சிறிலங்கா தலைநகர் கொழும்பில் அடுத்த கொமன்வெல்த் தலைவர்களின் உச்சிமாநாட்டை நடத்துவதற்கு எடுக்கப்பட்ட முடிவு தவறானது என்று பிரித்தானிய நாடாளுமன்றத்தின் வெளிவிவகாரக் குழுவின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
கொமன்வெல்த்தின் எதிர்காலம் மற்றும் பங்கு தொடர்பான பிரித்தானிய வெளிவிவகாரக்குழுவின் அறிக்கை ஊடகங்களுக்கு வழங்கப்பட்டது.
இந்த அறிக்கையில், 2013ல் கொமன்வெல்த் உச்சிமாநாடு நடைபெறவுள்ள சிறிலங்காவில் மோசமான மனிதஉரிமைமீறல்கள் தொடர்பான சாட்சியங்கள் உள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இதனால், சிறிலங்காவில் அமைதி, உண்மையை ஆராயும் சுதந்திரமான விசாரணை, மனிதஉரிமைகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் மற்றும் அரசியல் உரிமைகளை உறுதிப்படுத்தும் வரை, கொமன்வெல்த் உச்சிமாநாட்டில் பங்கேற்பதை வெளிப்படையாக நிராகரிக்க வேண்டும் என்று பிரித்தானியப் பிரதமரிடம் வெளிவிவகாரக் குழு கோரியுள்ளது.
சிறிலங்காவில் 26 ஆண்டுகால உள்நாட்டுப் போர் 2009ல் முடிவுக்கு வந்த போதும், நூற்றுக்கணக்கானோர் தொடர்ந்து தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
தன்னிச்சையான, சட்டவிரோத தடுத்துவைப்புகளும், ஆட்கள் பலவந்தமாக காணாமற்போவதும் வழக்கமாக உள்ளன.
உறுப்புநாட்டு அரசாங்கங்களின் அடக்குமுறைகளால் கொமன்வெல்த் அமைப்பின் தார்மீக அதிகாரம் பலவீனப்பட்டு வருவதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
கொமன்வெல்த் அமைப்பு பிரித்தானியாவின் முன்னாள் முடிக்குரிய நாடுகளின் கூட்டமைப்பு என்பதால், பிரித்தானியப் பிரதமர் இந்த மாநாட்டைப் புறக்கணிக்க முடிவு செய்தால், கொழும்பில் இந்த மாநாட்டை நடத்துவதில் சிறிலங்காவுக்கு பெரும் நெருக்கடி ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கொமன்வெல்த் தலைவர்களின் உச்சிமாநாட்டை கொழும்பில் நடத்த முடியாது! பிரித்தானியா கொடுத்துள்ள அதிர்ச்சி!
Labels:
இலங்கை