
தமிழ்
கூட்டமைப்பினரைப் பயன்படுத்தி, வெளிநாடுகளில் உள்ள விடுதலைப்புலித்
தலைவர்கள் இலங்கைக்குள் ஊடுருவ முயற்சிக்கின்றனர். இதற்கு எதிர்க்கட்சியான
ஐக்கிய தேசியக் கட்சி துணை போகின்றது என்று ஸ்ரீலங்கா சுதந்திரக்
கட்சியின் செயலாளரும், சுகாதார அமைச்சருமான மைத்திரிபால சிறிசேன குற்றம்
சாட்டினார்.
கொழும்பில்
நேற்று இடம்பெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் ஊடகவியலாளர் மாநாட்டில்
கருத்துத் தெரிவிக்கையிலேயே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.
அமைச்சர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்,
இலங்கைக்கு
எதிராக ஜெனீவாவில் அமெரிக்கா கொண்டுவந்த பிரேரணை விடயத்தில்
எதிர்க்கட்சியான ஐ.தே.க. நாட்டை பற்றி சிந்திக்காது செயற்பட்டது. அரசியல்
ரீதியாக முரண்பாடுகள் இருக்கலாம். ஆனால், நாட்டுக்கு அபகீர்த்தி,
கௌரவத்திற்கு பாதிப்பு ஏற்படுமானால் அரசியலுக்கு அப்பால் சென்று
நாட்டிற்கு முதலிடம் வழங்கவேண்டும்.
ஆனால், ஐக்கிய தேசியக் கட்சி அவ்வாறான செயற்பாட்டை முன்னெடுக்கவில்லை. அரசியலையே முதன்மைப்படுத்தியது.
இன்று வடபகுதியில் அபிவிருத்திகள் மேற்கொள்ளப்பட்டு வருவதோடு, மக்களுக்கான அடிப்படை வசதிகளும் செய்து கொடுக்கப்படுகின்றன.
இவ்வாறானதொரு
சமாதானச் சூழலில் எமது கடல் எல்லைக்கு அப்பாலுள்ள வெளிநாடுகளில் வாழும்
விடுதலைப்புலித் தலைவர்கள் இலங்கைக்குள் ஊடுருவுவதற்கு முயற்சிகளை
மேற்கொண்டு வருகின்றனர்.
இதற்கு
பாலமாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரை விடுதலைப்புலிகள்
பயன்படுத்துகின்றனர். அவ்வாறானதொரு சூழ்நிலையில் ஐ.தே.க. கூட்டமைப்பினரோடு
கைகோர்த்துக்கொண்டு யாழ்ப்பாணத்தில் மே தினத்தை நடத்தியது.
மே தினத்திற்காக
கைகேகார்ப்பதை விடுத்து, பிரச்சினைகளை தீர்க்க ஒத்துழைக்க வேண்டும். தமிழ்
கூட்டமைப்பினரை பாராளுமன்ற தெரிவுக்குழுவுக்கு கொண்டுவருவதற்கு ஐ.தே.க.
முன்னுரிமை வழங்க வேண்டும்.
அதைவிடுத்து விடுதலைப் புலித்தலைவர்கள் நாட்டுக்குள் ஊடுருவும் முயற்சிக்கு உறுதுணையாக செயற்படலாகாது.
மக்கள் இன்று எதிர்க்கட்சி மீது சந்தேகம் கொண்டுள்ளனர். அவர்களின் செயற்பாடுகளே இதற்கு காரணமாகும்.
எனவே,
நாட்டின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்காக தேசிய நல்லிணக்கத்தை
ஏற்படுத்தவும் ஐ. தே.க. பாராளுமன்ற தெரிவுக் குழுவுக்கு வர வேண்டும்.
பொருட்களின்
விலையேற்றம் வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் எரிபொருள், பால்
மா, காஸ் உட்பட பொருட்களின் விலையேற்றத்தை அரசாங்கத்தால் கட்டுப்படுத்த
முடியாது.
இறக்குமதி செய்யும் கம்பனிகள் விலை அதிகரிப்புக்கு அரசாங்கம் விருப்பமின்றி அனுமதியை வழங்கியது.
ஆனால், குழந்தைகளுக்கான பால் மா விலையை அதிகரிக்க இணங்கவில்லை.
எனவே, விலையேற்றங்களுக்கு ரூபாவின் மதிப்பிறக்கம் காரணமென்ற குற்றச்சாட்டை ஏற்றுக்கொள்ள முடியாது என்றார்.