இலங்கையில் மத சுதந்திரம் பேணப்படும் லட்சனத்தை பாருங்கள்! ராஜகோபுரம் அமைக்கத் தடை!


சிலாபம் முன்னேஸ்வரத்திலுள்ள சிவன் கோவிலுக்கு ராஜகோபுரம் அமைக்க தாம் எடுத்துவரும் முயற்சிகளுக்கு ஜாதிக ஹெல உருமய பௌத்த பிக்குகள் கட்சி தடையாக இருப்பதாக அக்கோயிலின் தர்மகர்த்தாவும் தலைமைப் பூசாரியுமான பத்மநாப குருக்கள் குற்றம்சாட்டியுள்ளார். 

ராஜகோபுரம் அமைப்பதற்காக அனுமதி கேட்டு மாதம்பை பிரதேச செயலகத்திலே கடந்த மே மாதமே தாங்கள் விண்ணப்பித்துவிட்டாலும் இன்றுவரை அனுமதி வழங்கப்படவில்லை என அவர் தெரிவித்துள்ளார். 

ராஜகோபுரம் அமைப்பதற்கான திட்டமிடலில் தாம் ஈடுபட்டபோது, அந்த இடத்தில் சந்தன வட்டக் கல் ஒன்று கிடைத்துள்ளது, இது பௌத்த மத சாயல் கொண்டுள்ளது என்று தொல்லியல் துறையினர் கூறியதாக பூசாரி தெரிவித்தார். 

கோயில் வளாகத்தில் இருக்கின்ற அரச மரம் பௌத்தர்களுக்கு புனிதமான மரம் என்றும் ஆதலால் ராஜகோபுரத்துக்கான அஸ்திவாரத்தை அவ்விடத்தில் அமைக்க முடியாது என அப்பகுதியைச் சேர்ந்த பௌத்த பிக்குகள் திட்டவட்டமாகக் கூறியிருந்ததாகவும் பத்மநாப குருக்கள் குறிப்பிட்டார். 

ராஜகோபுரத்துக்கான அஸ்திவாரப் பணிகள் நடந்த நிலையில், இது பௌத்த தொல்லியல் பகுதி என்று பிக்குமார் கூறிவருவது தமக்கு கலக்கத்தைத் தருவதாக அவர் கூறினார். 

ஹெல உருமய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் மேதானந்த தேரர் இந்தக் கோயில் பகுதிக்கு வந்து பார்த்துவிட்டு, இது பௌத்த புனித பிரதேசம் என்று பத்திரிகைகளுக்கு பேட்டியளித்துவருவது தமக்கு வருத்தம் தருவதாக அவர் குறிப்பிட்டார். 

நல்ல விநாயகர் ஆலயம் அமைந்திருந்த இடம் பிக்குமார் தங்கிய பிரதேசம் என்றும், செட்டிமார் மடம் பௌத்த ஆறாமைகள் என்றும், திருக்குளம் அமைந்திருக்கின்ற இடம் பௌத்த சைத்தியம் அமைந்திருந்த இடம் என்றும் அவர்கள் கருத்துக்களை வெளியிட்டுவருவதாக பத்மநாப குருக்கள் கூறினார். 

பிரதேச சபையின் அனுமதி பெற்றுத்தான் கட்டிடம் கட்ட வேண்டும் என்ற நிலை பௌத்த ஆலயங்களுக்கு இல்லை என்றும் ஆனால் இந்து ஆலயங்களுக்கு அத்தகையதொரு இறுக்கமான நிலை காணப்படுவதாகவும் பூசாரி நொந்துகொண்டார். 

ராஜகோபுரம் பதினொரு தளங்களைக் கொண்டு அமையும் என்று தாங்கள் குறிப்பிட்டிருந்த நிலையில், மூன்று மாடிக் கட்டிடங்கள் வரைதான் பிரதேச சபை அனுமதியளிக்க முடியும், அதனினும் உயரமான கட்டிடங்களுக்கு மாகாண தலைமைப் பொறியாளரின் அனுமதி வேண்டும் என தமக்குத் தெரிவிக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார். 

ராஜகோபுரம் என்பது மக்கள் வாழப்போகும் ஒரு கட்டிடம் அல்ல ஆகவே இந்த விதி கோபுரத்துக்குப் பொருந்தாது என பத்மநாப குருக்கள் சுட்டிக்காட்டினார்.  
Share this post :
 
Support : Creating Website | Team Lanka Now | Intelligent
Copyright © 2011. Lanka Now - All Rights Reserved
Template Created by Creating Website Published by Intelligent
Proudly powered by Team lanka Now