ஒசாமா
பின் லேடன் கொல்லப்படுவதற்கு முன் இறுதியாக வாழ்ந்த இடத்தைப் பொதுச்
சொத்தாக அறிவிக்க, பாகிஸ்தான் அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
பாகிஸ்தானில்
அபோட்டாபாத் பகுதியில் உள்ள காரிசன் எனுமிடத்தில் பதுங்கி வாழ்ந்த
அல்-காய்தா தலைவர் ஒசாமா பின் லேடன், அமெரிக்க கடற்படை "சீல்" பிரிவினரால்
கடந்த 2011-ம் ஆண்டு மே மாதம் கொல்லப்பட்டார். அந்த இடத்தில் 5 ஆண்டுகள்
ஒசாமா வாழ்ந்திருக்க வேண்டும் என அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.
ஒசாமா
பதுங்கியிருந்த வளாகம் கடந்த பிப்ரவரி மாதத்தில் பாகிஸ்தான் ராணுவத்தால்
இடிக்கப்படும் வரை, அதனை ஏராளமான மக்கள் பார்த்துச் சென்றனர். அந்த இடம்
"புனிதப் போராளி"களால், நினைவிடமாக ஆக்கப்படக்கூடும் என அஞ்சப்பட்டது.
இதையடுத்து, ஒசாமா கடைசியாக வாழ்ந்த இடத்தை பொதுச் சொத்தாக அறிவிக்க
பாகிஸ்தான் அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
வடமேற்கு
கைபர்-பாக்துன்க்வா மாகாண அரசு இது தொடர்பாக பத்திரிகைகளில் நோட்டீஸ்
வெளியிட்டுள்ளது. அபோட்டாபாத்தில் உள்ள அந்த இடத்தை பொதுச் சொத்தாக
அறிவிப்பதில் யாருக்கேனும் ஆட்சேபம் இருப்பின் 15 தினங்களுக்குள், மாவட்ட
வருவாய் அலுவலரைத் தொடர்பு கொள்ளலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஆட்சேபணை
இல்லாவிடில் பொதுச்சொத்தாக அறிவிக்கப்பட உள்ளது. அந்த இடம் எதற்குப்
பயன்படுத்தப்படும் என்பது பற்றி அதிகாரபூர்வ தகவல்கள் எதுவுமில்லை.
ஆவணங்களின் படி, அந்த இடம் முகமது அர்ஷத் என்பவரின் பெயரில் உள்ளது. ஒசாமா
கொல்லப்பட்டபோது முகமது அர்ஷத்தும் கொல்லப்பட்டார்.