
கடந்த வருடம் இலங்கைக் கிரிக்கெட் சபை ஏற்பாடு செய்ய முனைந்த போது தெளிவற்ற காரணங்களுக்காகவே இந்திய வீரர்களின் பங்குபற்றுதலை மறுத்ததாகவும், அதற்கான காரணங்களை இலங்கைக் கிரிக்கெட் சபையிடம் அப்போதே தெளிவுபடுத்தியதாகவும் அவர் தெரிவித்தார்.
கடந்த வருடம் ஶ்ரீலங்கா பிறீமியர் லீக் தொடரை நடாத்துவதற்கு இலங்கைக் கிரிக்கெட் சபை முன்வந்த போது இந்திய வீரர்கள் அத்தொடரில் பங்குபற்றுவதை அனுமதிக்க முடியாது என இந்தியக் கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபை அறிவித்தது.
ஶ்ரீலங்கா பிறீமியர் லீக் தொடரை நடாத்துவதற்காக சமர்செட் நிறுவனத்துடன் இலங்கைக் கிரிக்கெட் சபை மேற்கொண்டிருந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் வீரர்களுக்கான ஊதியங்களை சமர்செட் நிறுவனேமே பொறுப்பாகக் காணப்படுவதால் வீரர்களுக்கான ஊதியம் தொடர்பில் தெளிவான நிலைமை இல்லை எனத் தெரிவித்தே இந்தியக் கிரிக்கெட் சபை கடந்த வருடம் மறுப்புத் தெரிவித்திருந்தது.
இந்தியக் கிரிக்கெட் சபையின் மறுப்பினை அடுத்தே ஶ்ரீலங்கா பிறீமியர் லீக் தொடரை கைவிட வேண்டிய தேவை இலங்கைக் கிரிக்கெட் சபைக்கு ஏற்பட்டது. இந்தியக் கிரிக்கெட் வீரர்களையும் தாண்டி, இந்திய நிறுவனங்களில் முதலீடு, அனுசரணை ஆகியவற்றை இலங்கைக் கிரிக்கெட் சபை நம்பியிருந்த நிலையில், இந்தியக் கிரிக்கெட் சபையின் மறுப்பினை அடுத்து அந்நிறுவனங்களும் பின்வாங்கிக் கொண்டதால் இலங்கைக் கிரிக்கெட் சபை கடந்த வருடம் ஶ்ரீலங்கா பிறீமியர் லீக்கை பிற்போட்டுக் கொண்டது.
இந்தாண்டுக்கான தொடரை இலங்கைக் கிரிக்கெட் சபை எதிர்வரும் ஓகஸ்ட் 10ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடாத்த ஏற்பாடு செய்துள்ள நிலையில், இந்திய வீரர்கள் பங்குபற்றுவதை இலங்கைக் கிரிக்கெட் சபை விரும்பி, அதற்கான கோரிக்கைளை விடுக்குமாயின் அதைப் பரிசீலிக்கத் தயாராக இருப்பதாகத் தெரிவித்த என்.ஶ்ரீனிவாசன், கடந்த வருடத்தில் காணப்பட்ட தவறுகள் இம்முறை காணப்படுமாயின் இந்திய வீரர்களை அனுமதிப்பதில் எந்தவிதமான சிக்கல்களும் காணப்படாது எனத் தெரிவித்தார்