
நல்லிணக்க
ஆணைக்குழுவின் பரிந்துரைகளை அமுல்படுத்தாவிடின் இலங்கைக்கு எதிரான சர்வதேச
விசாரணை 2013ம் ஆண்டு மார்ச் மாதமளவில் ஆரம்பமாகும். இவ்வாறு ஐக்கிய
தேசியக் கட்சியின் எம்.பி.யான லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார் சர்வதேச
பிரச்சினைகளுக்கு தேர்தல் தீர்வாகாது.
பொரித்த
கோழியை சாப்பிட வேண்டாம், கொக்கோ கோலாவை குடிக்க வேண்டாம் என்பதெல்லாம்
சில்லறைத்தனமானது என்பதுடன் ஐ.நா.வுடன் விளையாடினால் இலங்கைக்கு எதிரான
அடுத்த யோசனை படுபயங்கரமானதாக அமையும் என்றும் அவர் சொன்னார்.
பாராளுமன்றத்தில்
நேற்று வெள்ளிக்கிழமை சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீதான விவாதத்தில்
கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர்
தொடர்ந்து உரையாற்றுகையில், மனித உரிமை பேரவையில் 2006ஆம் ஆண்டு முதல்
உறுதிப்படுத்திய எதனையுமே அரசாங்கம் இதுவரையிலும் செய்யவில்லை.
17வது
திருத்தத்தை 2010ம் ஆண்டு ரத்து செய்தீர்கள். அதனை நிறுவுமாறே ஆணைக்குழு
பரிந்துரைத்துள்ளது. சர்வதேச பிரச்சினையை தீர்ப்பதற்காக தவறான பாதையில்
சென்று கொண்டிருக்கின்றீர்கள்.
தேர்தல்
சர்வதேச பிரச்சினைக்கு தீர்வாக அமையாது. அங்கு பயங்கரவாதிகள் இல்லை.
படுகொலைகளை விசாரிக்குமாறு பொலிஸாரை பணித்துள்ளீர்கள். விசாரணை நியாயமானதாக
இருக்கும் என்று நீங்கள் நினைக்கின்றீர்களா? விசாரணை சர்வதேச மட்டத்திற்கு
அமைவாக நடைபெற வேண்டும்.
சர்வதேச
சமூகத்திற்கு பொய்களை கூறியமையால் வெளிவிவகார அமைச்சர் மற்றும் மனித உரிமை
அமைச்சர் ஆகியோர் முகம்சுளித்துக் கொண்டு நிற்கின்றனர். 2006ஆம் ஆண்டு
ஐ.நா.வில் இலங்கைக்கு எதிராக 94 பரிந்துரைகளே இருந்தன. இன்று அவை 96
பரிந்துரைகளாக அதிகரித்துள்ளன.
அதில்
17ஆவது திருத்தம், ஊடக சுதந்திரம், மனித உரிமை, போரின் இறுதியில் நடந்தது
என்ன? உள்ளிட்ட விடயங்களுக்கு பதிலளிக்க வேண்டும் செயற்பாட்டுத்
திட்டத்தையும் அமுல்படுத்த வேண்டும்.
அமெரிக்காவுக்கு
அரசாங்க குழு எதனை எடுத்து செல்கின்றது என்பதனை இந்த சபைக்கு 18ம்
திகதிக்கு முன்னர் தெளிவுபடுத்த வேண்டும். சர்வதேச பிரச்சினை சில்லறை
பிரச்சினையல்ல. அமெரிக்காவுக்கு கொண்டு செல்லும் அறிக்கையை விசேட சபையை
கூட்டி விவாதிக்க வேண்டும் என்றார்.