உக்ரைனில் அரசு கொள்கைகளை எதிர்த்து, வீரர்களின் நினைவிடத்தில் உள்ள
ஜோதியில் முட்டை பொரித்த மாணவிக்கு 3 ஆண்டு சிறை தண்டனை
விதிக்கப்பட்டுள்ளது. சோவியத் யூனியனில் இருந்து உக்ரைன் பிரிந்து தனி
நாடானது. இங்குள்ள மக்கள், முதியவர்களின் வாழ்க்கை தரம் உயரவில்லை.
அவர்களுக்கு போதிய பென்ஷன் கிடைக்கவில்லை.
இந்நிலையில், அரசின் கொள்கைகளை கண்டித்து ஹன்னா சின்கோவா என்ற 21 வயது
மாணவி போராட்டம் நடத்தி வருகிறார். தலைநகர் கீவ்வில் உள்ள இரண்டாம் உலக
போரில் உயிர்நீத்த வீரர்களின் நினைவிடத்துக்கு சென்றார். அங்குள்ள ஜோதியில்
முட்டை பொரித்து சாப்பிட்டார். இதையடுத்து அவர் மீது போலீசார் வழக்கு
பதிவு செய்தனர். இதுதொடர்பான வழக்கை விசாரித்த கீவ் கோர்ட், ஹன்னாவுக்கு 3
ஆண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.
இதுகுறித்து ஹன்னா கூறுகையில், போரில் உயிர்நீத்த வீரர்களின்
குடும்பத்தினர், போரில் பங்கேற்று முதுமையில் உள்ள வீரர்களின் நிலை
பரிதாபமாக உள்ளது. அவர்களுக்கு சமைக்க எதுவும் இல்லை, சாப்பிட எதுவும்
இல்லை. இந்த அவல நிலையை மக்கள் அனைவருக்கும் எடுத்து சொல்லவே, நினைவு
ஜோதியில் முட்டை பொரித்தேன். இதே போல் மற்றவர்களும் விரைவில் செய்வார்கள்.
எனக்கு அளிக்கப்பட்ட தீர்ப்பை எதிர்த்து அப்பீல் செய்வேன் என்றார்.