
விருதுநகர் மாவட்டம், காவல்துறை குற்ற ஆவணக் காப்பக டி.எஸ்.பி.யின் இ-மெயில் முகவரிக்கு புதன்கிழமை இரவு ஒரு மெயில் வந்தது. அதில் தமிழக முதல்வரின் போயஸ் கார்டன் வீடு, மதுரை மீனாட்சியம்மன் கோயில் மற்றும் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் வியாழக்கிழமை காலை வெடிகுண்டு வெடிக்கும் என குறிப்பிடப்பட்டிருந்ததாம்.
அந்த மெயில் குறித்து விருதுநகர் போலீஸôர், சென்னை பெருநகர காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து போயஸ் கார்டனில் உள்ள முதல்வரின் வீட்டில் வெடிகுண்டு தடுப்புப் பிரிவு போலீஸôர் மோப்பநாய் உதவியுடன் புதன்கிழமை நள்ளிரவு சோதனை செய்தனர்.
முதல்வர் வீட்டில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. அவரது அலுவலகத்திலும் பாதுகாப்பை அதிகரிக்க காவல்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
மீனாட்சியம்மன் கோயில், ஆண்டாள் கோயில் ஆகியவற்றிலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
காவல்துறையினரின் விசாரணையில், மும்பையை அடுத்த தாணே எம்பயர் நவாப் சாலையை சேர்ந்த நாச்சிமுத்து என்ற முகமதுகான் என்பவரது இ-மெயில் முகவரியில் இருந்து வெடிகுண்டு மிரட்டல் வந்திருப்பதாகத் தெரியவந்துள்ளது. அவர் தன்னை மாவோயிஸ்ட் இயக்கத்தைச் சேர்ந்தவர் என்று அதில் குறிப்பிட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.