ஆண்குறியின் முன் தோலை வெட்டும் சுன்னத்துக்கு சட்டபூர்வ அனுமதி. ஜெர்மன் முடிவு.


ஆண்குறியின் முன் தோலை வெட்டிவிடும் வழக்கமான சுன்னத்து சட்டப்பூர்வமானதுதான் என தெளிவாக அறிவிக்கும் புதிய சட்டம் ஒன்றுக்கு ஜெர்மன் அரசு ஒப்புதல் அளித்துள்ளது.முஸ்லிம்களும் யூதர்களும் தமது ஆண் பிள்ளைகளுக்கு செய்வதைப் போல மதக் காரணங்களுக்கென சுன்னத்து செய்வது சட்டவிரோதமான காரியம் என்று கலோன் நகரத்து நீதிமன்றம் ஒன்று கடந்த ஜூனில் தீர்ப்பளித்திருந்தது.

இந்தத் தீர்ப்புக்கு உலகின் பல பாகங்களிலிருந்து யூதக் குழுக்கள் கண்டனம் தெரிவித்திருந்தன.இந்நிலையில் மதக் காரணங்களுக்காக சுன்னத்து செய்வது சட்டப்பூர்வமான ஒரு காரியம்தான் என தெளிவுபடுத்தும் சட்டம் ஒன்றைக் ஜெர்மனியின் அரசு கொண்டுவருகிறது.

மருத்துவ ரீதியில் பயிற்சி பெற்றவர்களே சுன்னத்து செய்ய வேண்டும், சுன்னத்து செய்யும்போதும் செய்த பின்னரும் எழக்கூடிய பிரச்சினைகள் பற்றி பெற்றோர்களுக்கு முழுமையாக அறிவுறுத்தப்பட்டிருக்க வேண்டும் என்பது போன்ற நிபந்தனைகளும் இந்த சட்டத்தில் வரையறுக்கப்படும்.யூத மற்றும் முஸ்லிம் சமூகங்களில் நடந்துவருகின்ற சுன்னத்துகளில் இந்த விஷயங்கள் ஏற்கனவே கடைப்பிடிக்கப்பட்டுவரலாம் என்பதை இந்த சட்டம் அங்கீகரிக்கிறது.

உடல நலத்துக்கு அவசியம் என்றில்லாமல் மதக் காரணங்களுக்காக மட்டும் சுன்னத்து செய்வது ஒரு நபரை துன்புறுதுதும் செயல் என கலோன் நீதிமன்றம் தீர்ப்பளித்தபோது, குறிப்பாக யூத சமூகத் தலைவர்கள், யூத இன அழிப்பு நடந்த ஜெர்மனியில் யூதர்களின் வாழ்க்கை முறை மீதான மேலுமொரு தாக்குதல் இந்த தீர்ப்பு எனக் கூறி கண்டனம் தெரிவித்திருந்தனர்.

ஜெர்மனியில் இந்தச் சட்டம் அமலுக்கு வரும்போது, சுன்னத்து சம்பந்தமான சட்டபூர்வ நிலைப்பாடு தெளிவடையும்.ஆனாலும் யூதர் வெறுப்புணர்வு மீண்டும் தலைதூக்குவதாக யூதர்கள் சிலரிடையே இந்த விவகாரத்தால் எழுந்த உணர்வலைகள் அவ்வளவு சட்டென அடங்கிவிடப்போவதில்லை.
Share this post :
 
Support : Creating Website | Team Lanka Now | Intelligent
Copyright © 2011. Lanka Now - All Rights Reserved
Template Created by Creating Website Published by Intelligent
Proudly powered by Team lanka Now