள் அவ்வாறு தாக்கப்பட்ட சம்பவம்
தொடர்பாக கடந்த செப்ரெம்பர் மாதம் இந்த வழக்கு உயர் நீதிமன்றில் தாக்கல்
செய்யப்பட்டது. இவ்வாறு 56 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன.
அப்பாவி மக்கள் சித்திரவதை
செய்யப்பட்டமை மற்றும் தரக் குறைவாக நடத்தப்பட்டமை, சட்டத்தின்
பாதுகாப்புப் பெற அவர்களுக்குள்ள உரிமை மீறப்பட்டமை ஆகிய 3 அடிப்படை
உரிமைகள் தொடர்பிலேயே இந்த வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன.
இரண்டு மூன்று தடவகைள் இந்த வழக்கை
விசாரணைக்கு எடுத்துக் கொள்வதா? இல்லையா? என்ற பதிலுக்காக
ஒத்திவைக்கப்பட்டு வந்த நிலையில் இந்த வழக்கு நேற்று எடுத்துக்
கொள்ளப்பட்டபோது இதனை விசாரணைக்கு எடுத்துக் கொள்வதற்கான அனுமதி உயர்
நீதிமன்றினால் வழங்கப்பட்டது.
அதனையடுத்து தாக்கல் செய்யப்பட்டுள்ள
வழக்குகள் சம்பந்தமாக சட்டமா அதிபர் தனது ஆட்சேபனைகளைச் சமர்ப்பிக்கவென
மூன்று மாத கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. சட்டாமா அதிபர் தனது
ஆட்சேபனைகளைச் சமர்ப்பித்த பின்னர் மதுதாரர்கள் தமது எதிர் ஆட்சேபனைகளைத்
தெரிவிக்கவென ஒரு மாத கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் பிரதிவாதிகளாக
பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ, சட்டமா அதிபர், பொலிஸ்மா அதிபர்
என்.கே. இலங்ககோன், இராணுவக் கட்டளைத் தளபதி லெப்.ஜெனரல் ஜகத் ஜெயசூரிய,
யாழ்.மாவட்ட கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மகிந்த ஹத்துருசிங்க, 51ஆவது
படைப்பிரிவின் இராணுவக் கட்டளைத் தளபதி ஜனகவெல்கம, 512 ஆவது பிரிவு
இராணுவக் கட்டளைத் தளபதி அஜித் பல்லேவல, வடமாகாண பிரதிப் பொலிஸ்மா அதிபர்
நீல்தளுவத்த, சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நேவின் பத்மதேவா, யாழ். மாவட்ட
பிரதிப் பொலிஸ் மா அதிபர் காமனிபண்டார, யாழ். பொலிஸ் நிலையத் தலைமைப்
பொறுப்பதிகாரி சமன்சிகேரா மற்றும் கைது செய்யப்பட்ட இளைஞர்கள் சிலருக்கு
தனது தனது பாதணியினால் அடித்தார் என்று குற்றஞ்சாட்டப்பட்டிருக்கும் யாழ்.
பொலிஸ் நிலையப் கொன்ஸ்டபிள் நதீக்கா ஆகியோர் குறிப்பிடப்பட்டுள்ளனர்.
வழக்குத் தொடுநர்கள் சார்பில் ஜனாதிபதி
சட்டத்தரணிகளான கனகஈஸ்வரன், ஏ.ஆர்.சுரேந்திரன் மற்ற>ம்
கே.ஏஸ்.இரத்தினவேல், ஜே.சி.வெலியமுன, வி.புவிதரன், வி.தம்பு, எம்.ஏ.
சுமந்திரன், விறான் கொரையா, செல்வி பவானி பொன்சேகா, கெனத் பெரேரா, கே.
சந்திரகாந்த, லக்ஷான் டயஸ், மங்களேஸ்வரி சங்கர், எஸ்.எம்.எம்.சம்சுதீன்,
செல்வி கிசாந்தினி பாலன் ஆகியோர் நேற்று முன்னிலையாகினர்.
நாவாந்துறையில் பாதிக்கப்பட்ட இந்த
அப்பாவி மக்கள் தொடர்பாக யாழ். மாவட்ட நீதிமன்றிலும் பொலிஸார் தாக்கல்
செய்த வழக்கு நிலுவையில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
|
கிறிஸ்பூத வழக்கை விசாரணைக்கு ஏற்றுக்கொண்டது உயர்நீதிமன்றம்
Labels:
இலங்கை