
மதுரை
இளைய ஆதீனமாக நித்யானந்தா நியமிக்கப்பட்டதை தொடர்ந்து பல்வேறு தரப்பினரும்
எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இந்து முன்னணியினர் இளைய
ஆதினமாக நித்யானந்தா நியமிக்கப்பட்டதிற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்து
அறநிலைய துறை அதிகாரிகளிடம் புகார் மனு கொடுத்துள்ளனர்.
அம்மனுவில் கூறப்பட்டுள்ளதாவது;
மதுரை
ஆதீனமாக நியமிக்கப்பட்டால் அதன் விதிமுறைகள்படி நீதிமன்றம் செல்ல
தேவையில்லை என்பதால் தன்னுடைய செக்ஸ் வழக்குகளிலிருந்து இருந்து விடுபடவே
இந்த பதவியை நித்யானந்தா வகிக்கிறார் என்ற ஐயம் ஏற்பட்டுள்ளதாக அவர்கள்
தங்கள் புகாரில் தெரிவித்துள்ளனர்.
மேலும்
நித்தியானந்தா சைவ சபை மரபுகளை சரிவர பின்பற்றாதவர் என்றும் பாலியல்
வழக்கு உள்ள ஒருவரை அப்பதவியில் நீடிக்க செய்வது தவறு என்றும் அதில்
கோரியுள்ளனர்.
நித்யானந்தாவை
மதுரை ஆதீனத்தின் இளைய மடாதிபதியாக 293வது ஆதீனமாக மதுரை ஆதீனம்
அருணகிரிநாதர் அறிவித்தார். இதற்கு பல்வேறு மடங்களின் மடாதிபதிகளும்,
இந்து மதத்தின் பல அமைப்புகளைச் சேர்ந்தவர்களும் கடும் எதிர்ப்பு
தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இருதினங்களுக்கு
முன்பு, மதுரை ஆதீனம் நிர்வாகத்தில் எழுந்துள்ள பிரச்னை தொடர்பாக இந்து
அறநிலையத் துறைக்கு புகார் வந்தால், அதில் அரசு தலையிடுவதற்கு சட்டத்தில்
இடம் உள்ளது என்று அரசு சிறப்பு வழக்கறிஞர் மதுரை உயர் நீதிமன்றக்
கிளையில் தெரிவித்திருந்தார். இதனையடுத்து தற்போது இந்து முன்னணியினர்
புகார் கொடுத்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
