
இந்திய கிரிக்கெட் போர்டுக்கு (பி.சி.சி.ஐ.,) சவாலாக கபில் தேவ் தலைமையில் இந்தியன் கிரிக்கெட் லீக் (ஐ.சி.எல்.,) அமைப்பு துவங்கப்பட்டது. இதற்கு ஐ.சி.சி., அங்கீகாரம் அளிக்க மறுத்தது. இதில் சேர்ந்த வீரர்களுக்கு பி.சி.சி.ஐ., உள்ளிட்ட அனைத்து நாட்டு கிரிக்கெட் போர்டுகளும் தடை விதித்தன. பின்னர் பி.சி.சி.ஐ., தரப்பில் இந்தியன் பிரிமியர் லீக்(ஐ.பி.எல்.,) துவங்கப்பட, ஐ.சி.எல்., அமைப்புக்கு சிக்கல் ஏற்பட்டது. இந்தச் சூழலில் ஐ.சி.எல்., அமைப்பில் இருந்து மே 31க்குள் விலகுபவர்களுக்கு பொது மன்னிப்பு அளித்து, தடை நீக்கப்படும் என பி.சி.சி.ஐ.,அறிவித்தது.
இதனை ஏற்று ரோகன் கவாஸ்கர்(மேற்கு வங்கம்), ஹேமங் பதானி(தமிழகம்), தீப் தாஸ்குப்தா (மேற்குவங்கம்), ரிதிந்தர் சோதி(பஞ்சாப்) உள்ளிட்ட 79 இந்திய வீரர்கள் விலகியுள்ளனர். பயிற்சியாளர்கள் பொறுப்பில் இருந்த அஜித் வடேகர், சந்தீப் பாட்டீல், மதன் லால், பிரசன்னா, பல்விந்தர் சிங் சாந்து உள்ளிட்ட 11 முன்னாள் வீரர்கள் மற்றும் 11 நிர்வாகிகள் பி.சி.சி.ஐ., பக்கம் வந்துள்ளனர். ஒட்டுமொத்தமாக 101 பேர் விலகியுள்ளனர்.இவர்கள் உடனடியாக உள்ளூர் போட்டிகளில் பங்கேற்கலாம். ஒரு ஆண்டுக்கு பின் சர்வதேச மற்றும் ஐ.பி.எல்., போட்டிகளில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவர். இது குறித்து பி.சி.சி.ஐ.,
செயலர் சீனிவாசன் கூறுகையில்,""ஐ.சி.எல்., அமைப்புடனான உறவை வீரர்கள் துண்டித்துக் கொண்டுள்ளனர். இந்த ஆண்டு நடக்கும் உள்ளூர் போட்டிகளில் இவர்கள் பங்கேற்கலாம் என சம்பந்தப்பட்ட மாநில கிரிக்கெட் சங்கங்களுக்கு எழுத்துப்பூர்வமாக தகவல் அனுப்பியுள்ளோம். ஐ.பி.எல்., தொடரில் பங்கேற்பது பற்றி விரைவில் தெரிவிக்கப்படும்,'' என்றார்.
ஐ.சி.எல்., தொடரும்:
பெரும்பாலான இந்திய வீரர்கள் விலகிய நிலையில், புதியவர்கள் ஒப்பந்தம் செய்யப்படுவர் என ஐ.சி.எல்., அமைப்பை சேர்ந்த ரோலண்ட் லாண்டர்ஸ் தெரிவித்தார்.
இவர் கூறுகையில்,"" ஐ.சி.எல்., கதை முடிந்து விடவில்லை. இன்னும் 40 முதல் 50 வீரர்கள் உள்ளனர். தேவைப்பட்டால் புதிய வீரர்களை தேர்வு செய்வோம். அடுத்த தொடர் வரும் அக்டோபரில் தான் நடக்க உள்ளது. எனவே அவசரப்படத் தேவையில்லை,'' என்றார்.
கபில் மவுனம் :
கபில்தேவ் மட்டும் இன்னும் மவுனமாக உள்ளார். ஐ.சி.எல்., அமைப்பில் சேர்ந்ததால் இவருக்கு அளிக் கப்பட்டு வந்த ரூ. 35 ஆயிரம் பென்ஷன் நிறுத்தப்பட்டது.இதனால் பி.சி.சி.ஐ., மீது மிகுந்த ஆத்திரத்தில் உள்ள இவர், ஐ.சி.எல்., அமை ப்பை விட்டு விலகுவாரா என்பது கேள்விக்குறியாக உள்ளது. மற்றொரு ஐ.சி.எல்., நிர்வாகியான கிரண் மோரே அமெரிக்கன் பிரிமியர் லீக் அமைப்பில் சேர வாய்ப்பு உள்ளது.