இது தொடர்பில் மனோ கணேசன் மேலும் கூறியுள்ளதாவது,
கல்கிசையில் இன்று காலை தாக்குதலுக்கு உள்ளான நீதி சேவைகள் ஆணைக்குழுவின் செயலாளர் மஞ்சுளா திலகரத்ன தனக்கும், தனது குடும்பத்தவர்களுக்கும் பாதுகாப்பு அச்சறுத்தல் இருப்பதாக கடந்த வார இறுதியில் முறைப்பாடு செய்திருந்தார்.
நிறைவேற்று அதிகாரத்துக்கும், நீதித்துறைக்கும் இடையில் ஏற்பட்டுள்ள முரண்பாடுகளை முன்வைத்து நீதித்துறை சார்பாக அவர், கடந்த 18ம் திகதி நீதி சேவைகள் ஆணைக்குழுவின் செயலாளர் என்ற முறையில் வெளியிட்டிருந்த அறிக்கையின் பிறகே இந்த சச்சரவுகள் ஏற்பட்டுள்ளன. இந்த அறிக்கையில் நீதித்துறையை நோக்கி முன்னெடுக்கப்படும் தலையீடுகளை அவர் விமர்சித்திருந்தார்.
இந்த தாக்குதல்களுக்கு அரசாங்கம் முழுமையாக பொறுப்பு ஏற்க வேண்டும். இது தொடர்பில் அரசாங்கம் நடத்தும் எந்த ஒரு நாடகமும் மக்கள் மத்தியில் அரங்கேறாது. ஏனென்றால், அரசாங்கத்தின் ஆசீர்வாதம் இன்றி இத்தகைய தாக்குதல்கள் கொழும்பு பிரதேசத்தில் நடைபெற முடியாது என்பது சிறு குழந்தைக்கும் தெரியும்.
நீதி அமைச்சர் என்ற முறையிலும், சட்டத்தரணி என்ற முறையிலும் அமைச்சர் ரவுப் ஹக்கீம், இந்த பாரதூரமான சம்பவம் தொடர்பில் உடன் ஆளுமையுடன் செயல்படவேண்டும் என நாம் எதிர்பார்க்கின்றோம்.