
ஐ.தே.க. நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்கவினால் சமர்ப்பிக்கப்பட்ட இரு ஆவணங்களின்படி, இலங்கை வங்கியின் செயற்படாத கடன்களின் பெறுமதி 161 பில்லியன் ரூபாவாக அதிகரித்துள்ளது. இலங்கை வங்கியின் கடன்மீட்பு மேலதிக முகாமையாளரினால் கையெழுத்திடப்பட்ட அறிக்கையொன்றை மேற்கோள்காட்டி பேசுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
அரசாங்க உயர் மட்டத்தினரின் ஆசிர்வாதத்துடன் கடன்களைப் பெறும் சில நபர்கள் கடன்களை திருப்பிச் செலுத்தாதுள்ளதாக ரவி கருணாநாயக்க குறிப்பிட்டார்.

இதேவேளை, மக்கள் வங்கி கடந்த 10 வருடகாலததில் 8.4 பில்லியன் ரூபாவை வாராக் கடனாக ஒதுக்கியுள்ளதாக ரவி கருணாநாயக்க தெரிவித்தார்.
"சமுர்த்திப் பயனாளிகளுக்காக அரசாங்கம் வருடாந்தம் 8.8 பில்லியன் ரூபாவை செலவிடுகிறது. இதேயளவான தொகை, மீளப்பெற முடியாத கடனாக ஒதுக்கப்பட்டுள்ளது.இந்நிலைமைக்கு நாம் ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.
சாதாரண விவசாயி ஒருவர் தனது விவசாய நடவடிக்கைகளுக்காக 20,000 30,000 ரூபாவை கடனாகப் பெற்று திருப்பிச் செலுத்தாதபோது அவர்கள் வங்கி அதிகாரிகளினால் இரக்கமின்றி வேட்டையாடப்படுகின்றனர். ஆனால் அரசியல்வாதிகளின் ஆதரவாளர்கள் எந்தப் பிரச்சினையுமில்லாமல் தப்பி விடுகிறார்கள்" எனவும் அவர் தெரிவித்தார்.
100 மில்லியன் ரூபாவுக்கு மேற்பட்ட கடன் தொகையை திருப்பிச் செலுத்தாதவர்களின் பெயர்களை வெளியிடுவதற்கான சட்டத்தை அறிமுகப்படுத்துமாறு அரசாங்கத்தை அவர் கோரினார்.