தமது தமையிலான ஒன்றிணைந்த எதிர்கட்சிக்குள் இணைந்து கொள்ளுமாறு எதிர்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க ஜனநாயக தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சரத் பொன்சேகாவுக்கு அழைப்பு விடுக்க தீர்மானித்துள்ளார்.. இது தொடர்பான யோசனையொன்றை நாளைய தினம் கூடவுள்ள மத்திய செயற்குழுக் கூட்டத்தில் முன்வைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக எதிர்கட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்.
|
நாளைய மத்திய செயற்குழுக் கூட்டத்தில் சரத்பொன்சேகாவின் விடுதலை, அவருடன் எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படும் அரசியல் நடவடிக்கைகள் என்பன தொடர்பாக கலந்துரையாடப்படவுள்ளன. ஜனநாயக தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சரத் பொன்சேகாவுக்கு பொதுமன்னிப்பு வழங்குவதற்கு ஜனாதிபதி மேற்கொண்ட நடவடிக்கை தொடர்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்புகளின் போது கருத்துகள் வெளியிடப்பட்டன.
முற்போக்கு சோசலிச கட்சியினால் இன்று கொழும்பில் நடத்தப்பட்ட ஊடகவியலாளர் மாநாட்டில் அந்த கட்சியின் அரசியல் குழு உறுப்பினர் துமிந்த நாகமுவ, கருத்து வெளியிட்டிருந்தார். ஜனநாயகம் தொடர்பில் தமக்கெதிராக எழுப்பப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளில் இருந்து தப்பித்துக் கொள்வதற்கே அரசாங்கம் சரத் பொன்சேகாவை விடுதலை செய்ய தீர்மானித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இருந்தபோதும், தவறிழைத்தவர்களுக்கு மன்னிப்பு வழங்குவது தெய்வீக குணம் என களுத்துறையில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய துறைமுக மற்றும் பெருந்தெருக்கள் பிரதியமைச்சர் ரோஹித்த அபேகுணவர்தன குறிப்பிட்டுள்ளார்.
|