அரசின் ஸ்திரத்தன்மையைப் பேணுவதற்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உதவியுள்ளது: ஹக்கீம்

இந்த அரசின் ஸ்திரத்தன்மையைப் பேணுவதற்கு ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் உதவியுள்ளதாக நீதியமைச்சரும், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச மூன்றாவது தடவையாக ஜனாதிபதியாக போட்டியிடுவதற்கு வாய்ப்பாக 18 ஆவது அரசியல் அமைப்புத் திருத்தத்தை நிறைவேற்றுவதற்கு பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை வழங்கியதன் மூலம் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் அரசுக்கு உதவியுள்ளது.

அண்மையில் நடந்த தம்புள்ளை சம்பவத்தின் பின்னணியில் முஸ்லிம் காங்கிரஸ் பற்றி சில தவறான செய்திகள் வெளியாயின. அரசை விட்டு ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் வெளியேறப்போவதாகவும் செய்திகள் வெளிவந்தன.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு எங்களில் நம்பிக்கை உண்டு. நாங்களும் நம்பகத்தன்மையைப் பேணி வருகிறோம்.

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் சரணாகதி அரசியல் செய்யவில்லை; எதிர்ப்பு அரசியலிலும் ஈடுபடவில்லை .

எப்போதும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கொள்கை கோட்பாடுகளின் அடிப்படையில் நேர்மையான அரசியலில் ஈடுபட்டு வந்துள்ளது. தம்புள்ளை சம்பவத்தைத் தொடர்ந்து வெளிவந்த சில செய்திகளின் பின்னணியில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் நிலைப்பாடு பற்றி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச கொரியாவில் இருந்து நாடு திரும்பிய உடனேயே தொலைபேசியில் என்னைத் தொடர்பு கொண்டு சில விளக்கங்களைப் பெற்றுக் கொண்டார்.

தம்புள்ளை விவகாரம் சம்பந்தமாக தாம் பரிசீலித்து வருவதாகவும் கூறினார். ஜப்பானியப் பிரதி பிரதமருக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச வழங்கிய விருந்துபசாரத்தின் போது அவரிடம் என்னைச் சுட்டிக்காட்டி தமிழ் தேசிய கூட்டமைப்பை பாராளுமன்றத் தெரிவுக்குழுவில் இணைந்துகொள்ள இணங்கச் செய்வதற்கு இவர் முன்வந்திருப்பதாகவும் ஜப்பானியப் பிரதிப் பிரதமருக்கு ஜனாதிபதி தெரிவித்தார்.

நேற்று சனிக்கிழமை திருமலை மாவட்டத்தின் தம்பலகாமத்தில் இளைஞர் காங்கிரஸின் அலுவலகத்தைத் திறந்து வைத்து உரையாற்றும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இந்நிகழ்வில் திருமலை மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் தௌபீக்,பைஸல் காஸிம் எம்பி,மாகாண சபை உறுப்பினர்களான அன்வர், கரீஸ், ராஸிக் பரீட், ஜெமீல், தம்பலகாமம் பிரதேச இளைஞர் காங்கிரஸ் அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினரும் தௌபீக்கின் இணைப்பாளருமான முஹய்யித்தீன் மற்றும் பெருந்திரளான பொது மக்களும் கலந்து கொண்டனர்.
Share this post :
 
Support : Creating Website | Team Lanka Now | Intelligent
Copyright © 2011. Lanka Now - All Rights Reserved
Template Created by Creating Website Published by Intelligent
Proudly powered by Team lanka Now