சீனாவின் அடுத்த அதிபர் மற்றும் பிரதமரின் பெயர் இன்று அறிவிக்கப்பட
உள்ளது. சீன கம்யூனிஸ்ட் கட்சியின் மாநாடு, பீஜிங் நகரில், 8ம்தேதி
துவங்கியது. நாடு முழுவதும் உள்ள, கட்சியின் உயர்மட்ட நிர்வாகிகள், 2,270
பேர், இந்த மாநாட்டில் பங்கேற்றுள்ளனர்.சீனாவின் அடுத்த அதிபர் மற்றும்
பிரதமர் உள்ளிட்டோர் இந்த மாநாட்டில் அறிவிக்கப்பட உள்ளனர்.
கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பெயரும் தயார் செய்யப்பட்டு விட்டது.
மாநாடு, நாளை நிறைவு பெறுகிறது. இதையடுத்து, அடுத்த அதிபர், பிரதமர்
மற்றும் கட்சி நிர்வாகிகளின் பெயர்கள் அறிவிக்கப்பட உள்ளன.
மாநாட்டையொட்டி, இணைய தளங்களின் செயல்பாட்டு திறனை, அந்நாட்டு அரசு
முடக்கியுள்ளது. வெளிநாட்டு பார்வையாளர்களுக்கும், அதிக கெடுபிடிகள்
விதிக்கப்பட்டுள்ளன.
சீன கம்யூனிஸ்ட் கட்சியில், 8.2 கோடி பேர் உறுப்பினர்களாக உள்ளனர்.இன்றைய
மாநாட்டில், மத்திய குழு உறுப்பினர்களின், 371 பேர் வெளியிடப்பட உள்ளது.
புதிய நிர்வாகிகள், 25 பொலீட் பீரோ உறுப்பினர்களையும், ஏழு நிலை குழு
உறுப்பினர்களையும் தேர்வு செய்வார்கள். அதிபர், துணை அதிபர், பிரதமர், துணை
பிரதமர் உள்ளிட்டோர் நிலை குழுவில் இடம் பெற்றுள்ளனர்.
தற்போதைய அதிபர் ஹூ ஜின்டாவோ பதவி காலம் முடிவடைவதால், துணை அதிபர் சி
ஜின்பிங்,59 புதிய அதிபராக அறிவிக்கப்பட உள்ளார். இதே போல, பிரதமர் வென்
ஜியாபோ பதவி காலம் முடிவடைவதால், துணை பிரதமர் லீ கிகுயாங், புதிய பிரதமராக
தேர்வு செய்யப்பட உள்ளார்.