
கொழும்பிலுள்ள இலங்கைக்கான கட்டார் தூதுவராலயத்திற்கு நாளாந்தம் வருகை தரும் மக்களின் தேவைகளை நிறைவேற்றுவதில் உள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்வதற்கு கவனம் செலுத்தப்படுவதுடன் அவர்களது தேவைகளை காலம் தாழ்த்தாது நிறைவேற்ற சம்மந்தப்பட்ட அதிகாரிகள் கவனம் செலுத்த வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஒலுவில் ஜம்மியதுல் உலமா சபையின் தலைவரும் சமாதான நீதவானுமாகிய அஷ்ஷெய்க் எம்.எல்.பைசால் (காஷிபி) இது தொடர்பாக கட்டார் தூதுவருக்கு அவர் அனுப்பி வைத்துள்ள அவசர மகஜரில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது; ‘இலங்கைக்கான கட்டார் தூதுவராலயம் பல பணிகளைச் செய்து வருகின்றது.
நாளாந்தம் அங்கு சென்று ஏராளமான மக்கள் தங்களது வேலைகளை பூர்த்தி செய்து வருகின்றார்கள். மக்களின் தேவைகளை பூர்த்தி செய்து கொடுப்பதில் அப்பிரிவு சிறப்பாக செயற்பட்டாலும் பல குறைகளை எம்மால் அறிய முடிகின்றது.
அங்கு தேவைகளை நிறைவேற்ற நாளாந்தம் 750 – 1000 உட்பட்ட மக்கள் செல்கின்றபோதும் 100–150க்கு இடைப்பட்ட மக்களின் தேவைகளே பூர்த்தி செய்யப்படுவாகவும் தேவைகளை நிறைவேற்ற முடியாத மக்கள் அங்குமிங்கும் அலைந்து திரிவதாகவும் நீண்ட தூரங்களில் இருந்து வருகின்றவர்கள் விரிப்புக்களை கொண்டு வந்து அடுத்த நாள் முதல் இடத்தினை பெறுவதற்காக பாதை ஓரங்களில் அமர்ந்து கொள்வதாகவும் தெரிய வருகிறது.
மேலும்
அதிகாலை 02.30 மணிக்கு முன்பாக மக்கள் இலக்கங்களை பெற்றுக் கொண்டு
வரிசையில் காத்து நிற்பதுடன், அவ்வாறு காத்துக் கொண்டு நிற்கும்
மக்களுக்கு கூட அடுத்த நாளாவது வேலையினை பூர்த்தி செய்ய முடியாமல்
போவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. அத்துடன் காலை 09.00–11.30 மணிக்கிடையில்
சேவைகளை வழங்கும் அப்பிரிவில் ஒரேயொரு கருமபீடத்தினூடாகவே தகவல்களும்
ஆவணங்களும் பெறப்படுவதாகவும் இலக்கங்களை 150க்கு மேல் தங்களுக்காக ஆக்கிக்
கொண்டவர்கள் 11.30 மணியுடன் திருப்பி அனுப்பப்படுவதாகவும்
தெரவிக்கப்படுகிறது.மனிதர்கள் என்ற வகையில் அவர்களுக்கான கௌரவம் அங்கு பேணப்படுவதில்லை எனவும் அவர்களது இயற்கைத் தேவைகளைக் கூட நிறைவேற்ற எவ்வித வசதியும் அங்கு இல்லiயெனவும் கவலை தெரிவிக்கப்படுகிறது.
அதிகமானவர்கள் நீண்ட தூரம் இருந்து மிகுந்த வேதனைகளுக்கும் சிரமங்களுக்கும் மத்தியில் தொழிலொன்றுக்காக கட்டார் செல்ல தங்களது ஆவணங்களை உறுதி செய்து கொள்ளவே இங்கு வருகிறார்கள்.
ஆனால் அவர்கள் நீண்ட வரிசையில் மிக நீண்ட நேரம் காத்து நின்றும் கூட – தமது வேலையை நிறைவேற்றிக் கொள்ளாமல் ஏமாந்து மறு நாளும் அவஸ்தைப்படுவதையும் அங்கலாயப்பதையும் கண்டு மிக கவலையடைகின்றோம். இந்த அவலம் உடனடியாக போக்கப்பட வேண்டும்.
எனவே இது தொடர்பாக தாங்கள் கூடிய கவனமெடுத்து- நேரடியாகத் தலையிட்டு தூதரகத்திற்கு வரும் மக்களுக்கு இலகுத் தன்மையினை ஏற்படுத்தி கொடுக்கவும் இலங்கை வெளிநாட்டு அமைச்சில் நேர்த்தியாக எல்லா வசதிகளையும் செய்து- வேலைகளை பூர்த்தி செய்து கொடுப்பதைப் போன்று இதில் சம்மந்தப்பட்டவர்களும் உரிய நடவடிக்கை எடுத்து தூதரகத்திற்கு வரும் மக்களை மனதாபிமானத்துடனும் மனித உரிமைகளுக்கு மதிப்பளித்தும் கௌரவப்படுத்துவதுடன் அவர்களது தேவைகளை காலதாமதமின்றி நிறவேற்றிக் கொடுக்க தங்களது சேவையை விரிவுபடுத்தி மக்கள் மயப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ எனவும் அம்மகஜரில் வலியுறுத்தப்பட்டுள்ளது.


