அதிகாரபூர்வ தொலைபேசி மூலமே நீதிவானுக்கு அச்சுறுத்தல் விடுத்தார் றிசாத் பதியுதீன் – ‘சண்டே ரைம்ஸ்‘ தகவல்

மன்னார் நீதிவானுக்கு சிறிலங்கா அமைச்சர் றிசாத் பதியுதீன் அச்சுறுத்தல் விடுத்தது தொடர்பான குற்றச்சாட்டை அடுத்து சிறிலங்கா குற்றப்புலனாய்வுப் பிரிவினர் தொலைபேசி அழைப்புகள் பற்றிய விபரங்களைச் சேரித்து வருகின்றனர். 

இந்தநிலையில், சிறிலங்கா அமைச்சர் றிசாத் பதியுதீன் தனது அதிகாரபூர்வ தொலைபேசி இலக்கத்தில் இருந்தே நீதிவானின் கைத்தொலைபேசிக்கு அழைத்துள்ளதாக அறியப்படுவதாக ‘சண்டே ரைம்ஸ்‘ தகவல் வெளியிட்டுள்ளது.

கைத்தொலைபேசி இணைப்பு வழங்குனரிடம் இருந்து தொலைபேசி அழைப்புகள் பற்றிய விபரங்களை தாம் கொரியுள்ளதாக சிறிலங்கா காவல்துறைப் பேச்சாளர் அஜித் றோகண தெரிவித்துள்ளார்.

அதேவேளை உதவி கண்காணிப்பாளர் சோமரத்ன தலைமையிலான மூன்று காவல்துறை குழுக்கள், போராட்டம் தொடர்பாகவும். நீதிமன்றம் மீது தாக்குதல் நடத்தப்பட்டது தொடர்பாகவும் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றன.

சம்பவ இடத்தில் இருந்த ஊடகவியலாளர்களின் காணொலி ஆதாரங்களை வைத்து 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்தநிலையில், மன்னார் நீதிவான் யூட்சன் சிறிலங்கா நீதிச்சேவைகள் ஆணைக்குழுவில் செய்துள்ள முறைப்பாட்டில், கடந்த 17 மற்றும் 18ம் நாள்களில், றிசாத் பதியுதீன் என்று அறிமுகப்படுத்தியவரிடம் இருந்து தனக்கு அச்சுறுத்தல் விடுக்கும் இரண்டு தொலைபேசி அழைப்புகள் வந்ததாக கூறியுள்ளார்.

தனது ஆதரவாளர்களை விடுவிக்காவிட்டால்,எதிர்காலத்தில் மோசமான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்று தாம் மிரட்டப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதன்பின்னர், நீதிச்சேவைகள் ஆணைக்குழுவின் செயலர் மஞ்சுள திலகரட்ணவைச் சந்தித்து மன்னார் நீதிவானை இடமாற்றம் செய்யும் படியும் றிசாத் பதியுதீன் கோரியுள்ளார்.

இதுகுறித்து தகவல் வெளியிட்டுள்ள மஞ்சுள திலகரட்ண, “ அமைச்சர் பதியுதீன் என்னை சந்தித்து நீதிவானை இடமாற்றம் செய்யுமாறு கோரினார்.
இடமாற்றம் செய்வது நீதிச்சேவைகள் ஆணைக்குழுவின் வேலை என்று நான் அந்தக் கோரிக்கையை நிராகரித்து விட்டேன்.” என்று குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளை தான் நீதிமன்றத்தின் மீதான தாக்குதலை நடத்தவோ அல்லது நீதிவானுக்கு தொலைபேசி அழைப்பு விடுக்கவோ இல்லை என்று றிசாத் பதியுதீன் கூறியுள்ளார்.
Share this post :
 
Support : Creating Website | Team Lanka Now | Intelligent
Copyright © 2011. Lanka Now - All Rights Reserved
Template Created by Creating Website Published by Intelligent
Proudly powered by Team lanka Now