
சூழ்ச்சிகளுக்கு ஏற்ப முதலமைச்சர் பதவிக்காக தமிழ், முஸ்லிம் சமூகங்கள் முட்டி, மோதிவிடக்கூடாது என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
மட்டக்களப்பு, ஓந்தாச்சிமடத்தில் உள்ள ஆயுள்வேத மத்திய மருந்தகம், கிராமிய வைத்தியசாலையாக தரமுயர்த்தும் நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்யின் மட்டக்களப்பு மாவட்ட பிரதான அமைப்பாளர் இராஜன் மயில்வானம் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் கிழக்கு மாகாண ஆயுள்வேத மருத்துவதுறை ஆணையாளர் டாக்டர் திருமதி ஆர்.சிறிதரன் உட்பட மதகுருமார்கள், கிராமியசங்க உறுப்பினர்கள், ஆலயத்தலைவர்கள், பொதுமக்கள் கலந்துகொண்டனர்.
இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,
கடந்த 32 வருடங்களாக தமிழ் சமூகம் போராடி பூச்சியத்திலிருந்து ஆரம்பித்து மீண்டும் பூச்சியத்திற்கே வந்திருக்கின்றீர்கள். இப்போது பல அரசியல் தலைவர்கள் உங்கள் மத்தியில் வந்திருக்கின்றார்கள். தமிழ் மக்களாகிய உங்களுக்கு அரசியல் அதிகாரம் மிக அவசரமாக தேவைப்படுகின்றது.
அதிகாரம் மிக்க அரசியல் தலைமைத்துவத்தை நீங்கள் உருவாக்கிக்கொள்ள வேண்டும். உரிய அரசியல் அதிகாரத்தை பெற்றுக்கொள்கின்ற விடயங்களில் கவனம் செலுத்த வேண்டும். அவ்வாறு பெறுகின்ற அதிகாரத்தினூடாக நீங்கள் இப்போது பேசுகின்ற உங்கள் சமூகத்தின் கல்வி பொருளாதார அபிவிருத்தி நிர்வாக நடவடிக்கைகள் எல்லாவற்றையும் பெறுவதற்கு அரசியல் அதிகாரம் உங்களுக்கு தேவைப்படுகின்றது. அந்த அதிகாரத்தை கொடுப்பதற்கான சக்தி மக்களிடத்திலிருக்கின்றது.
மக்களாகிய நீங்கள் அதிகாரம் மிக்கவர்களுக்கு அந்த ஆணையை கொடுக்க வேண்டும். அது தான் உங்களுடைய வாக்கு பலம். அபிவிருத்திகளோ அல்லது எதுவித நடவடிக்கைகளோ செய்யாதவர்களுக்கு வாக்களிப்பதன் மூலம் உங்களுடைய பிரதேசத்தை அபிவிருத்தி செய்ய முடியாது.
ஜனாதிபதி கிழக்கு மாகாணத்தில் பல அபிவிருத்தி வேலைகளை செய்துவருகின்றார். மின்சாரமில்லாத எந்த பிரதேசமும் அம்மாகாணத்தில் இருக்க முடியாது என்ற பேசியிருக்கின்றார்கள். வீதிகள் புனரமைக்கப்பட்டிருக்கின்றன. கைவிடப்பட்ட குளங்கள் இன்று மீன்பிடித்துறைக்காக விவசாயத்திற்காகவும் புனரமைக்கப்பட்டிருக்கின்றன. கடற்றொழில்கள் பொருளாதார ரீதியாக வளர்ச்சி கண்டிருக்கின்றது.
இந்த நிலைமையை உங்கள் பிரதேசங்களில் அரசியல் பலமிக்க தலைவர்களை உருவாக்கி அதன் மூலம் உங்கள் அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்யக்கூடிய நிலைமை மிக விரைவில் உங்கள் பிரதேசத்திற்கு வரவேண்டும்.
கடந்த காலங்களில் ஜனநாயகத்திற்காக போராடிய சில அரசியல் தலைவர்கள் இந்த மண்ணில் படுகொலை செய்யப்பட்டிருக்கின்றார்கள். நல்ல அரசியல் தலைவர்கள் எவரும் அரசியலுக்கு வருவதற்கு பயப்படுகின்றார்கள்.
ஆனால் இன்று நிலைமை மாறியிருக்கின்றது. ஜனாதிபதி நிலையான சமாதானத்தை தந்திருக்கின்றார்கள். நல்ல அரசியல் தலைமைகள் இம்மண்ணிலே மிளிர வேண்டும். இந்நாட்டின் ஜனாதிபதியினுடைய அனுசரணையின் கீழ் இம்மக்களுடைய அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்து கொடுப்பதற்கான பணிகளை மேற்கொள்ள வேண்டும்.
ஓந்தாச்சிமடம் பகுதி மக்கள் மிகவும் கஷ்டத்தின் மத்தியில் வாழ்கின்றார்கள். நீங்கள் ஜனாதிபதியுடன் இணைந்து பல அபிவிருத்தித் திட்டங்களை பெற்றுக் கொள்ள முனையவேண்டும்.
கடந்த காலங்களில் தமிழரும் முஸ்லிம்களும் சண்டை பிடித்துக்கொண்டிருந்தோம். இதனால் ஏற்பட்ட இழப்புகள் தோல்விகள் எதைச்சாதித்தோம் என்பது பற்றி நாங்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
ஆகவே நீங்கள் எமது சகோதர மக்கள். கடந்த காலங்கள் எமக்கு ஒரு படிப்பினையாக இருந்தது. இந்த மண்ணில் தமிழ் தலைவர்களும் முஸ்லிம் தலைவர்களும் ஒன்று சேர்ந்து அரசியல்செய்த காலம் இருந்தது. சிலர் தனிப்பட்ட இலாபங்களுக்காக இந்த இரண்டு சமூகங்களையும் பிரிக்க முனைகின்றனர்.
தமிழர்களும் முஸ்லிம்களும் பாரம்பரியமாக இந்த மண்ணில் நிம்மதியாக சந்தோஷமாக கடந்த காலங்களில் வாழ்ந்தார்களோ அதே நிலை மீண்டும் வரவேண்டும். முதலமைச்சர் பதவிக்காக இந்த இரண்டு சமூகங்களையும் மோதவிட்டு இனவாதத்தை தூண்டிவிட சிலர் முயற்சிக்கின்றனர். கிழக்கு மாகாணத்தில் மூவின மக்களையும் வழிநடத்தக்கூடியவர்தான் முதலமைச்சராக வரமுடியும்.
இந்த மாகாணத்தில் மாகாணசபைக்கு வழங்கப்பட்டுள்ள சகல அதிகாரங்களையும் பெற்று அந்த அதிகாரத்தை இந்த மாகாண மக்களுக்கு பெற்றுக்கொடுக்கின்ற முதலமைச்சரைத்தான் இந்த கிழக்கு மாகாண சமூகம் எதிர்பார்க்கின்றது. ஆகவே இந்த முதலமைச்சர் பதவிக்காக இந்த இரண்டு சமூகமும் முட்டிவிடக்கூடாது, மோதிவிடக்கூடாது என்பது அனைவரது எதிர்பார்ப்பாகும்.
இவ்வாறு அவர் உரையாற்றினார்.